கடவுளருக்குப் பிடித்த உணவுகள்!

கடவுள்களுக்குப் பிடித்த உணவு என்றால் அது நாம் அவர்கள் மேல் கொண்டிருக்கும் பூரண பக்தியாகவே இருக்கலாம். இந்த பக்தியை அருந்தி, அருந்தியே அவர்களது சக்தி கூடுகிறதோ என்னவோ?! ஆயினும் மனிதர்களான நாம் நமக்குள்
கடவுளருக்குப் பிடித்த உணவுகள்!

நேற்று விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்து படைத்தோம். விதம் விதமான கொழுக்கட்டைகள். பூரணம் சேர்த்து, தேங்காய் துருவிப் பிசிறி விட்டு, காரக் கொழுக்கட்டை என்று வெரைட்டியாகச் செய்தோம். ஆனால், பெரும்பாலும் பெரியவர்களே சாப்பிட்டுக் கொண்டிருந்தோமே தவிர பிள்ளைகள் அப்போதும் ம்மா, இன்னைக்கு ஃபெஸ்டிவல் ஆஃபரா வெஜ் பீட்ஸா ஆர்டர் பண்ணுங்களேன்! என்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ச்சே... நாளும், கிழமையுமா வீட்ல பீட்ஸாவா! நோ சான்ஸ், இன்னைக்கு இந்தக் கொழுக்கட்டை சாப்பிட்டா தான் விநாயகர் அருள் பரிபூரணமா கிடைக்குமாக்கும். இல்லனா பிள்ளையார் கோவிச்சுப்பார். என்றேன். சின்னவள் நம்பினாள், பெரியவளுக்கு நம்பிக்கை பூரணமாகவில்லை. அவளுக்காக கொஞ்சம் தேடிக் கண்டுபிடித்து கண்ணில் பட்ட கடவுள்களுக்கெல்லாம் பிடித்த உணவு... ஐ மீன் ஃபேவரிட் ஃபுட் என்ன என்று கண்டுபிடித்தோம். பிறகு அவளும் கூட குத்துமதிப்பாக நம்பத் தொடங்கினாள். ஒருவழியாக செய்து வைத்த விதம் விதமான கொழுக்கட்டைகள் தீர்ந்தன. 

கடவுள்களுக்குப் பிடித்த உணவு என்றால் அது நாம் அவர்கள் மேல் கொண்டிருக்கும் பூரண பக்தியாகவே இருக்கலாம். இந்த பக்தியை அருந்தி, அருந்தியே அவர்களது சக்தி கூடுகிறதோ என்னவோ?! ஆயினும் மனிதர்களான நாம் நமக்குள் சில நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நமக்குப் பிடித்த கடவுளருக்கு இன்னின்ன உணவுகள் தான் பிடித்தமானவை என்று. உண்மையில் கடவுளருக்கு அது தான் பிடிக்குமோ என்னவோ? ஆனால், நம் குழந்தைகளை சத்தான ஆகாரங்களுக்குப் பழக்க நாம் ஏன் இதை ஒரு உபாயமாக்கிக் கொள்ளக் கூடாது?! எந்நேரமும் கடைகளில் விற்கப்படும் அசைவ உணவுகளுக்கும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கும் அடிமையாகிக் கிடக்கும் குழந்தைகளை மீட்க தெய்வ நம்பிக்கையை உணவு விஷயத்திலும் அழுத்தமாகப் பதிய வைக்கலாமே!

முயற்சித்துப் பாருங்கள். முடிந்தால் நல்லது.

முதலில் காளை வாகனரான எம்பெருமான் மகாதேவரில் தொடங்கலாம்.

  1. சிவன்: பாலில் குங்குமப்பூ சேர்த்துப் படைத்தால் எம்பெருமானின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
  2. விஷ்ணு: விஷ்ணுவுக்குப் பிடித்த உணவு என்று தனியாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், மஞ்சள் நிறத்தில் இருக்கும் நைவேத்திய உணவென்றால் மகாவிஷ்ணுவுக்கு இஷ்டம் என்பது ஐதீகம். மஞ்சள் நிற சர்க்கரைப் பொங்கல், லட்டு.
  3. கண்ணன்: கிருஷ்ணாவதாரக் கண்ணனுக்கு வெண்ணெயும், அவலும் என்றால் ப்ரியம் என்று சொல்கிறது குசேலர் கதை.
  4. சரஸ்வதி: கல்விக்கு அதிபதியான சாரதாம்பிகைக்கு வெண்பொங்கல் என்றால் ப்ரியம். 
  5. கணபதி: பிள்ளையாருக்கு லட்டும், மோதகமும் (கொழுக்கட்டை) அத்தனை பிடிக்கும். நேற்று விநாயகர் சதுர்த்தி இல்லையா... விதம் விதமான மோதகங்களில் நீந்திக் களித்திருப்பார் கணபதியார்.
  6. முருகன்: குமரக் கடவுளுக்கு மாம்பழங்களும், வாழைப்பழங்களும் ரொம்ப இஷ்டம் என்கிறார்கள் சிலர். பொதுவாகப் பழங்களும் வெல்லமும் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், தமிழ்நாட்டில் பழனி முருகனுக்குப் பஞ்சாமிர்தம் செய்து படைக்கிறார்கள்.
  7. மகாலஷ்மி: செல்வத்துக்கு அதிபதியான மகாலஷ்மிக்கு அரிசிப் பாயசம் என்றால் இஷ்டம். பாயசம் மட்டுமல்ல அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்து இனிப்பு வகைகளும் அவளுக்கு இஷ்டமே!
  8. துர்கை: துர்கைக்கும் பாயசமும் காய்கறி உணவும் ரொம்பப் பிடிக்கும்.
  9. ஐயப்பன்: மணிகண்டனான ஹரிஹரனுக்கு அரவணப் பாயசம் என்றால் இஷ்டம்.
  10. ஹனுமன்: சிவப்பு நிறத் துவரம் பருப்புடன் வெல்லம் சேர்த்துச் செய்கிற பண்டங்கள் ஹனுமனுக்கு ரொம்ப இஷ்டம்.
  11. அம்மன்: மாரியம்மன், பாளையத்தம்மன், கெளமாரியம்மன், கருமாரியம்மன், காளியம்மன் என தமிழகத்து அத்தனை அம்மன்களுக்கும் ஆடிக்கூழ் அத்தனை இஷ்டம் என்று நம் எல்லோருக்குமே தெரியும்.
  12. சனி, ராகு, கேது: மூவருமே அரைத் தெய்வ, அரை அசுர ரூபங்கள் என்பதால் இவர்களுக்கு கருப்பு நிற உணவுப் பொருட்களான கடுகு, கருப்பு எள்ளில் செய்த உணவுகள் ரொம்பப் பிடிக்குமாம்.
  13. குபேரன்: சாட்ஷாத் அந்த திருமலை வெங்கடேஷன் பெருமாளுக்கே கடன் கொடுத்து உதவும் அளவுக்கு செல்வாக்கு மிக்க தனவந்தக் கடவுளான குபேரனின் அருள் பெற வேண்டுமெனில் லட்டு மற்றும் சீதாப்பழ பாயசம் படைத்து அவனை வணங்கலாம்.

இவ்வளவு தான் கண்டுபிடிக்க முடிந்தது. கட்டுரையை வாசிப்பவர்கள் கடவுளருக்குப் பிடித்த உணவுகள் விஷயத்தில் உங்களுக்குத் தெரிந்த ஐதீக நம்பிக்கைகளைப் பகிருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com