செய்திகள்

'உணர்ச்சிகளை வெளிப்படுத்த தாய்மொழியே சிறந்தது'

25th Dec 2019 12:46 PM

ADVERTISEMENT

 

நமது உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்துவதில் மொழிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் மொழிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன. உதாரணமாக 'காதல்'(Love) என்பது ஒருவகை உணர்ச்சி. ஆனால், துருக்கிய வார்த்தையான 'செவ்கி' அல்லது ஹங்கேரிய வார்த்தையான 'ஸ்ஸ்ரெலெம்' என காதல் பொருள்படும் வார்த்தைகள் அதே உணர்வை வெளிப்படுத்துதில்லை. இது மற்ற அனைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கும் பொருந்துகிறது. ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று அவை வெவ்வேறு மாறுபட்ட அளவிலே அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றன.

பூமியில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள மொழிகள் மற்றும் அவர்களது கலாச்சாரங்கள் குறித்து ஆய்வு செய்ததில், அவர்களது கலாச்சாரத்திற்கேற்ப உணர்ச்சிகளின் வெளிப்பாடு அந்தந்த மொழிகளில் வேறுபடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ADVERTISEMENT

அதன்படி, பல மொழிகள் தெரிந்திருந்தாலும் அவரவர் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த தாய்மொழியிலே சிறப்பான சொற்கள் உள்ளன. முக்கியமாக, காதல் அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த தாய்மொழிகளே பெரிதும் உதவுகின்றன. அதேபோன்று ஒரு சில தாய்மொழிச் சொற்களுக்கு சரியான, இணையான ஆங்கில வார்த்தைகள் இல்லை. எடுத்துக்காட்டாக, இல்லாத அல்லது இழந்த ஏதோவொன்றின் ஏக்கத்தால் ஏற்படும் ஆழ்ந்த மனச்சோர்வை குறிக்கும் போர்ச்சுக்கீசிய சொல் 'சவுடே', ஆங்கிலத்தில் இதற்கு இணையான வார்த்தை இல்லை. 

இவ்வாறு, உணர்ச்சிகள் மனித நிலையை வரையறுக்கும் அம்சமாக இருக்கும்போது, ​​அவற்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொற்களின் பொருளானது நுணுக்கமாக இருக்க வேண்டும். 

இதுகுறித்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜோசுவா ஜாக்சன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள்,  'கோலெக்ஸிஃபிகேஷன்' என்ற முறையைப் பயன்படுத்தி மொழிகளில் ஒரு உணர்ச்சிக்கு சொற்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த புதிய ஒப்பீட்டு முறை, ஒரு சொல்லின் பொருளில் உள்ள மாறுபாட்டையும் கட்டமைப்பையும் அளவிடும். மொத்தம் 2,474 மொழிகளில் இருந்து பல்வேறு விதமான வார்த்தைகளை ஒப்பிட்டு பார்த்து தாய்மொழிகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று சில வார்த்தைகள் நேர்மறையான வார்த்தைகளா அல்லது எதிர்மறையான வார்த்தைகளா என்பதை அந்தந்த இடத்தின் புவியியல் அமைப்பை பொறுத்தே கணிக்க முடியும் என்று கூறுகின்றனர். 

Tags : Languages
ADVERTISEMENT
ADVERTISEMENT