ரசிக்க... ருசிக்க...

பால்கோவாவும், தூத்பேடாவும் ஒன்றா?!

7th May 2019 04:19 PM | கார்த்திகா வாசுதேவன்

ADVERTISEMENT

 

சொல்லும் போதே வாய் மட்டுமல்ல உள்ளமும் கூட தித்திக்கிறது தானே? இந்தப் பண்டத்தின் பெயர் ரொம்பப் பிடிக்கும். ஆனால், இதைப் பற்றிக் கேள்விப்பட்டதென்னவோ அனுராதா ரமணனின் நாவலொன்றின் வாயிலாகத்தான். அதில் வரும் நாயகி, அவளொரு தொடர்கதை கவிதா போல (சுஜாதா) குடும்பத்துக்காக உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பார். ஆனால், குடும்பத்தின் பிற உறுப்பினர்களில் யாருக்குமே குடும்பப் பொறுப்பே இருக்காது. தான் தோன்றித் தனமாக இஷ்டத்துக்கும் அந்தப் பெண்ணை கஷ்டப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவளும் உள்ளுக்குள் நொந்து நூடுல்ஸாகி அப்பா வயதிலாவது ஒரு மாப்பிள்ளை வந்து தன்னை இந்தக் குடும்பத் தளைகளில் இருந்து விடுவிக்க வந்து விட மாட்டானா? என்று மனம் குன்றிப் போய் காத்துக் கொண்டிருப்பாள். நாவலை வாசிக்கும் போது அந்தப் பெண்ணின் மீது பயங்கரக் கோபம் மூண்டது வாஸ்தவம். 

என்ன பெண் இவள்? இந்தப் பொறுப்பு கெட்ட கழுதைகளுக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறாளே!

ஒரு கட்டம் வரை பொறுத்துப் போனதெல்லாம் சரி தான். வாழ்ந்து கெட்ட குடும்பம், ஏதோ அப்பாவின் போறாத காலம், அம்மாவின் சிக்கனமின்மை எல்லாமும் சேர்ந்து குடும்பம் உருப்படியில்லாமல் போய்விட்டது. அதற்காக கடைக்குட்டிப் பெண் பாரம் சுமக்க வேண்டும் என்று என்ன தலையெழுத்து? அத்துடன் அந்த நாவலில் தாய்மாமன் கதாபாத்திரம் ஒன்று வரும். தரங்கெட்ட மாமன் அவன், சுயநலப்பிசாசு. இந்தப் பெண்ணிடம் வேண்டுமட்டும் வேலை வாங்கிக் கொண்டு அக்கா மகளை தன் வியாபார விருத்திக்காக கண்டவனுக்கும் கம்பெனி கொடுக்கச் செய்து அவளுக்கு வாழ்க்கையின் மீதிருக்கும் கொஞ்ச நஞ்ச பற்றுதலையும் ஒழித்துக் கட்டியவன் அவனே! அடடா.... இதென்ன நான் முழுக்கதையையும் சொல்லத் தொடங்கி விட்டேனா?!

ADVERTISEMENT

அந்த நாவலின் பெயர் ’நாளை வருவான் நாயகன்’ புத்தகம் அனைத்து லைப்ரரிகளிலும் நிச்சயம் கிடைக்கும். முடிந்தால் எடுத்துப் போயோ அல்லது இணையத்தில் தரவிறக்கியோ வாசித்துப் பாருங்கள். நீங்கள் குடும்ப நாவல் வாசகர்கள் என்றால் நிச்சயம் இந்தக் கதையில் நீங்கள் மூழ்கிப் போவீர்கள். 

அதெல்லாம் சரி... ஆனால், தூத்பேடாவைப் பற்றித் தொடங்கி விட்டு இதென்ன சம்பந்தா, சம்பந்தமில்லாமல் எதையோ கிளறிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்து விட வேண்டாம்.

தூத்பேடா என்றால், வெறுமே தூத்பேடாவோடு முடிந்து விட்டால் அப்புறம் அதிலென்ன சுவாரஸ்யமிருக்க முடியும்.

தூத்பேடாவை வீட்டில் செய்து சாப்பிட வேண்டுமென்றால் அங்கேயும் மனைவி, அம்மா என்று ஒரு பெண்ணைக் கஷ்டப்படுத்தாமல் ஆகிற காரியமா அது?

இந்த தூத்பேடா ரெசிப்பியின் மகிமையைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பால்: 10 லிட்டர்
சர்க்கரை: 2 1/2 கிலோ கிராம்
நெய்: அரை கிலோ கிராம்
தேங்காய்ப்பூ அல்லது குங்குமப்பூ: கொஞ்சம்( அலங்கரிக்கத் தேவையான அளவு)

செய்முறை:

உற்றார், உறவினர், சுற்றத்தார் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்து பிறகு உங்களது வீட்டாருக்கும் ருசிக்க தூத்பேடா கிடைக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 10 லிட்டர் தூய பால் வேண்டும். அந்தப்பாலையும் மொத்தமாக ஒரே பாத்திரத்தில் காய்ச்சிப் பொங்கி வடிய விடாமல், பக்குவமாக இரண்டு பெரிய கடாய்களில் தனித்தனியாக 5, 5 லிட்டர் என்று காய்ச்ச வேண்டும். காய்ச்சுவது என்றால் வீட்டில் காப்பிக்காக பால் காய வைப்பது போல அல்ல. இரண்டு கடாய் பாலையும் 2 1/2 கிலோ சர்க்கரை சேர்த்து சும்மா கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் சுண்டக் காய்ந்து சற்றுக் கெட்டிப்பட்டு வரும் போது 1/2 லிட்டர் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கையெடுக்காமல் கிளற வேண்டும். ஒரு வழியாக முழுதாக 1 அல்லது 1 1/2 மணி நேரம் பிடிக்கலாம். தூத்பேடா கடைப்பக்குவத்தில் கெட்டியாக. அந்தப் பக்குவம் வந்ததும் கடாய்களை இறக்கி ஆற விட வேண்டும். கலவை கை பொறுக்கும் சூட்டுக்கு வந்த உடன் உள்ளங்கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு  அவற்றைக் குட்டி குட்டிப் பந்துக்களாக உருட்டி பாதுஷா ஷேப்பில் நடுவில் அழுத்தி வட்ட வட்டமாகத் தட்டி நடுக்குழியில் ஒன்றிரண்டு நிறமூட்டப்பட்ட தேங்காய்ப் பிசிறுகளையோ அல்லது குங்குமப் பூக்களையோ வைத்து அலங்கரித்து பரிமாறத் தொடங்கி விடலாம். 

இந்த தூத்பேடாவில் அதி முக்கியமான ஒரே விஷயம் கையெடுக்காமல் கிளறுவது மட்டுமே. கிளறும் போது சற்றே சோம்பேறித்தனப்பட்டு கிளற மறந்தீர்கள் என்றால் அவ்வளவு தான் தூத்பேடாவுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் அருமையான க்ரீம் நிறம் கிடைக்கவே கிடைக்காது. அப்படியே பால் கெட்டிப்பட்டு அசட்டு மஞ்சள் நிறம் வந்து விடும். இது பலருக்கு அத்தனை பிடிப்பதில்லை. தூத்பேடா உருட்டி முடிக்கும் போது அப்படியே அதன் நிறம் பாற்கடலில் பொங்கி வரும் பால் வெண்மைக்கும், வெளிர் மஞ்சளுக்கும் இடைப்பட்டு நிற்கும் நிகு நிகுவென்ற தெய்வீகமான அரை வெண்மை நிறமாக இருக்க வேண்டும். அது தான் பக்குவம்.

அட இது நம்மூர் பால்கோவா ரெசிப்பியாச்சே! இதையா இவ்வளவு நேரம் தூத்பேடா என்று விளக்கு விளக்கு என்று விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று முறைக்காதீர்கள்.

பால்கோவாவும், தூத்பேடாவும் ஒன்று தான் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் யுவர் ஹானர்?!

அலுவலக மக்களைக் கேட்டால் இரண்டும் ஒன்று போலத்தான் இருக்கிறது. ஆனால் செய்முறையில் சர்க்கரை சேர்க்கும் பக்குவத்தில் தான் இரண்டுக்கும் இடையில் கொஞ்சமே கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது என்று திகட்டலாகச் சொல்கிறார்கள். சரி பால்கோவாவானாலும், தூத்பேடாவானாலும் திகட்டக் கூடிய சமாச்சாரம் தானே என்று அதைப் புறம் தள்ளி விடலாம்.

தமிழர்களுக்கு இது பால்கோவா, வட இந்தியர்களுக்கு இது தூத்பேடா. என்று ஒரு சமரசநிலைக்கு வந்துவிட்டு பிறகு தூத்பேடாவை ருசிக்கலாம் வாங்க.

நான் இரண்டையுமே ருசித்திருக்கிறேன். பால்கோவாவின் சுவை தூத்பேடாவுக்கு இல்லை என்று தான் தோன்றுகிறது.

தூத்பேடாவை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளுகுளுவென்று சாப்பிடலாம் என்றார் ஒருவர். ஏன் பால்கோவாவையும் கூடத்தான் அப்படிச் சாப்பிடலாம். அதற்காக இரண்டும் ஒன்று என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். இரண்டுமே வேறு வேறு தான் என்கிறார்கள் சிலர். இந்த பால்கோவா, தூத்பேடா குழப்பம் இப்போதைக்குத் தீராது போல.

கடைசியாகச் சொல்லிக் கொள்ள ஒன்றுண்டு.

உங்களுக்கு வீட்டில் பொழுதே போகவில்லை, வெட்டியாக இருக்கிறீர்கள். ஏதாவது சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. உடனே மனைவியை அழையுங்கள். எனக்கு இப்போதே பால்கோவா அல்லது தூத்பேடா சாப்பிட வேண்டும். அதற்காகக் கடைகளில் எல்லாம் வாங்கித் தரக்கூடாது. வீட்டில் உன் தங்கக் கரங்களால் சுத்தமான பசும்பால் வாங்கி சுத்தமான ஆலைச்சர்க்கரை வாங்கி பால்கோவாவோ அல்லது தூத்பேடாவோ செய்து தந்தே ஆக வேண்டும் என்று குழந்தைகளைப் போல செல்லமாகப் பிடிவாதம் பிடித்துப்பாருங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுக்கு வெட்டியாகக் கழிக்கப் பொழுதே இல்லாமல் செய்து விடுவார் உங்கள் மனைவி. அம்மாடியோவ் கையும், முதுகும் பின்னியெடுக்கும் போலிருக்கிறது வலி.

அனுராதா ரமணனின் நாவலொன்றை அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு பால்கோவாவுக்கும், தூத்பேடாவுக்குமான ஆறு வித்யாசங்களைப் பார்க்கப் புறப்பட்டு விட்டேன் பாருங்கள்.

அதாகப்பட்டது, அந்த நாவல் மூலமாகத்தான் தூத்பேடா என்றொரு இனிப்பைப் பற்றி நான் அறிந்து கொண்டது. நாயகியின் பெயர் இந்து, அவளைப் பெண் பார்க்க அந்த வீட்டுக்கு அடிக்கடி மாப்பிள்ளைகள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக அவள் ஒவ்வொரு முறையும் தூத்பேடா வாங்கி வந்து தட்டில் வைத்துக் கொண்டிருப்பாள். ஆரம்பத்தில் அதை சாப்பிடக்கூடிய வயதிலான மாப்பிள்ளைகள் வருவார்கள். க்ளைமாக்ஸில் பெண் பார்க்க வருபவருக்கு தூத்பேடா சாப்பிட முடியாத அளவுக்கு அவர் டயாபடிக் பேஷண்டாக இருப்பார். கடைசியில் நாவலை வாசித்து வருடங்கள் பல கடந்த பின்பும் இன்றும் கூட கதையில் எனக்கு நினைவில் நின்ற கதாபாத்திரங்களில் ஒன்றாக அந்த தூத்பேடாவும் தங்கி விட்டது. அது தான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

சரி இப்போது நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

பால்கோவாவும், தூத்பேடாவும் ஒன்றா?

ADVERTISEMENT
ADVERTISEMENT