அறுசுவையில் வாழ்க்கைத் தத்துவம் போதிக்கும் ஸ்பெஷல் ‘யுகாதி பச்சடி’ ரெசிப்பி!

பஞ்சாங்கத்தை அடுத்து யுகாதி ஸ்பெஷலாக அனைவருக்கும் நினைவில் நிற்கக்கூடியது யுகாதி பச்சடி என்று சொல்லப்படக் கூடிய மாம்பிஞ்சு பச்சடி.
அறுசுவையில் வாழ்க்கைத் தத்துவம் போதிக்கும் ஸ்பெஷல் ‘யுகாதி பச்சடி’ ரெசிப்பி!

வாசகர்கள் அனைவருக்கும் ‘ஹேப்பி யுகாதி’ வாழ்த்துக்கள்!

தமிழர்களான நமக்கு தமிழ்ப்புத்தாண்டு எப்படியோ, அப்படித்தான் ஆந்திரர்களுக்கும் கன்னடர்களுக்கும் யுகாதித் திருவிழா. தெலுங்கு வருடப்பிறப்பு. வருடப்பிறப்பன்று என்னவெல்லாம் ஸ்பெஷல் என்றால் முதலாவதாக நமக்கு ஞாபகம் வரக்கூடியது காலண்டர். நாம் எப்போதோ ஆங்கில காலண்டர்களைப் பின்பற்றத் தொடங்கி விட்டோம். ஆயினும் தமிழ் வருஷங்களுக்கான பஞ்சாங்கங்களையும் தவிர்ப்பதில்லை. அதையும் மறவாமல் பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். அதனால் புத்தாண்டின் போது தான் புதுப்பஞ்சாங்கம் வெளியிடப்படும். நமக்கு சித்திரை ஒன்று என்றால் தெலுங்கர்களுக்கு யுகாதி முதல் நாளில் இருந்து புதுப்பஞ்சாங்கம் தொடங்குகிறது.

பஞ்சாங்கத்தை அடுத்து யுகாதி ஸ்பெஷலாக அனைவருக்கும் நினைவில் நிற்கக்கூடியது யுகாதி பச்சடி என்று சொல்லப்படக் கூடிய மாம்பிஞ்சு பச்சடி. அதை எப்படிச் செய்வது என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆந்திர முழுவதும் இருவேறு தினுசுகளில் யுகாதி பச்சடி தயாரிக்கிறார்கள். சுவையில் பெரிதாக வேறுபாடு காணமுடியாது. இரண்டுமே ஒன்று போலத்தான் தெரிகிறது. சிற்சில வித்யாசங்கள் என்னவென்றால் சிலர் இளநீர் வழுக்கை சேர்ப்பார்கள், சிலர் அதைச் சேர்ப்பதில்லை, சிலர் மாம்பிஞ்சுக்குப் பதிலாக மாங்காய் சேர்த்துச் செய்வார்கள். காரத்துக்கு சிலர் மிளகாய் சேர்ப்பார்கள், சிலர் மிளகுத்தூள் சேர்ப்பார்கள். அவ்வளவு தான். நாம் இங்கு இரண்டு முறைகளிலுமே யுகாதி பச்சடி எப்படிச் செய்வார்கள் என்பதைப் பார்க்கலாம்.

யுகாதி பச்சடி செய்முறை 1

  • புளிக்கரைசல் - 1 கப்
  • தண்ணீர் - 1/4 கப்
  • வெல்லம்- 1/2 கப்
  • மாங்காய் - 1 கப் (பொடியாக அரிந்தது)
  • பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கி நசுக்கியது)
  • வேப்பம்பூ - 1/4 கப்
  • இளநீர் வழுக்கை - 1/2 கப் (பொடியாக அரிந்தது)
  • தூள் உப்பு - சிறிதளவு

செய்முறை: முதலில் புளிக்கரைசல் தயார் செய்ய வேண்டும், 1 கோலிக்குண்டு அளவு புளியைத் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து ஊறியதும் புளிச்சாற்றை நன்கு கசக்கிப் பிழிந்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். கரைசல் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் கலந்து நீர்க்கச் செய்து கொள்ளலாம். அத்துடம் நன்கு நசுக்கிய வெல்லம் 1/2 கப் சேர்க்கவும். இவற்றுடன் பொடியாக அரிந்த மாங்காய், பச்சைமிளகாய், வேப்பம்பூ, இளநீர் வழுக்கையும் துளி உப்பும் சேர்த்து நன்கு கிளறவும். வெல்லம் கரையும் வரை நன்கு கிளறினால் ஆறுவிதமான சுவை கொண்ட பொருட்களும் நன்றாகக் கலந்து அனைத்தும் ஒருங்கேயான ஒருசுவை கிடைக்கும். இப்போது யுகாதி ஸ்பெஷல் பச்சடி தயார்.

இதில் வெல்லம் இனிப்புச் சுவைக்காகவும், புளிக்கரைசல் புளிப்புச் சுவைக்காகவும், வேப்பம்பூ கசப்புச் சுவைக்காகவும், இளநீர் வழுக்கை துவர்ப்புச் சுவைக்காகவும்,  உப்பு உப்புச் சுவைக்காகவும்  பச்சைமிளகாய் காரச்சுவைக்காகவும் என மொத்தத்தில் அறுசுவைக்கான 6 விதமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த அறுசுவைப் பச்சடியையே ‘யுகாதி பச்சடி’ என்கிறார்கள். இதை கர்நாடகத்தில் ‘பேவ் பெல்லா’ என்று குறிப்பிடுவார்கள். யுகாதி கன்னடர்களுக்கான பண்டிகையும் தான். இந்தப் பச்சடியின் அடிப்படைத் தத்துவம் வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், வலி, தியாகம், மகிழ்ச்சி சில சமயங்களில் கசப்பான பல அனுபவங்கள் என எல்லாமும் நிறைந்ததாகத் தான் இருக்கும். அதை உணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை முழுமை பெறும் என்பதை உணர்த்துவதே! அதுவே யுகாதி பச்சடியின் நோக்கம்.

யுகாதி பச்சடி ரெசிப்பி 2

தேவையான பொருட்கள்: 

  • மாம்பிஞ்சு - (யுகாதி பச்சடி செய்ய துவர்ப்புச் சுவை கொண்ட மாம்பிஞ்சு தான் ஏற்றது. புளிப்பான மாங்காய் அல்ல)
  • மாப்பிஞ்சை நன்றாகக் கழுவித் துடைத்து விட்டு தோல் நீக்கி உள்ளிருக்கும் விதையையும் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளிக்கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
  • சால்ட் - 1/4 டீஸ்பூன்
  • மாம்பிஞ்சு அரிந்தது - 1 டேபிள் ஸ்பூன்
  • வேப்பம்பூ - 1 டீஸ்பூன்

மேலே சொன்ன அதே முறையில் ஆறு பொருட்களையும் கலந்தால் யுகாதி பச்சடி தயார். இது ட்ரெடிஷனல் முறையில் தயாராகும் ரெசிப்பி. இதில் சுவையைத்தாண்டி ஆரோக்யத்துக்கே முதலிடம் என்கிறார்கள் யுகாதி பச்சடி செய்வதில் கரை கண்ட பெண்கள்.

தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி என யாருடைய பண்டிகையாக இருந்தால் என்ன? சில பண்டங்கள் அனைவருக்குமான வாழ்க்கைத் தத்துவம் மற்றும் ஆரோக்யத்தை போதிப்பதாக இருந்தால் அதை நாமும் வரித்துக் கொள்ள வேண்டியது தானே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com