பெரியாரின் ‘ராமாயணக் குறிப்புகள்’ ஒரு பக்திமானின் விமர்சனக் கண்ணோட்டத்தில்...

பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது, எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்... ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக
பெரியாரின் ‘ராமாயணக் குறிப்புகள்’ ஒரு பக்திமானின் விமர்சனக் கண்ணோட்டத்தில்...

பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது, எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்... ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக விமர்சித்து படிப்பவர்களை குழப்புவது எந்த விதத்தில் நியாயமான செயலோ?

ராமன் கடவுள் அல்ல... ராமாயணம் கற்பனை, சொல்லப் போனால் ஆரியர்களின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு வடிகாலாய் தோற்றுவிக்கப் பட்ட புனைவு, சீதை பதிவிரதா பத்தினி இல்லை... சரி இதெல்லாம் ஒரு சாராரின் ஆணித்தரமான கருத்து... வாதம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்படி மேலோட்டமாகச் சொல்லி நம் மக்களை நம்பிக்கை மாற்றம் செய்ய முடியாது என்பதாலோ என்னவோ பெரியாரின் ஆதாரப் பூர்வமான எதிர் கருத்துக்கள் இப்புத்தகம் முழுதுமே கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன.

ஒரு விடயத்தைப் பற்றி நமது எதிர் கருத்தை தெரிவிப்பது என்பதற்கும்... திணிப்பது என்பதற்கும் நிச்சயம் நிறைய வேறுபாடுகள் உண்டு தானே?! எனக்கென்னவோ இப்புத்தகத்தில் பெரியாரின் எழுத்துக்களில் தெரியும் கடுமை திணித்தல் ரகமாகவே தோன்றுகிறது.

சமூகம் என்ற ஒரு கட்டமைப்பில் வாழும் போது சில நியாயமான பயங்களும் அவசியம் தான். அழுக்கை உருட்டி உருவம் செய்த பொம்மை தான் விநாயகர்...பிள்ளையார் என்றும் வாதிக்கிறார்கள். சரி; ஓரினச் சேர்க்கை பற்றி வாதிக்கையில் அய்யப்பனை எள்ளுகிறார்கள்... சரி இருக்கட்டும். இந்துக் கடவுள்கள் கற்பனை உருவங்கள்... அதுவும் சரியே.

இவையெல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டுமே இவற்றால் பலரது மண்டைகள் உடையாமல் இருக்கும் வரை. இவற்றால் பலரது ரத்தம் தெறிக்காமல் இருக்கும் வரை...வெறும் கற்பனை உருவங்கள் ... ஆரியர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட மாயத் தோற்றங்கள் .எல்லாம் சரி தான். அப்படி இருக்கையில் வெறும் கற்பனைக்காக ஏன் மதம் சார்ந்த சண்டைகள் இட்டுக் கொள்ள வேண்டும்? வடை தானே முக்கியம் வடை சுற்றித் தரும் காகிதம் முக்கியமென்று ஏன் மோதிக் கொள்கிறார்கள்?

மதங்கள் வெறும் சட்டைகள் தான் என்று சிறு வயதில் பள்ளிக்கூட செய்யுள்களில் படித்திருப்போம். சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம்... அட துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு... முடை நாற்றம்... என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?

நான் இந்துக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்... முகமதியனாகப் பிறக்க வேண்டும்... கிறிஸ்தவனாகப் பிறந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் யாரும் தீர்மானம் செய்து கொண்டு பிறத்தல் சாத்தியம் இல்லையே?! மதங்கள் மனங்களைப் பண்படுத்த அல்லவோ பிறப்பிக்கப் பட்டன.

ஆற்றில் சென்று கொண்டிருக்கிறோம்... நீரின் துர்நாற்றம் சகிக்கவில்லை என்றால் ஆற்றை அல்லவா தூர்வார வேண்டும், நீரை அல்லவா சுத்தப் படுத்த வேண்டும். ஒட்டு மொத்தமாக ஆற்றை ஒதுக்கி வைக்க முடியுமா? புழுக்கள் நெளியும் மெட்ரோ வாட்டர் அதை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கும் புண்ணியவான்கள் அல்லவா நாம்? சென்னையில் வாழ்ந்து கொண்டு மெட்ரோ வாட்டர் வேண்டவே வேண்டாம் என தைரியமாக வெறுக்க முடியுமா?

அப்படி இருக்கிறது சீதையை ‘பஜாரி’ என சாடுவது. ராமனும் சீதையும் கடவுள்கள் அல்ல என்று வாதிப்பதும். ஒரு வகையில் சரித்திர ஆய்வுகளின் படி இத்து சரியான வாதமாக இருக்கலாம். ராமாயண காலம் பொய்யானது... சரியே! ஆதாரங்களும் கூட கொடுக்கப் பட்டுள்ளன. இதையும் ஏற்றுக் கொள்ளலாம். எல்லாம் சரி. ஆனால் இப்படி ஆதாரப் பூர்வமாக சான்றுகள் கொடுத்து விளக்கிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று சடுதியில் பக்திமான்களின் மனதைப் புண்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கற்பனைக் கதைக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்து சேற்றை வாரி இறைக்க வேண்டுமா?

கதையை கதை என்று மட்டுமே வாசிக்கலாம் தானே? இதில் தவறேதும் உண்டோ?

நீ இறை பக்தியோடு இரு, ராமனை வணங்கு. சீதையை அன்னையாய் பாவித்தே தீர வேண்டும் இல்லையேல் உயிர் சேதம்! எனும் கட்டாயம் இங்கே யாருக்கும் இல்லையே? பிறகேன் இத்தனை காட்டமான விமர்சனம்?! மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் குழப்பமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எந்த விதத்தில் சமுதாய நற்பணியாகும்?!

நீ சாமி கும்பிடுவாயா? சரி செய்துகொள் அது உனது உரிமை... எனக்கதில் நம்பிக்கை இல்லை. இது எனது உரிமை. இப்படி முடிப்பது நல்லதா? இல்லை சான்றுகளுடன் விளக்குகிறேன் சகலமும் என சகதியில் காலை விட்டுக் கொண்டு சிரிப்பது நல்லதா?

"அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் "

இந்தக் குறளை ஏனோ சொல்லத் தோன்றுகிறது இப்போது!

அஞ்ச வேண்டிய விசயங்களுக்கு அஞ்சி, அஞ்சத் தகாதவற்றுக்கு அஞ்சாது தெளிந்து குறைந்த பட்சம் பிறருக்கு நன்மை செய்யா விடினும்... தீமையோ, குழப்பமோ செய்வதில்லை எனத் தீர்மானித்து வாழ பல நல்ல கொள்கைகளையும் கொண்டது தான் இந்து மதம். இந்துக் கடவுள்களின் உருவத்துக்கும் அவற்றின் தோற்றத்தின் பின்னுள்ள புனைவுகளுக்கும் கூட சில நல்ல விளக்கங்கள் இருக்கலாம். வெறுமே வாதத்துக்காக நாம் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது.

இன்று தந்தை பெரியாரின் 140 வது பிறந்தநாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com