செய்திகள்

கார்த்திக்... இந்த இளைஞனின் பாடலுக்கு மயங்காதவர்கள் யார்?

1st Jun 2019 03:46 PM | சரோஜினி

ADVERTISEMENT

 

இசை என்ன செய்யும்?

என்னவெல்லாமோ செய்யும். அதற்கு வரம்புகள் ஏதும் இல்லை.

ஜீ தமிழ் சரிகமப சீனியர்ஸ், இசை நிகழ்ச்சியில் கார்த்திக் என்றொரு இளைஞர், விஸ்வாசம் திரைப்படத்தின் ‘கண்ணான கண்ணே, கண்ணான கண்ணே என் மீது சாய வா’ பாடலைப் பாடுகிறார்.

ADVERTISEMENT

ஆடியன்ஸ் அனைவருக்கும் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கார்த்திக் பாடத்தொடங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் அதைக் கேட்டுக்கொண்டிருந்த பலரது முகங்களிலும் பரவசச் சாயல், சிலர்கண்களைக்கட்டியிருந்த மாஸ்கை கழற்றிக் கடாசி விட்டு அந்த அற்புத இளைஞனைப் பார்த்து நெக்குருகி அமர்ந்திருக்கிறார்கள். பாடிக்கொண்டிருக்கும் போதே மைக் வாயருகில் இருந்து நழுவிச் செல்ல, அருகே ஓடி வரும் கார்த்திக்கின் அம்மா, அந்த இளைஞரின் இலக்கற்ற கரங்களை மீண்டும் வாய்ப்புறத்தில் பிடித்துக் கொள்கிறார்.

ஆம், கார்த்திக் அவரது பெற்றோருக்கு ஸ்பெஷல் சைல்ட்.

மாற்றுத்திறனாளிகள் என்கிறோமே அவர்களில் ஒருவர் தான் கார்த்திக்.

கார்த்திக்குக்கு குட்டி, குட்டியாகத் தான் பேசத் தெரியும். அதாவது லவ் யூ கார்த்திக் என்றால், பதிலுக்கு லவ் யூ டூ என்று பதில் சொல்லத் தெரியும். யாராவது பாராட்டினால் கண்களும், கைகளும் ஒன்றுக்கொன்று ஒத்திசையாமல் வெவ்வேறு திசையில் ஆட குழந்தைத் தனமாக தேங்க்யூ சொல்லத் தெரியும். ஆனாலும், அந்த இளைஞருக்கு இந்த முழுப்பாடலையும் பாட முடிந்திருக்கிறதே அது அதிசயம் தான் இல்லையா? இதை இசையின் பேரதிசயம் என்பதா? அல்லது மாற்றுத்திறனாளி இளைஞரின் சாதனை என்பதா?


 

 

உண்மையில் கார்த்திக் நம் எல்லோரையும் விட வித்யாசமானவராக இருக்கலாம்... ஆனால் ஒரு போதும் நம்மை விட எந்த விதத்தில் குறைந்தவர் அல்ல என்பதை அறிவிக்கத்தான் ஆண்டவன் இந்த இளைஞனுக்குள் இப்படிப்பட்டதொரு திறமையை வைத்திருக்கிறார் போலும்.

கார்த்திக்கைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்ய விஷயம், இது அவரது அம்மாவே நிகழ்ச்சியின் போது பகிர்ந்தது தான்.

‘என் மகன் கார்த்தி, குழந்தையாக இருக்கும் போது , அவன் மற்ற குழந்தைகளைப்போல எல்லாம் பேசத் தொடங்கவே இல்லை. அவன் முதன்முதலில் என்னிடம் பேசவெல்லாம் இல்லை. மாறாக, அம்மா என்று அழைப்பதைப் போல ஒரு பாடலைத் தான் பாடினான். என்கிறார் கார்த்திக்கின் அம்மா.

 

Tags : karthick special child chennai visvasam movie song மாற்றுத்திறனாளி இளைஞர் விஸ்வாசம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT