ரெஸ்டாரெண்டுகளில் நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய 13 வித உணவு வஸ்துக்கள்!

அதென்னடாது கொபே பீஃப். நமக்கு நம்மூர் மாட்டுக்கறியைச் சாப்பிடவே தடை. இதில் இதென்ன புதுசா என்று புருவம் உயர்த்துவது தெரிகிறது. கொபே பீஃப் என்பது ஜப்பானில் வளர்க்கப்படும் ஸ்பெஷலான மாடுகளின் கறி.
ரெஸ்டாரெண்டுகளில் நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய 13 வித உணவு வஸ்துக்கள்!

கார்னிஷிங் வெஜிடபிள்ஸ்...

நீங்கள் எப்போது ரெஸ்டாரெண்டுகளுக்குச் சாப்பிடப் போனாலும் தயவு செய்து ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். அங்கே உணவுப்பொருட்களை அழகு படுத்துவதற்கு என்றே சில வேலைகளைச் செய்து வைத்திருப்பார்கள். ஒன்றுமில்லை ஐஸ்கிரீம் சர்வ் செய்தால் அதன் மேலே செர்ரிப் பழத்தையோ, அல்லது வேஃபர் பிஸ்கட்டையோ சொருகி வைப்பது, ஜூஸ் டம்ளர்களில் கேரட், லெமன், வெள்ளரித்துண்டுகளை சொருகி வைப்பது, போன்ற வேலைகளை அங்கிருக்கும் கேட்டரிங் பணியாளர்கள் செய்து வைப்பார்கள். பார்க்க அழகாகத் தான் இருக்கும். ஆனால், அது சாப்பிட அத்தனை அழகானதில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இப்படி கார்னிஷிங் செய்யப் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரும்பாலும் கழுவப்படுவதில்லை என்றொரு தகவல். சும்மா, சும்மா கழுவிப் பயன்படுத்தினால் பார்க்க அத்தனை லுக்காக இருக்காது என்பது ஒரு காரணம். அத்துடன் இதையெல்லாமா போய் கழுவிக் கொண்டிருப்பார்கள் வெகு சிலர் தானே இவற்றையும் மிச்சம் வைக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் பலரும் இவற்றைத் தூக்கி குப்பையில் தானே எறியப் போகிறார்கள் என்ற அலட்சியம் ஒரு காரணம். எனவே நாம் நமது ஆரோக்யத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இவற்றை உண்ணாமல் புறக்கணித்து விடுவது நல்லது. அப்படி உங்களுக்கு கார்னிஷிங் பழங்களின் மீது கொள்ளைப் ப்ரியம் என்றால் பேசாமல் வீட்டிலேயே பார்ட்டி பண்ணி சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ரெஸ்டாரெண்டில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.

முளைகட்டிய தானியங்கள்...

ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்டுகளில் பிரெட், மற்றும் நாணில் வைத்து ஸ்டஃப் செய்து சாப்பிடத் தோதாக சில பெளல்களில் முளைகட்டிய தானியங்களை நிறையவே அடுக்கி வைத்திருப்பார்கள். தீரத் தீர அது மீண்டும் நிரப்பப் படும். முளை கட்டிய தானியங்கள் நல்லது தான். ஆனால், அவை எவ்விதமாகப் பாங்காகத் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பொருத்தது அவற்றின் ஆரோக்ய அளவீடு. ரெஸ்டாரெண்டுகளில் சதா சர்வ காலமும் திறந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த தானியங்களின் ஈரப்பதம் காரணமாக இவற்றில் வெகு சீக்கிரம் பாக்டீரியத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அத்துடன் இவை ஒரே நாளில் தீர்ந்து விடப்போவதில்லை என்பதால் அப்படியே ஸ்டோரேஜ் அறையில் பாதுகாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் புஃபே பெளல்களில் நிரப்பப்படும் போது இவற்றில் ஆரோக்யத்தைக் காட்டிலும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கான சூழல்களே அதிகம். எனவே இவற்றையும் நீங்கள் வீடுகளில் மட்டுமே முயற்சிக்கலாமே தவிர ரெஸ்டாரெண்டுகளில் வேண்டாம்.

டேப் வாட்டர்...

இப்போது அனைத்து ரெஸ்டாரெண்டுகளிலும் வாட்டர் பாட்டில் வேண்டுமா? என்று கேட்டு விட்டே குடிக்கத்  தண்ணீர் வைக்கிறார்கள். ஒருவகையில் இது நல்லது தான். ஏனெனில் ரெஸ்டாரெண்டுகளில் நாம் சிக்கனம் பார்த்துக் கொண்டு நார்மல் வாட்டர் போதும் என்று மட்டும் சொல்லிவிட்டால் பிறகு அசுத்தமான தண்ணீரை நாமே தேடி வாங்கிக் குடித்தவர்கள் ஆகி விடுவோம். அங்கெல்லாம் கஸ்டமர்கள் வரும் முன்பே டேபிளில் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பது தானே வழக்கம். ஒருவேளை நிரப்பப் படாமல் இருந்து பிறகு நாம் அமர்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினாலும் கூட அது எங்கிருந்து பிடிக்கப்பட்டது, எந்த பாண்டத்தில் சேகரிக்கப்படுகிறது. அதன் சுத்தம் எப்படி என்பதெல்லாம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. எனவே ரெஸ்டாரெண்டுகளுக்குச் செல்லுகையில் ஒன்று கையோடு வாட்டர் பாட்டில்களை வீட்டிலேயே நிரப்பி எடுத்துச் சென்று பழக வேண்டும். அல்லது அங்கு பணம் போனால் பரவாயில்லை என்று காசு கொடுத்து வாட்டர் பாட்டில் வைக்கச் சொல்லி விடவேண்டும். நார்மல் வாட்டர் போதும் என்ற மனப்பான்மை மட்டும் வேண்டாம்.

லெக் பீஸ் (எலும்புடன் சேர்ந்த எல்லாக் கறிவகைகளும்)

ரெஸ்டாரெண்டுகளில் லெக் பீஸ் ஆர்டர் செய்து சாப்பிடும் அத்தனை பேருக்கும் இப்படி ஒரு அனுபவம் வாய்த்திருக்கக் கூடும். லெக் பீஸ் மேலே பார்க்க மொறு மொறுவென நன்கு வெந்திருப்பதைப் போலத் தோற்றமளித்தாலும் உள்ளே கறியைக் கடித்ததும் நம் முகம் அஷ்ட கோணலாகி விடும். காரணம் கறி சரியாக வெந்திருக்காது. பச்சைக்கறியைச் சாப்பிடவா நாம் ரெஸ்டாரெண்டுகளுக்குச் செல்கிறோம். அதிலும் கறி வேகவில்லை என்றால் அவற்றில் நிச்சயம் மைக்ரோ ஜெர்ம்களின் தாக்கம் நிறையவே இருக்கக் கூடும். இதனால் ஃபுட் பாய்ஸன் முதல் வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி வரை பல பிரச்னைகள் வரும். இதெல்லாம் தேவையா?  ஒருமுறை நீங்கள் ஆர்டர் செய்த லெக் பீஸ் சரியாக வேகவைக்கப்படவில்லை என்றால் தயவு செய்து மீண்டும் அதையே ஆர்டர் செய்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. இவை கிருமிகளின் ஒட்டுமொத்த கூடாரம். தயவு செய்து இவற்றையெல்லாம் உங்களுக்குச் சமைக்கத் தெரியுமானால் வீட்டிலேயே செய்து ருசியுங்கள். தயவு செய்து ரெஸ்டாரெண்டுகள் வேண்டாம்.

அரைகுறையாக வேக வைக்கப்பட்ட நத்தை, சிப்பி வகையறாக்கள்...

சிலர் புதுமையாகச் சாப்பிடுகிறோம் என்ற பெயரில் நத்தை, சிப்பி, நட்டுவாக்காலி, ஆமை, முதலை!!! என்றெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இவற்றைச் சாப்பிடுவது இந்திய உணவுப் பழக்கத்தில் அரிது என்பதால் அவற்றை எப்படிச் சமைப்பது என்பதே நம்மவர்களுக்குத் தெரியாது. அப்படியும் வெரைட்டி தருகிறோம் என்ற பெயரில் எதையாவது வித்யாசமாக முயற்சிப்பார்கள். வாயில் வைக்கச் சகிக்கவில்லை என்றாலும் விலை படு பயங்கரமாக இருக்கும். அதையும் சிலர் ட்ரெண்டியாகச் சாப்பிடுகிறோம் என்று ஆர்டர் செய்து வைப்பார்கள். தயவு செய்து உங்களுக்குச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாத உணவுகளை திடீரென சாப்பிடத் தொடங்கி விடாதீர்கள். அவை நிச்சயம் உபாதையில் கொண்டு விடும்.

பிரம்புக் கூடைகளில் தரப்படும் பிரெட் வகைகள்...

ஹோட்டல்களில் நீங்கள் பிரெட் ஆர்டர் செய்தால் அவை பிரம்புக் கூடைகளில் பரிமாறப்படும். அந்தக் கூடைகள் அனைவருக்கும் பொதுவானவை. முதலில் நீங்கள் ஆர்டர் செய்து வாங்கி விட்டு மிச்சம் வைத்தால் அதை அப்படியே கீழே கொட்டி விடப்போகிறார்களா என்ன? மீண்டும் காலியானவற்றை நிரப்பி அடுத்தடுத்த டேபிள்களுக்கு அதையே பரிமாறுவார்கள். அந்த பிரெட் கூடையிலும் சரி, பிரெட்டுகளின் மீதும் சரி பலரது கை படும். இதெல்லாம் ஆரோக்யமான விஷயமா என்ன?

சிக்கன்...

கடைகளில் அசைவ உணவுகளை ஆர்டர் செய்யப்போகிறீர்கள் என்றால் அதிக பட்சம் சிக்கனைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சிக்கன் மீண்டும், மீண்டும் சூடாக்கப்படும் போது நஞ்சாகும் வாய்ப்பு அதிகம். வீடுகளில் தயாரிக்கப்படும் போதே கூட ஒருமுறைக்கு மேல் சிக்கனை சூடு செய்து சாப்பிடக் கூடாது என்பார்கள். சிக்கனை மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் சால்மோனெல்லா பாக்டீரியாவின் பெருக்கம் அதிகரித்து அந்த சிக்கன் சாப்பிடத் தகாததாக மாறி விடுகிறது. அப்படிப்பட்ட சிக்கனைத் தான் வேண்டி விரும்பி ரெஸ்டாரெண்டுகளில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறோம். 

கொழுப்பு குறைந்த உணவு வகைகள்...

சிலர் நினைத்துக் கொள்வார்கள். ரெஸ்டாரெண்டுகளில் அசைவ உணவு சாப்பிட்டால் தானே ஆபத்து. நாம் சாலட்டுகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட்டுக் கொண்டு மற்றவற்றைக் குறைவாகச் சாப்பிட்டுக் கொண்டால் ஆயிற்று என்று. உண்மையில் கொழுப்பு குறைந்த உணவுகளாகக் கருதப்படும் இவற்றில் தான் கிருமிகளின் பெருக்கம் அதிகம். அத்துடன் இவற்றில் சர்க்கரையின் அளவும் அதிகமென்பதால் இவற்றை மட்டுமே அதிகம் சாப்பிட்டு வைப்பதும் கூட பல நேரங்களில் ஆபத்தில் முடியலாம். புஃபேக்களில் கட் செய்து பெளல்களில் நிரப்பப்பட்டிருக்கும் காய்கறிகள் மற்றும் பழத்துண்டங்கள் எத்தனை நாட்களுக்கு முன்னர் வாங்கி அங்கிருக்கும் ஸ்டோரெஜ் அறைகளில் சேமிக்கப்பட்டவை, பதப்படுத்தப்பட்டவை என்பதைக் குறித்தெல்லாம் நமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. குறைந்த பட்சம் 3 முதல் 6 மாதங்கள் வரை இவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் வசதி நிறைந்த ஸ்டோரெஜ் அறைகள் எல்லாம் தற்போது புழக்கத்தில் வந்து விட்டன. எனவே சாலட்டுகள் மற்றும் பழத்துண்டுகள் விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

புஃபே உணவுகள்...

20 ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று புஃபே பிரேக் பாஸ்ட், லஞ்ச் மற்றும் டின்னர் வகையறாக்கள். சமைத்த உணவுகளை அப்படியே சூடாக வைத்திருக்கும் பொருட்டு குறைந்த தீயில் அடுப்பின் மேலேயே வைத்துப் பரிமாறும் டெக்னிக் இது. உணவு வேண்டுபவர்கள், பிடித்த உணவின் அருகில் சென்று அவரவர் விருப்பப்படி வேண்டிய மட்டும் உணவு வகைகளை தட்டில் நிரப்பிக் கொண்டு இருக்கை கிடைத்தால் இருக்கையில் அமர்ந்தோ அல்லது நின்று கொண்டேவோ சாப்பிட வேண்டும். அது தானே புஃபே. அதெல்லாம் சரி தான். ஆனால் இந்த உணவுகளின் மைனஸ் என்னவென்றால் அவை தொடர்ந்து சூடாகிக் கொண்டே இருப்பது தான். இந்த முறையில் மீண்டும் மீண்டும் சமைக்கப்படும் உணவுகள் முதலில் சத்துக்களை இழக்கின்றன. அத்துடன் தொடர் வெப்பத்தால் நச்சாகவும் மாறி விடுகின்றன. இவற்றையும் தவிர்த்து விடுவது நல்லது.

திங்கட்கிழமைகளில் மீன் ...

உங்களுக்கு மீன் உணவு ப்ரியமென்றால் தயவுசெய்து அதை ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடுங்கள். திங்கட்கிழமை மீன் வாங்க சந்தைக்குப் போகாதீர்கள். ஏனெனில், ஞாயிறுக்கென்று அதிக அளவில் சந்தைக்கு வரும் மீன்களில் விற்பனையாகாத மீன்கள் மீண்டும் குளிர் அறைகளில் சேமிக்கப்பட்டு ஐஸ் மீன்களாக மீண்டும் திங்கள் மீன் சந்தையை வந்தடையும். பிற நாட்களில் அந்தக் கவலை தேவையில்லை. ஏனெனில், பிற நாட்களில் மீன் வரத்து குறைவாகவே இருக்கும். ஞாயிறு தான் மீன் மார்க்கெட்டில் உச்சபட்ச விற்பனை நடக்கும். எனவே அதற்கான வாங்கப்படும் மீன்களில் மீந்தவை எல்லாம் திங்கட்கிழமை மீன் வாங்கச் செல்பவர்களின் தலையில் கட்டப்படும் அபாயம் அதிகம். எனவே திங்கள் கிழமை மீன் சமைக்கவோ, சாப்பிடவோ உகந்த நாள் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

ஸ்பெஷல் மெனுக்கள்...

ரெஸ்டாரெண்டுகளில் நுழையும் போதே வெளியில் போர்டு வைத்திருப்பார்கள், இன்றைக்கு இதெல்லாம் இங்கு ஸ்பெஷல் என்று. தயவு செய்து அந்த ஸ்பெஷல்களை வாங்கிச் சாப்பிட்டு விடாதீர்கள். காலையில் அல்லது மதியம் மீந்தது தான் பெரும்பாலும் ஸ்பெஷல் மெனுக்களாக மாற்றப்படுவதாகக் கேள்வி. எனவே உஷாரய்யா, உஷாரு!

கேவியர் (Kaviar)

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உணவு என்றால் அது இதுதான் என்கிறார்கள் ஹோட்டலியர்கள். 1 ஸ்பூன் மலிவான கேவியர் குறைந்த பட்சம் 30 கிராம் இருக்கக்கூடும் அதன் விலையே 50 முதல் 70 டாலர்கள் வரை. அதுவே முதல் தரமான கேவியர் 1 ஸ்பூன் அல்லது 1 அவுன்ஸின் விலை 400 டாலர்கள், ஒரு பவுண்டின் விலை 6,400 டாலர்கள் வரை என்றொரு பேச்சிருக்கிறது. இது நிஜமும் கூட. சரி இதில் அப்படியென்ன ஸ்பெஷல் என்று தோன்றுமே?! கேவியர் ஸ்டர்ஜியன் எனும் மீனில் இருந்து கிடைக்கும் உபபொருள். இந்த வகை மீன்கள் பெரும்பாலும் காஸ்பியன் மற்றும் கருங்கடலை வாழிடமாகக் கொண்டவை. தற்போது மிகப்பெரிய பார்ட்டிகளில் கேவியர் இல்லாமல் விழா களை கட்டாது என்கிறார்கள். அப்படி இந்த உணவு ஆகச்சிறந்த சுவை கொண்டதுமில்லை. முட்டையில் உப்பு சேர்த்தாற் போன்ற சுவை கொண்டது தான் கேவியர். சிலருக்கு இந்தச் சுவை பிடிப்பதில்லை. ஆனால், மேலை நாடுகளின் மெனுக்களில் நிச்சயம் கேவியர் இல்லாத டேபிள்கள் இல்லை. அது எத்தனை விலைஉயர்ந்ததாக இருந்தபோதும் அதை உண்பதையே பெருமையாகக் கருதுபவர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். இவற்றைச் சாப்பிட்டே தீர வேண்டும் என்றால் தயவு செய்து ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் சொத்தை எழுதி வாங்கி விடுவார்கள். அவர்களை விட நியாயமான விலையில் வெளியில் சில ரெஸ்டாரெண்டுகளில் இவை மலிவான விலையில் கிடைப்பதாகத் தகவல். பர்ஸ் பழுக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் அங்கே சென்று இதை ருசிக்கலாம். அல்லது இவற்றைத் தவிர்த்து விடுவதும் நல்லதே!


கொபே மாட்டுக்கறி (Kobe Beef)

அதென்னடாது கொபே பீஃப். நமக்கு நம்மூர் மாட்டுக்கறியைச் சாப்பிடவே தடை. இதில் இதென்ன புதுசா என்று புருவம் உயர்த்துவது தெரிகிறது. கொபே பீஃப் என்பது ஜப்பானில் வளர்க்கப்படும் ஸ்பெஷலான மாடுகளின் கறி. இவ்வகை மாடுகள் இறைச்சிக்காக மட்டுமே ஜப்பானியப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த வகை மாடுகள் சதைப்பற்றுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சதை மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றுக்கு வளரும் போதே பண்ணைகளில் பீர் ஊற்றி வளர்க்கப்படுகின்றன. அத்துடன் இவ்வகை மாடுகள் வளர்க்கப்படும் கொட்டில்களில் மாடுகள் தாராளமாக நடந்து, ஓட இடமில்லை என்பதால் தினமும் மாடுகளுக்கு மசாஜும் செய்யப்படுமாம். இப்படியெல்லாம் வளர்க்கப்படும் இந்த வகை மாட்டுக்கறிக்கு விலை அதிகம். இவற்றை நம்மூர் ஹோட்டல்காரர்கள் இறக்குமதி செய்து பயன்படுத்துவதாகக் கேள்வி. இந்த மாட்டுக்கறி நம்மூர் சீதோஷ்ணத்திற்கு சுத்தமாக ஒத்து வராதவை. இவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிட வேண்டிய அவசியமென்ன? 

மேலே சொல்லப்பட்ட 13 வஸ்துக்களும் ரெஸ்டாரெண்டுகளுக்குச் சென்று சாப்பிட உகந்தவை அல்ல என்கிறீர்களே?! இவற்றையெல்லாம் சாப்பிடத்தானே நாங்கள் ரெஸ்டாரெண்டுகளுக்கே செல்கிறோம், பிறகு அதைத் தவிர்த்து விடுங்கள் என்றால் என்ன நியாயம்? என்கிறீர்களா? நியாயம், அநியாயத்தை விட்டு விட்டு தற்போது மோசமான உணவுப் பழக்கங்களால் ஆரோக்யம் கெட்டு சீரழியும் மனிதர்களை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள். நாம் எந்த மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்குப் புரியும். 

உணவு உண்பதில் என்ன ஃபேஷன் வேண்டிக் கிடக்கிறது. எதை எதனுடன் இணைத்து உண்ண வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிலும் அன்னையருக்கும், மனைவிமார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் மிக நன்றாகவே தெரியும். தெரியாதபட்சத்தில் ஆண்களே நளமகாராஜாக்களாக மாறி கரண்டி பிடித்து விட வேண்டியது தான்  நல்லது. அதை விட்டுவிட்டு கண்ட கண்ட கடைகளில் கண்டதையும் ஆர்டர் செய்து சாப்பிட்டால் பிறகு இப்போதுஇருக்கும் எடையைக் கூட நம்மால் மெயிண்டெயின் செய்ய முடியாது. அத்துடன் ஆரோக்யமும் சீர்கெட்டு விடும். எனவே மேற்சொன்ன பொருட்களைத் தவிர்ப்பதுதான்  நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com