எடை குறைப்பில், ஆரோக்கியத்தில் ஓட்ஸுக்கு மாற்றா இந்த கின்வா?!

ஒரு பெளல் கின்வா கஞ்சி மட்டும் காலை உணவாகப் போதாது என்று உணர்பவர்கள் அதனுடன் சேர்த்து ஒரு வெஜ் ஆம்லெட் எடுத்துக் கொள்ளலாம்
எடை குறைப்பில், ஆரோக்கியத்தில் ஓட்ஸுக்கு மாற்றா இந்த கின்வா?!

அரிசியில் இருக்கும் கொழுப்பும், புரதமும் அளவுக்கு அதிகம் என்று நினைப்பவர்கள் அரிசிக்குப் பதிலாக அரிசியின் அதே சுவையுடன் ஆனால் கொழுப்பின் சதவிகிதம் மட்டும் குறைந்துள்ள கின்வாவைப் பயன்படுத்தலாம். கின்வா பார்ப்பதற்கு தினை அரிசி போல இருக்கிறது. எடை குறைப்பில் கின்வா ரெஸிப்பிகளைப் பயன்படுத்தினால் மிகச்சிறந்த பலன் உண்டாம். கின்வாவில் செய்த உணவுகளை சாப்பிட்டு எடை குறைந்த அனுபவம் உள்ளவர்களின் கருத்து இது! நீங்களும் சாப்பிட்டுப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

கின்வா கஞ்சி தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

  • கின்வா: 1 கப்
  • பால்- 2 1/2 கப்
  • தண்ணீர்: 2 கப்
  • பாதாம்: 6 / பெளல்
  • உலர் திராட்சை: 6 / பெளல்
  • தேன்: 1/2 டீஸ் ஸ்பூன்/ பெளல்
  • ஆப்பிள்: 1 (கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)

செய்முறை:

1 கப் கின்வா எடுத்து நன்கு கழுவி, அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.  கின்வாவை நன்கு வேக வைக்க 15 நிமிடங்கள் தேவை. 15 நிமிடங்களில் கின்வா வெந்ததும் இறக்கி சற்று ஆறியதும் நாக்கு பொறுக்கும் சூட்டில் ஒரு பெளலில் கின்வா கஞ்சியை ஊற்றி அதில் அரை கப் கொதிக்க வைத்து ஆறிய பாலை ஊற்றி நன்கு கலக்கவும். நீர்க்க கலக்கக் கூடாது. கஞ்சிப் பதத்தில் கரைத்து அதனுடன் 1/2 டீஸ் ஸ்பூன் தேன் ஊற்றி அதென் மேல் சுத்தமான 6 பாதாம், 6 உலர் திராட்சை மற்றும் ஆப்பிள் கியூப்களை அலங்காரமாக வைத்துப் பரிமாறலாம். 1 கப் கின்வாவை கஞ்சியாகக் காய்ச்சினால் அதை 4 முதல் 5 நபர்கள் தாராளமாக அருந்தலாம். 5 பேருக்கு தனித் தனியாக 1 பெளல் என்று கணக்கிட்டால் 5 நபர்களுக்கு 30 பாதாம்கள், 30 உலர் திராட்சைகள், 2 1/2 டீஸ்பூன் தேன் தேவை. தினமும் காலை உணவாக இதை எடுத்துக் கொண்டால் போதும். கின்வா கஞ்சியில் பால், பாதாம், உலர் திராட்சை, தேன், என உடலுக்குத் தேவையான விட்டமின், மினரல்கள் கலந்த சத்தான பொருட்களைத் தேவையான அளவு கலப்பதால் நன்றாகப் பசி தாங்கும். ஒரு பெளல் கின்வா கஞ்சி மட்டும் காலை உணவாகப் போதாது என்று உணர்பவர்கள் அதனுடன் சேர்த்து ஒரு வெஜ் ஆம்லெட் எடுத்துக் கொள்ளலாம். சிறந்த சத்தான, சரி விகித டயட் கொண்ட காலை உணவுக்கு இது போதும். உடல் எடை கூடிக் கொண்டே போகிறதே என்று கவலைப் படுபவர்கள் அரிசிக்குப் பதிலாக கின்வாவை முயற்சி செய்யலாம்.

கின்வாவில் மேலே கண்ட நட்ஸ் மற்றும் பழம் சேர்க்க விரும்பாதவர்கள் இப்படி வெறுமே உப்பும்,  பட்டைப் பொடி மட்டும் சேர்த்து நீர்க்க கரைத்தும் அருந்தலாம்.

இந்தியாவில் சமீப காலங்களில், காலை உணவாக ஓட்ஸ் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எத்தனைக்கெத்தனை அதிகரித்துள்ளதோ, அத்தனைக்கத்தனை ஓட்ஸ் பயன்பாடு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. வெளிநாடுகளில் குதிரைகளுக்கு உணவாகப் பயன்படுத்தும் ஒரு வஸ்துவை எடை குறைக்க சிறந்த உணவு, இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவு என்று பன்னாட்டு நிறுவனங்கள் ஓட்ஸை இந்தியாவின் தலையில் கட்டி விட்டன என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு இதுவரை ஒரு பதிலும் இல்லை. இந்த சஞ்சலத்துடன் ஓட்ஸ் பயன்படுத்துவதைக் காட்டிலும் கின்வா, சிறு தானியங்கள் என்று மாற்று முயற்சிகளை மேற்கொள்வதில் தவறொன்றும் இல்லை. கின்வா உபயோகிப்பதில், என்ன ஒரு கஷ்டம் என்றால்? அதன் விலை அரிசியை விட, சிறு தானியங்களை விட, ஓட்ஸை விடவும் அதிகம் என்பது தான். ஒரு கிலோ கின்வா விலை ரூ.500 க்கு குறையாமலிருக்கும். விலை அதிகம் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் கின்வா கஞ்சி சாப்பிடத் தொடங்கலாம். மற்ற நாட்களில் எடை குறைப்பிற்குத் தோதாக வேறு டயட்களும் இருக்கிறதே!

கின்வாவில் கஞ்சி மட்டுமல்ல, அரிசிக்குப் பதிலாக, அரிசியைப் பயன்படுத்திச் செய்யக் கூடிய அத்தனை ரெஸிப்பிகளையும் கின்வாவிலும் செய்யலாம். அப்போ நீங்க ரெடியா? கின்வா பிரியாணி, கின்வா தோசை, கின்வா இட்லி, கின்வா உப்புமா, கின்வா புலாவ் என்று செய்து அசத்துங்கள். எடை குறைப்பும் ஆச்சு... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமும் ஆச்சு. 

Image courtsy: www.padhuskitchen.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com