ப்ளே ஸ்டோரில் இடம்பெற்ற ஆபத்தான மூன்று டேட்டிங் செயலிகள் நீக்கம்: ஆப்பிள் & கூகுள் அறிவிப்பு!

இந்தச் செயலிகள் ஆபத்து விளைவிக்கத் தக்க வயது வந்த புதியவர்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எளிதில் அணுகக் கூடிய அளவிலும், ரகசிய சாட்டிங்கில் ஈடுபட்டு அவர்களை மூளைச்சலவை செய்யத்தக்க
ப்ளே ஸ்டோரில் இடம்பெற்ற ஆபத்தான மூன்று டேட்டிங் செயலிகள் நீக்கம்: ஆப்பிள் & கூகுள் அறிவிப்பு!

ஐக்கிய அமெரிக்காவின் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் (FTC) மற்றும் குழந்தைகளுக்கான ஆன்லைன் பிரைவஸி பாதுகாப்புச் சட்டம் இரண்டும் இணைந்து உக்ரைனில் இருந்து இயக்கப்படும் வைல்ட்டெக் எல் எல் சி (Wildec LLC) எனும் நிறுவனம் இயக்கும் டேட்டிங் செயலிகளான Meet24, FastMeet, Meet4U எனும் மூன்று செயலிகளுக்குத் தடை விதித்திருக்கின்றன. இந்த மூன்று டேட்டிங் செயலிகளும் வாஷிங்டன் சிறுவர்களின் பிரைவஸிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியவையாக இருப்பதால் சம்மந்தப்பட்ட அந்த செயலிகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க பெற்றோர் தரப்பில் இருந்து புகார் பறக்க. உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

அதன்படி, குறிப்பிட்ட அந்த மூன்று செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பயனாளர்களின் பிறந்தநாள், மின்னஞ்சல் முகவரிகள், புகைப்படங்கள் மற்றும் எங்கிருந்து இயங்குகிறார்கள் எனும் லொகேஷன் டேட்டாக்களை சேகரித்து வைத்திருக்கும் அந்த மூன்று செயலிகளுமே 13 வயதுக்குக்கு கீழ் இருக்கும் பயனாளர்கள் இத்தகைய செயலிகளைப் பயன்படுத்த தடை விதிக்க மறந்திருக்கிறது. அதனால் டேட்டிங் செயலிகளுக்கான பொதுவான வயது வரம்புத் கட்டுப்பாட்டை மீறிய குற்றம் அதன் மீது பதிவாகியிருக்கிறது.

அத்துடன் இந்தச் செயலிகள் ஆபத்து விளைவிக்கத் தக்க வயது வந்த புதியவர்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எளிதில் அணுகக் கூடிய அளவிலும், ரகசிய சாட்டிங்கில் ஈடுபட்டு அவர்களை மூளைச்சலவை செய்யத்தக்க அளவிலும் துளியும் கட்டுப்பாடுகளே இல்லாத ஆபத்தான இயல்புகள் கொண்டதாகவும் இருந்திருக்கின்றன. இதனால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அந்நியர்களிடம் எளிதில் சிக்கி தங்களது பெயர், முகவரி மற்றும் தனிப்பட்ட தகவல்களை அளித்து, அவர்களால் எளிதில் குழந்தை கடத்தல், பாலியல் பலாத்காரம், போதைக் கடத்தல் உள்ளிட்ட ஆபத்துகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருப்பதால் உடனடியாக அந்த டேட்டிங் செயலிகளுக்குத்தடை விதித்து ப்ளே ஸ்டோர்களில் இருந்து குறிப்பிட்ட அந்த செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டிருப்பதுடன், (COPPA) குழந்தைகளுக்கான ஆன்லைன் பிரைவஸி பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் இரண்டும் இணைந்து பொதுவில் பெற்றோருக்கும் அந்தச் செயலிகளின் ஆபத்தான தன்மை குறித்து ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருக்கின்றன.

இந்தத் தடை வாஷிங்டன் சிறுவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டால் போதுமா? இந்தியாவிலும் இத்தகைய செயலிகள் பல சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனவே அதற்கு தடை விதிப்பது யார்? ஏதாவது மூன்றை மட்டும் லிஸ்ட் செய்யலாம் என்று தேடினால் Tinder, pickable, bumble, coffeemeet bage, MATCH, Plenty, Her என்று டேட்டிங் செயலிகள் கொட்டிக் கிடக்கின்றன இணையத்தில் இது குறித்த அக்கறை நம்மவர்களுக்கும் உண்டா? ஏனெனில் நம்மூரில் சமீக காலங்களில் வயது வரம்புகளின்றி குழந்தைகளையும் விட்டு வைக்காத பாலியல் வன்முறைச் சம்பவங்களின் மூலகாரணமாக இத்தகைய டேட்டிங் செயலிகளும் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் நமக்கு ஏன் இன்னும் வரவில்லை?!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com