'ரஜினியும் கமலும் கால்ஷீட் கொடுக்காதபோதே சினிமாவை விட்டு நின்னுருக்கனும்'

'ரஜினியும் கமலும் கால்ஷீட் கொடுக்காதபோதே சினிமாவை விட்டு நின்னுருக்கனும்'

தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் போல எனக்கும் சினிமா ரொம்ப பிடிக்கும். அத்துடன் சேர்த்து அதுபற்றிய கொஞ்சம் கூடுதலான பின்னணித் தகவல்கள் தெரிந்து கொள்ள எப்போதும் விருப்பம் உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் போல எனக்கும் சினிமா ரொம்ப பிடிக்கும். அத்துடன் சேர்த்து அதுபற்றிய கொஞ்சம் கூடுதலான பின்னணித் தகவல்கள் தெரிந்து கொள்ள எப்போதும் விருப்பம் உண்டு. வாசிப்பு பழக்கம் இருப்பதால் இம்மாதிரியான புத்தகங்களை வாசிப்பதும் இயல்பே! அந்தவகையில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த போது வாசிக்காமல் விட்ட, விகடன் பிரசுர வெளியீடான பஞ்சு அருணாசலத்தின் "திரைத்தொண்டர்" புத்தகத்தை சமீபத்தில் வாசித்து முடித்தேன்.

காரைக்குடியில் இருந்து கதைகள் எழுதி புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை வந்து, தனது சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் மாதம் ரூ.125 சம்பளத்தில் 'செட் அசிஸ்டெண்ட்' ஆகத் துவங்கியது பஞ்சு அவர்களின் சினிமா வாழ்க்கை. ஓர் எதிர்பாரா தருணத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்கிறார். (ஆக்சுவலாக பஞ்சு கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகன்!). இப்படியாகத் துவங்கி தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனக் கோலோச்சிய ஒரு மகத்தான மனிதரின் திரைவாழ்வு அனுபவங்களே புத்தகமாக நமக்கு வாசிக்கத் தரப்பட்டுள்ளது.

நூற்றாண்டு கண்டுவிட்ட தமிழ் சினிமாவில் இதுபோல எத்தனையோ மனிதர்கள் இருந்துள்ளார்களே? பின் இந்தப் புத்தகம் மட்டும் என்ன சிறப்பு என்றால் அவர் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான மனிதர்கள் சமகாலத்தில் இன்றும் இருப்பதாலும், தற்போது தமிழ் சினிமாவின் நிலையையும் கண்கூடாக பார்க்கும் தருணத்திலும், 'சினிமா என்ற இந்த கலை / வேலை / தொழில் எப்படிப்பட்ட மனிதர்கள் இருந்து போஷித்து வளர்த்து, இன்று எப்படியான ஒரு நிலையில் வந்து நிற்கிறது என்பதை உளப்பூர்வமாக உணர்த்துவதின் காரணமாகத்தான்!

முதலாவதாக பஞ்சு அருணாசலம் என்னும் மனிதர் குறித்து தெளிவாக எனக்கு மனதில் என்ன நினைவில் இருக்கிறது என்று பார்த்தால், கமல்ஹாசனின் ஆளவந்தான்" படத் தோல்விக்குப் பிறகு குமுதத்தில் வெளியான அவரது பேட்டிதான.! அதில் அவர் "ஹேராமில் நிகழ்ந்த மொழித்தவறு இதிலும் நடந்துள்ளது; அதேமாநிரி நந்து கதாபாத்திரம் சாகும் போது ஆடியன்ஸ் அப்பாடா ஒழிஞ்சான் அப்டின்னு நினைச்சுர்றாங்க. அது தப்பு. அவன்மேல பரிதாபம் வர்றமாதிரி ஸ்க்ரீன்ப்ளே இருந்துருக்கனும்" என்று கூறியிருந்தார். ஆமால்ல என்று எண்ண வைத்த வரிகள் அவை!

இந்தப் புத்தகத்திலும் அவர் இதுபோல எண்ணற்ற விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு சில மட்டும் ஒரு வாசிப்பு சுவராசியத்திற்காக இங்கே! 1960 களில் வெளிவந்த படம் 'சாரதா'. இசை கே.வி.மகாதேவன். ரிலீஸ் நெருக்கடியில் படத்தில் ஒரு பாடல் சேர்க்க வேண்டிய சூழல். கவிஞர் ஊரில் இல்லாத சூழலில் அவசரமாக பஞ்சுவை எழுதச் செய்த ஒரு பாடல்தான் இன்றுவரை கல்யாண வீடுகளின் பேவரைட் & ஆல்டைம் ஹிட்டான ' மணமகளே மருமகளே வா வா'!.நிறைய பேர் அதை கண்ணதாசனின் பாடலாகவே இன்றுவரை நினைக்கின்றனர்.

கவிஞரிடம் வேலை செய்த தருணத்தில் வாய்ப்புள்ள நேரங்களில் பிறருடன் திரைப்படக் கதை விவாதங்களிலும் பஞ்சு அவர்கள் பங்கு பெறுகிறார். அவ்வாறு கையில் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக் கொண்டு, இயக்குநர் வி.சி.குகநாதனுடன் அமர்ந்து காலை வேளைகளில் அவர்கள் கதை விவாதம் செய்த இடம் எது தெரியுமா? காந்தி மண்டபம்!

பின்னர் தனியாக படங்களுக்கு கதை எழுதும் முயற்சியில் இறங்கி முதல் மூன்று படங்கள் வெவ்வேறு காரணங்களால் வெளிவரவே இல்லை. நான்காவதாக ஜெய்சங்கர் - ஜெயலலிதா காம்பினேஷனில் உருவான படமும் இறுதியில் ஜெயலலிதா கால்ஷீட் பிரச்னையால் ட்ராப். இதன்காரணமாக நெருங்கிய நண்பர் ஒருவர் பஞ்சுவுக்கு சூட்டிய பட்டப்பெயர் 'பாதிக் கதை பஞ்சு'!.

இப்படித் தொடர் தோல்விகளால் ஒரு கட்டத்தில் பின்னர் தான் தற்கொலை செய்து கொண்டுவிடலாமா என்று கூட இவர் யோசித்துள்ளார். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அதன் காரணமாகத்தான் பின்னர் இளையராஜாவை அன்னக்கிளியில் அறிமுகம் செய்தபோது ரெக்கார்டிங்கில் கரண்ட் கட், பாட்டு முதல்முறை ரெக்கார்ட் ஆகாதது என எதையும் பஞ்சு அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் புரிந்து கொள்ளலாம்.

அதேபோல ரஜினி - கமல் இருவருடனும் அவருக்கு இருந்த பழக்கம் குறித்து பல்வேறு சம்பவங்களை எழுதியுள்ளார். நிறைய படிக்கலாம். குறிப்பாக 'கவிக்குயில்' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ரஜினியை மதுவருந்த அழைத்தது முதல் வீரா படத்திற்குப் பிறகு ஒருமுறை இவர் கால்ஷீட் கேட்டு ரஜினி மறுக்கும் தருணம் வரை அது ஒரு லாங் ஜர்னி! அதேபோல கமலுக்கும் சம்பவங்களுக்குப் பஞ்சமே இல்லை. நம் தலைமுறையில் தமிழ்த் திரையுலகின் இரண்டு பெரிய நடிகர்கள் தானாகவே கூப்பிட்டு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கான ஒருவராக இருந்துள்ளவர் பஞ்சு அருணாசலம்!

இப்படி ஒரு ஆளுமையாக இருப்பவர் தனது அன்புக்குரிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திரைத்துறையில் இருந்து விலகும் தருணம் தானும் விலக நினைக்கிறார்.ஆனால் சினிமா மீதான ஆசையினால் தொடர்கிறார். பின்னர் ரஜினி - கமல் இருவரும் தனக்கு கால்ஷீட் வழங்க இயலாத தருணத்திலாவது சுதாரித்து வந்திருக்க வேண்டியவர் தொடர்ந்து எதிர்கொள்ளும் தருணங்கள் எல்லாம் தமிழ் சினிமா எப்படி "ஷிப்ட்" ஆகிறது என்பதை நமக்குப் பாடமாக கண்முன் காட்டுகிறது. இந்தப் போர்ஷனில் இருப்பவை எல்லாம் பாடங்கள்!

இறுதியாக தனது அனுபவத்தில் ஒரு படத்திற்கு கதையும் திரைக்கதையும் எப்படி அமைய வேண்டும் என அத்தனை எளிமையாக அழகாக எழுதியுள்ளது எல்லாம் திரைத்துறையில் நுழைந்து சாதிக்க விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று! தன்னை இந்த அளவுக்கு வைத்திருந்த குடும்பத்தை பற்றி எழுதி தொடரை முடித்துள்ளது சிறப்பு!

இந்த சமயத்தில் அவரது பேச்சை அப்படியே அத்தனை இயல்பாக அழகாக எழுதியுள்ள விகடனின் ம.கா.செந்தில்குமாருக்கு பாராட்டுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com