செய்திகள்

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை!

29th Jul 2019 06:05 PM

ADVERTISEMENT

ஓர் ஊரில் ராஜா ஒருவர் இருந்தார். அவர் சந்நியாசிகளிடம் மிகுந்த மரியாதை செலுத்தி வந்தார்.அந்த ஊரில் புகழ்பெற்ற சந்நியாசி ஒருவர் இருந்தார். அவரை அடிக்கடி சென்று பார்த்து வந்த ராஜா, நாளடைவில் அவரது பக்தரானார்.

ஒரு நாள் சந்நியாசியிடம், 'சுவாமி, எங்களிடம் உள்ளது அனைத்தும் உங்களிடமும் உள்ளது. நீங்களும் சாப்பிடுகிறீர்கள், நாங்களும் சாப்பிடுகிறோம். நீங்களும் உடை உடுத்துகிறீர்கள், நாங்களும் உடை உடுத்துகிறோம். உங்களிடம் பணம் இருக்கிறது, எங்களிடமும் பணம் இருக்கிறது. உங்களுடைய தேவைகள் தானம், தட்சிணை போன்றவற்றாலும், பிச்சை எடுப்பதாலும் பூர்த்தியாகிறது. பிறகு உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?' என்றார்.

'நேரம் வரும்போது இதைப் பற்றி உனக்குக் கூறுகிறேன்'' என்று கூறி, ராஜாவை அனுப்பிவைத்தார் அந்த சந்நியாசி.

ஒரு நாள் ராஜா சந்நியாசியுடன் அமர்ந்திருந்தார். அப்போது ராஜாவின் கையைப் பார்த்த சந்நியாசி மிகுந்த வருத்தமடைந்தார். இதைப் பார்த்த ராஜா, 'எனது கையைப் பார்த்துவிட்டு ஏன் இப்படி ஆனீர்கள்? என்னாயிற்று?' என்றார்.

ADVERTISEMENT

சாது கூறினார்: 'நாளை சூரிய உதயத்திற்கு முன்பு நீ இறந்து விடுவாய். உன் கைரேகை இதைக் கூறுகிறதே... நான் என்ன செய்ய முடியும்?' என்றார்.

இதைக் கேட்ட ராஜா, கவலை நிறைந்த முகத்துடன் அரண்மனைக்குத் திரும்பினார். உடனே தன்னுடைய மந்திரி, ராஜகுமாரன், ராணி ஆகியோரைக் கூப்பிட்டு நடந்ததைச் சொல்லி, அனைவரிடமும் ஜப மாலைகளை எடுத்துக் கொடுத்து, 'என்னுடைய மரணம் நாளை நிகழப் போகிறது. கடவுள் பெயரைச் சொல்வதால் என் மரணம் தள்ளிப் போக வாய்ப்புண்டு. அதனால், இரவு முழுவதும் அரண்மனையில் உள்ளவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்றார்.

அந்த இரவு அனைவருக்கும் துக்ககரமானதாகவே இருந்தது. அனைவரும் பகவான் பெயரைச் சொல்லி ஜபித்துக் கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல காலைப் பொழுது வந்தது. ராஜாவும், அவரது குடும்பத்தாரும், மக்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். காரணம், ராஜா இறக்கவில்லை. உடனே தன் குடும்பத்தாரோடு சந்நியாசியைப் பார்க்கக் கிளம்பினார் ராஜா.

சந்நியாசியின் இருப்பிடத்தை அடைந்து, அவரை வணங்கி, 'சுவாமி! என் வாழ்க்கை தப்பித்தது' என்றார்.

'ஆமாம், தப்பித்துவிட்டதுதான்' என்றார் சந்நியாசி.

'இன்று காலையில் நான் இறந்து விடுவேன் என்று எனது எதிர்காலம் பற்றிக் கூறினீர்களே... உங்கள் வாக்கு என்னவாயிற்று? பொய்த்துப் போய்விட்டதே...' என்று கர்வத்துடன் கேட்டார் ராஜா.

'இரவு முழுவதும் உனது கண்களில் மரணமே நடமாடிக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் நீ அமைதியற்று இருந்தாய். உன்னிடம் எல்லா சுகபோகங்களும் இருந்தாலும் நீ பயந்து கொண்டே நேற்றைய இரவைக் கழித்தாய். ஒரு நாள் என்னிடம், 'உனக்கும் எனக்கும் (பொதுமக்களுக்கு- சந்நியாசிகளுக்கும்) என்ன வேறுபாடு உள்ளது' என்று நீ கேட்டாயே ஞாபகம் இருக்கிறதா? அதற்குப் பதில் இதுதான். உனக்கும் எனக்கும் இதுதான் வித்தியாசம்! நீ மரணத்தை மறந்துவிட்டு வாழ்கிறாய்; நான் மரணத்தை நினைத்துக் கொண்டு வாழ்கிறேன். எவன் முடிவை முன்னால் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறானோ, அவன்தான் சந்நியாசி' என்றார்.

சந்நியாசி கூறியதைக் கேட்ட ராஜா தலைகுனிந்தார். சந்நியாசிக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு புரிந்து கொண்டார்.

 தமிழில்: இடைமருதூர் கி.மஞ்சுளா
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT