அயோகாவுக்கு என்ன நேர்ந்தது? சுவாரஸ்யமான நாடோடிக் கதை

அயோகா அந்த ஊரில் அழகானவள். அதனால் தான், தான் அழகி என்ற தற்பொருமை கொண்டு விளங்கிளாள்.
அயோகாவுக்கு என்ன நேர்ந்தது? சுவாரஸ்யமான நாடோடிக் கதை

அயோகா அந்த ஊரில் அழகானவள். அதனால் தான், தான் அழகி என்ற தற்பெருமை கொண்டு விளங்கிளாள்.

சோம்பேறிப் பெண்ணாக மாறிவிட்டாள் அவள். தன் அழகைக் கண்டு ரசிப்பதிலேயே பொழுதைப் போக்கினாள்.

ஒரு நாள் அயோகாவின் தாய் அவளை அழைத்து "மகளே நீ போய் தண்ணீர் இறைத்துக் கொண்டு வா'' என்று சொன்னாள்.

"என்னால் முடியாது. நான் தண்ணீரில் விழுந்து விடுவேன்'' என்றாள் அயோகா.

"அருகிலுள்ள மரத்தைப் பிடித்துக் கொள்'' என்றாள் அம்மா.

"அது திடீரென்று ஒடிந்து போகும்'' - அயோகா

 "உறுதியான கிளையாகப் பற்றிக்கொள்'' -அம்மா

 "கையில் காயம் பட்டுவிடும்'' -அயோகா

 "கையுறைகள் அணிந்து கொள்'' -அம்மா

"அவை கிழிந்து போய்விடும் '' என பித்தளைப் பாத்திரத்தில் தன் அழகைப் பார்த்து ரசித்தபடியே அயோகா கூறினாள்.

"ஊசி நூல் கொண்டு தைத்துக்கொள்''- அம்மா

"ஊசியும் ஒடிந்து போகும்''-அயோகா

"கெட்டியான ஊசியை எடுத்துக்கொள்''- அம்மா

"அது விரலைக் குத்திவிடும்''-அயோகா

இந்த உரையாடலை அண்டை வீட்டுப் பெண்ணான மயோ கேட்டுக் கொண்டிருந்தாள்.

"நானே போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்'' அம்மா என்று சொல்லி விரைவில் தண்ணீருடன் திரும்பினாள் மயோ.

அயோகாவின் தாய் மாவு பிசைந்து பணியாரம் சுட்டாள். கமகமவென்று மணம் வீசியது. பணியாரங்களைப் பார்த்ததும் "அம்மா எனக்கு பணியாரம் கொடு' என்று கேட்டாள் அயோகா.

"சூடாக இருக்கிறது. கை சுட்டு விடும்'' - அம்மா

"கையுறைகளைப் போட்டுக் கொள்கிறேன்''- அயோகா

"அவைகள் ஈரமாக இருக்குமே''- அம்மா

"வெயிலில் காய வைத்துக் கொள்வேன்''- அயோகா

"உறைகள் நைந்து போய்விடும்''- அம்மா
 "நான் சரி செய்து கொள்ளுவேன்''- அயோகா

"உன் கைகள் காயமாகிவிடும். நீ ஏன் அலட்டிக் கொண்டு உன் அழகைக் கெடுத்துக் கொள்கிறாய்? உடல் வலிக்க தண்ணீர்ப் பானை சுமந்த மயோவிற்குதான் நான் பணியாரம் கொடுக்கப் போகிறேன்'' என்றாள் அம்மா. அவ்வாறே மயோவிற்கு பணியாரம் தந்தாள்.

இதைக் கண்டு அயோகாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அருகிலிருந்த ஆற்றை நோக்கி விரைந்தாள். அங்கிருந்த மயோ பணியாரம் உண்பதை நோட்டமிட்ட படியே நின்று கொண்டிருந்தாள் அயோகா. அப்போது அவள் கழுத்து சிறிது சிறிதாக நீண்டு கொண்டே வந்தது.

மயோ, அயோகாவிடம் "இந்தா நீயும் சிறிது பணியாரம் சாப்பிடு' என்றாள்.

இதைக் கேட்டதும் அயோகாவுக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. "உஸ்' என்று சப்தம் எழுப்பத் தொடங்கினாள். விரல்களை அகல விரித்து கைகளைப் பலமாக ஆட்டிய போது அவை சிறகுகளாக மாறிவிட்டன.

"உன்னிடமிருந்து எனக்கு எதுவுமே வேண்டியதில்லை' என்று கூச்சலிட்டாள் அயோகா.

பிறகு ஆத்திரத்தில் அவள் தண்ணீருக்குள் குதித்து வாத்தாக மாறிவிட்டாள்.

நான் எத்தனை அழகானவள் தவாக், தவாக்! என்று கூவியபடியே நீரில் நீந்தத் தொடங்கினாள்.

தாய்மொழி அறவே அவளுக்கு மறந்து போகும் வரையில் அயோகா நீந்திக் கொண்டே இருந்தாள். அந்த மொழியில் எல்லா வார்த்தைகளும் அவளுக்கு மறந்து போய்விட்டன.

அவளுடைய பெயர் மட்டும் தான் அவளுக்கு நினைவில் இருந்தது. இப்போதும் யாரையாவது பார்க்க நேர்ந்தால் அயோகா.. அயோகா என்று கூச்சலிடுகிறாள்.
 - நெ.இராமன், சென்னை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com