‘5 ரூபாய் சாப்பாடு’ 25 வருடங்களாக ஒரே விலையில் சாப்பாடு தரும் அன்னதானப் பிரபு! 

5 ரூபாயில் தயிர், சாம்பார், தக்காளி, லெமன், புளிச்சாதம் என்று வெரைட்டியாக வேறு தருகிறார்கள். கடை ஆரம்பிக்கப்பட்டது 1994 ஆம் ஆண்டில். அப்பா கணேசன் தொடங்கி வைத்த ‘5 ரூபாய் சாப்பாடு’ வழக்கத்தை இன்று மகன்
‘5 ரூபாய் சாப்பாடு’ 25 வருடங்களாக ஒரே விலையில் சாப்பாடு தரும் அன்னதானப் பிரபு! 

சி.பி.ராம்சாமி சாலை, ஆழ்வார்பேட்டையில் இருக்கும் லக்‌ஷ்மி டீஸ்டால் ஏழை எளியவர்களின் பசிப்பிணி தீர்க்கும் புகலிடமாக மாறிப்போனதில் அதிசயமில்லை. இங்கே சாப்பாட்டுப் பொட்டலம் வெறும் 5 ரூபாய் தான். 5 ரூபாயில் தயிர், சாம்பார், தக்காளி, லெமன், புளிச்சாதம் என்று வெரைட்டியாக வேறு தருகிறார்கள். கடை ஆரம்பிக்கப்பட்டது 1994 ஆம் ஆண்டில். அப்பா கணேசன் தொடங்கி வைத்த ‘5 ரூபாய் சாப்பாடு’ வழக்கத்தை இன்று மகன் ராஜாவும் விடாது பின்பற்றி வருகிறார்.

எங்கே சென்றாலும் மக்கள் தங்களை 5 ரூபாய் சாப்பாட்டுக்காரர்கள் என்று அடையாளம் காண்பதை தங்களுக்குரிய பெருமையாக இவர்கள் கருதுகிறார்கள். அதிலொரு மன திருப்தி கிடைப்பதாகப் புன்னகைக்கிறார் அப்பா கணேசன்.

இவர்களிடம் கஸ்டமர்களாக வருபவர்கள் பெரும்பாலும் டிரைவர்கள், வாட்மேன்கள், ஆபீஸ் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட லோயர் மிடில் கிளாஸ் வர்க்கத்தினரே! அவர்களது பசிக்கு மிகக் குறைவான விலையில் கிடைக்கும் 5 ரூபாய் சாப்பாடு தேவாமிர்தம். கடையின் ஓரத்தில் கொஞ்சம் இடமிருக்கிறது. கஸ்டமர்கள் அங்கே அமர்ந்து கொண்டு, நின்று கொண்டு சாப்பிட்டு விட்டுச் செல்வதும் உண்டாம்.

அப்பா கணேசனின் லக்‌ஷ்மி டீஸ்டாலின் அருகிலேயே லக்‌ஷ்மி ஃபாஸ்ட் ஃபுட் என்றொரு கடை நடத்தி வருகிறார் மகன் ராஜா. 5 ரூபாய் சாப்பாட்டுக் கடை நடத்த இது அவர்களுக்கு மிக வசதியாக இருக்கிறது. 5 ரூபாய் சாப்பாட்டுக் கடைக்கு என்று தனியாக வேலையாட்கள் அமர்த்தப்படவில்லை. ஃபாஸ்ட் ஃபுட் கடையின் ஊழியர்களைக் கொண்டே இந்தக் கடைக்கான வேலைகளையும் நடத்திக் கொள்கிறார்கள். அதாவது 5 ரூபாய் சாப்பாட்டுக் கடைக்கென்று தனியாகச் சமைப்பதில்லை. அங்கே வடிக்கும் சோற்றில் கூடக் கொஞ்சம் வடித்து இந்தக் கடைக்கும் பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்கிறார் கணேசன். இந்த 5 ரூபாய்க்கடை என்பது அவர்களைப் பொருத்தவரை தினம் நடத்தப்பட வேண்டிய ஒரு தர்மகாரியம். இதை மாஸ்டர் வைத்து அவருக்குத்தனியாக சம்பளம் தந்து நடத்திக் கொண்டிருந்தால் பிறகு சம்பளம் தர முடியாமல் நடுவில் தடைபட்டுப் போனாலும் போகலாம் என்பதால் வேலையாட்களையே வைத்துக் கொள்ளாமல் அப்பாவும், மகனுமாக இந்தக் கடை வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

25 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆரம்பகாலங்களில் 5 ரூபாய் சாப்பாடு அதிக லாபம் அளித்து வந்த போதும் இன்று அதை நாங்கள் ஒரு சேவை மனப்பான்மையுடன் தான் அதே விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அப்பாவும், மகனும். லாபம் இல்லாமல் எந்த தொழிலும் நிலைத்து நிற்காது. இதில் தர்ம நோக்கமும் இருப்பதால் கிடைத்த வரை லாபம் என்று முடிவு செய்து கொண்டு அதே விலையை மாற்றாமல் தந்து கொண்டிருக்கிறார்கள். கடைக்கு சாப்பாடு வாங்க வருபவர்கள், சுவை பிடித்துப் போனதால் இப்போதெல்லாம் 1 பாக்கெட் வாங்குவதில்லை 2, 4 5 என்று தான் வாங்கிச் செல்வார்கள். சுவை பிடிக்கா விட்டால் மீண்டும் வருவார்களா? என்ன ஒரு வித்யாசம் என்றால் ஆரம்ப நாட்களில் 5 ரூபாய்க்கு சாப்பாட்டுப் பொட்டலம் வாங்குபவர்களுக்கு ஒரே பாக்கெட்டில் வயிறு நிறையச் சாப்பாடு தர முடிந்தது. ஆனால் இன்று விலை மட்டும் தான் அதே நிலையில் நீடிக்கிறது. சாப்பாட்டின் அளவு குறைந்து விட்டது. இரண்டு பொட்டலம் வாங்கினால் ஓரளவுக்கு வயிறு நிறைந்து விடும். பொட்டலத்தின் விலையைக் கூட்டலாம் என்றால் மனசு வரவில்லை. ஏனென்றால் மக்கள் எங்களை 5 ரூபாய் சாப்பாட்டுக்காரர்கள் என்று தான் நம்புகிறார்கள். விரும்புகிறார்கள். எனவே அதையே நீடிக்கலாம் என்று சொல்லி விட்டார் அப்பா.

எங்கள் கடையில் தயிர்சாதத்துக்கு ஊறுகாயும், லெமன், புளி, தக்காளி சாதத்துக்கு சாம்பாரும் ஃப்ரீ. சாப்பாட்டுப் பொட்டலத்தின் விலையை ஏற்றக்கூடாது. சைஸைக் கூட சிறியதாக்கிக் கொள்ளலாம், விலை கம்மி என்ற பெயர் மட்டும் நிலைக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் என்ன விலையாக இருந்தாலும் பரவாயில்லை நம்மால் முடிந்த அளவுக்கு இதே விலையில் சாப்பாடு போடுவது என்று முடிவு செய்து விட்டேன் என்கிறார் பெரியவர் கணேசன்.

லாபம் இல்லாமல் எந்த தொழிலும் நிலைத்து நிற்காது. ஆனால் இவர்களது 5 ரூபாய் சாப்பாடு கொள்கை கையில் சொற்பக் காசுடன் வாழும் பலரது மதியச் சாப்பாட்டுக் கவலையைத் தீர்த்துக் கொண்டிருப்பதால் 25 ஆண்டுகளாக நீடிக்கும் இவர்களது தர்ம சிந்தனையை வாழ்த்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com