சென்னையில் திருவையாறு! ஒரு கலாச்சாரத் திருவிழா!!!

மார்கழி மாத இசை விழாக்களில் தனித்துவமான அடையாளம் பெற்று சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும்  
சென்னையில் திருவையாறு! ஒரு கலாச்சாரத் திருவிழா!!!

"சென்னையில் திருவையாறு” பருவம் 14

மார்கழி மாத இசை விழாக்களில் தனித்துவமான அடையாளம் பெற்று சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக விளங்குகிறது.

மனம் மகிழ்ச்சியடைவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், தெய்வ வழிபாட்டுக்கும், தேச பக்திக்கும், கொள்கை முழக்கத்துக்கும், மக்களின் மனங்களை இணைப்பதற்கும் ஒரு பாலமாகவே இசை பயன்பட்டு வருகிறது. அந்த இசையைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அயராது பாடுபடும் இசைக் கலைஞர்களை கெளரவிக்கவும், அப்பணியை சிறப்புடன் செய்யும் பெரியோர்களை பெருமைப்படுத்தவும் ஒரு மிகச் சிறந்த மேடையை "சென்னையில் திருவையாறு” சங்கீத நாட்டிய விழா அமைத்துத் தந்திருக்கிறது.

அதனால் தான், ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடந்து வேடந்தாங்கலை முற்றுகையிடும் பறவைகளைப் போல, இசை ரசிகர்களும் மார்கழி மாதத்தில் சென்னையை நோக்கிக் குவிந்து வருகிறார்கள். உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து மகிழ்வதுடன் இந்த தெய்வீக அனுபவத்தையும் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் குடும்பம் குடும்பமாக நம் தேசத்திற்கு வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடக இசை என்றால் அது நமக்கில்லை என காததூரம் சென்ற காலம் மலையேறி, இன்று வீட்டுக்கு வீடு தங்கள் குழந்தைகளை சாஸ்திரீய சங்கீதப் பயிற்சியில் சேர்த்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இல்லங்கள்தோறும் ஏதாவதொரு இசைக் கருவியை அலங்கார கலைப் பொருளாய் வைப்பதைப் பெருமையாக நினைக்கத் தொடங்கும் அளவுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பட்டி தொட்டியெல்லாம் பிரம்மாண்ட சுவரொட்டி விளம்பரங்களில் கர்நாடக சங்கீதக் கலைஞர்களின் படங்கள் புன்னகைப்பதை இன்று பார்க்க முடிகிறது.

நமது பாரம்பரிய இசை, நடனம், தெய்வீகப் பிரசங்க மரபுகள் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து, இந்த அற்புதமான கலை வடிவங்கள் கொஞ்சம், கொஞ்சமாக மங்கி வழக்கொழிந்து போய்விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் தான், புது ரத்தமாய் புத்தொளியாய் வந்து, பெரும் இசைப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன இந்நிகழ்ச்சிகள்.

இசை மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும் அது இரண்டறக் கலந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் எத்தனை வகை. இருந்தாலும்… நாடு, இனம், மொழி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து ஒருங்கிணைக்கும் சக்தி கொண்டதாக அது விளங்குகிறது.

மழையைத் தருவிக்கவும், நோய் தீர்க்கும் அருமருந்தாக அமையவும் இசையால் முடியும் என்பது வெறும் வார்த்தை ஜாலமல்ல, சத்தியமான சாத்தியமான உண்மை என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தொன்மையான நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும், கலைகளிலும் உலகத்திற்கே முன்னோடியான நமது இந்திய தேசத்தில் எண்ணற்ற அரிய கலைகள் தோன்றி மக்களை மகிழ்வித்து சென்றிருக்கின்றன. அவ்வாறாக தோன்றிய அருங்கலைகளில் இன்றும் உயிர்ப்போடு காண்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்துகின்ற ஒன்று என்று சொன்னால்  தென்னிந்தியாவின் "கர்நாடக சங்கீதம்" என்பதை யாரும் மறுக்க  இயலாது.

அவ்வரிய கலைகளில் முக்கியமானதும் முதன்மையானதுமான கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில், புதிய பரிமாணத்தில் கடந்த பதிமூன்று வருடங்களாக "சென்னையில் திருவையாறு" என்கிற விழா "லஷ்மன் ஸ்ருதி இசையகம்" (Lakshman Sruthi Musicals) சார்பாக வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, இசைத்துறையில் வித்வத்தன்மை கொண்டோரையும், வித்தியாசமான ரசிப்புத்தன்மை கொண்டோரையும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும், அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும்  தேர்வுக்குழுவாய் அமைத்து,  எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான் "சென்னையில் திருவையாறு" விழா!

எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொடங்குவது சுலபம், அதைத் தொடர்வது சிரமம். அதிலும் வெற்றிகரமாக 13 ஆண்டுகளை நிறைவு செய்து, சிறிதும் தொய்வின்றி 14 வது ஆண்டில் அடி வைத்திருப்பது மிகப் பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை. சகாப்த சாதனை மைல்கல்களை கடந்து உற்சாகமாக பயணிக்கிறது ”சென்னையில் திருவையாறு” என்ற இந்த சங்கீத நாட்டிய விழா.

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில்  நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் "சென்னையில் திருவையாறு" இசை விழா திகழ்கின்றது.

இந்த ஆண்டு இந்த இசைவிழாவிற்கு வயது பதினான்கு.

இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ”எஸ்.ஜெயராமன்” அவர்களின் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

“ஸ்ரீ தியாகராஜர்”

“எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான  தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்கார் தியாகராஜர். எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள். இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார்.  இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ  ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது.

எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி அயல்நாட்டவரும் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் லஷ்மன் ஸ்ருதியின் சார்பாக உங்கள் பேராதரவுடன் சென்னையில்-திருவையாறு என்ற வடிவத்தில் பதினான்காவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.

மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும்  நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.

பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”

சென்னையில் திருவையாறு” துவக்க நாளான  டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாபோல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியர், ஸ்ரீஅனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு சிறப்பு சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் காண்பதற்கரிய வைபவமாக துவங்குகிறது.

ஒரே மேடையில் ஐநூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.

இந்நிகழ்வில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம், விழா துவங்கும் முன் வழங்கப்படும். பஞ்சரத்ன கீர்த்தனைகளை துல்லியமாக பாடும் குரல்வளம் பெற்றோரையும், இசைக்கும் திறமை பெற்றோரையும் இதில் கலந்து கொண்டு பாடுவதற்கு அன்போடு அழைக்கின்றோம்.

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் “சென்னையில் திருவையாறு” துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கேட்டு இறைவனருள் பெற வேண்டுகிறோம். இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம் ! அனைவரும் வருக !

சென்னையில் திருவையாறு துவக்க விழா

பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் வைபவம் நிறைவுற்றதும் சரியாக மாலை 4.45 மணிக்கு "சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெறும்.

14 ஆம் ஆண்டு துவக்க விழாவை மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்கிறார்.

இசை ஆழ்வார் விருது

துவக்க விழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் ”சென்னையில் திருவையாறு” அமைப்பின் சார்பாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் தலைசிறந்த சாதனைக்கலைஞர் ஒருவருக்கு அவரது கலையுலக வாழ்நாள் சேவையையும் சாதனையையும் பாராட்டும் விதமாக  "இசை ஆழ்வார்" என்ற கெளரவ விருதை தங்கப்பதக்கத்துடன் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

தவில் இசை என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் மங்கள இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. தவில் இசையில் சாதனைகள் பல செய்தவரும், இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் இசைக் கலைஞர்களுடன் இணைந்து 'ஒருங்கிணைந்த வாத்திய இசை' நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ள "பத்மஸ்ரீ ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்” அவர்களின் இசைச்சேவையைப் பாராட்டும் முகமாக "இசை ஆழ்வார்" பட்டம்  வழங்கி கெளரவம் செய்யப்பட உள்ளது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் திருவுருவ மெழுகுச்சிலை

சென்னையில் திருவையாறு துவக்கவிழாவில் தனது மெல்லிசையால் நம் அனைவரது உள்ளங்களையும் ஆட்கொண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை கெளரவிக்கும் வகையில் லண்டன் வேக்ஸ் மியூசியத்தில் உள்ளதைப்போல் தத்ரூபமான மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது. ”பத்மபூஷண் அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி” அவர்கள் அன்னாரது சிலையை திறந்து வைக்கிறார்

உலகத் தரம் வாய்ந்த சிற்பக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் இந்த மெழுகுச்சிலை பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வியப்பில் ஆழ்த்த உள்ளது.

வளரும் இளம் கலைஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் இசையுலகில் இன்று நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் பிரபலங்களும் தங்களின் மானசீக குருவாக போற்றி வணங்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திருவுருவ மெழுகுச் சிலையுடன் பொதுமக்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள காமராஜர் அரங்கின் நுழைவு மண்டபத்தில் வசதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் "பாரத ரத்னா” ஏ.பி.ஜே.அப்துல்கலாம், "பாரத ரத்னா" எம்.எஸ்.சுப்புலட்சுமி, "பாரத ரத்னா" எம்.ஜி.ஆர் மற்றும் ”பத்மவிபூஷண்” டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு  ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

துவக்க விழாவினைத் தொடர்ந்து  மாலை 6.00 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் சுதா ராஜா, பியானோ அனில் ஸ்ரீனிவாசன், புல்லாங்குழல் சஷாங் குழவினரின் இசை நிகழ்ச்சியோடு ''சென்னையில் திருவையாறுஇசை நிகழ்வுகள் துவங்குகின்றன.

தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு  நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் வாய்ப்பாட்டிசையுடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com