பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் விமர்சனம்...

சடலம் பிரிட்டிஷ் எல்லைக்கும், டச்சுக்காரர்களது எல்லைக்கும் நடுவில் அந்தப் பக்கம் தலை, இந்தப் பக்கம் முண்டமென விழுந்து கிடக்கிறது. இவ்விடத்தில் கொலை கொடூரமானது தான் என்றாலும் அதை நிகழ்த்த கொலைகாரன்
பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் விமர்சனம்...

நல்ல நிலத்தின் இயல்பு தன்னுள் தஞ்சமடைவதை எல்லாம் முளைத்தெழச் செய்யும் தாய்மைக் குணமே. அந்தக் குணம் நாவலின் நாயகி காமுவிடம் தாராளமாகவே இருக்கிறது. ஆதலின் அவளே நாவலின் பெயர்க்காரணமாகிறாள். அவளது வாழ்வெனும் சமூகக் காவியமே நல்ல நிலத்தின் கதை...

இந்த நாவலில் பல ஆண்கள் இருக்கிறார்கள், ஆனால், ஆளுமைத் திறன் மிக்கவர்களாகக் காட்டப்படுவது முற்று முழுதாக பெண்கள் மட்டுமே! ஆம், நல்ல நிலத்தை பெண்களே தம் இஷ்டப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ற வகையில் ஆள்கிறார்கள். அவர்களில் காமு நாயகி என்ற போதும் பிற கதாபாத்திரங்களையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவரவர் கோணத்தில், அவரவர் நியாயங்களுடன் நாவலுக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றனர்.

கீழைத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்துப் பெண் காமாட்சி, அவளுக்கு வரன் தேடி அலைகிறார்கள் பெற்றோரும், உற்றாரும். பல வரன்கள் தட்டிப் போக கடைசியில் மனசுக்குத் திருப்தியாக அதே வட்டாரத்தில் கடலோரக் கிராமமொன்றின் வரன் அமைகிறது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக அமைந்த அந்த வரனும் இரண்டாம் தாரமாக அமைந்து விடவே காமாட்சி அலைஸ் காமுவின் பெற்றோர் திக்கித்துப் போகிறார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ அவர்களால் அந்த வரனைப் புறக்கணிக்க முடியவில்லை. அப்படித்தான் சுப்புணி என்கிற சுப்ரமண்யம், காமுவின் கணவனாகிறான். காமுவுக்கு, சுப்புணியை பிடித்துப் போக நாவலில் அனேக காரணங்கள் இருந்த போதும் மனைக்கட்டையில் அமர்ந்து அவன் கரம் பற்றும் முன்பே பெண்ணழைப்பின் போது கண்ட துர்கனாவொன்றின் தாக்கம் மனதோடு தங்கி விட... அவளால் நாவல் முழுதுமே சுப்புணியை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாக கருதவே முடியவில்லை. சுப்புணியின் ராசி அப்படிப்பட்டது. அவன் ப்ரியம் வைக்கும் எவரையும் அவனால் கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றவே முடிந்ததில்லை என்றாகிப் போகிறது.

முதல் மனைவி அபயாம்பிகை பிள்ளப்பேற்றில் இறந்து விட, அவளுக்குப் பிறந்த பிள்ளை தொட்டிலில் சிணுங்கிக் கொண்டிருக்கும் போதே காமுவுடன் மனையில் அமர்ந்து கல்யாணக் கோலம் கொள்கிறான் சுப்புணி. பிள்ளைக்காகத் தான் கல்யாணம் என்று தொடங்கினாலும் அது மேலுமிரு பிள்ளைப்பேற்றுடன் இடைவழியில் தடைபட நமச்சிவாயம் காரணமாகிறான். நாவலின் இந்த இடத்தில் நாம் சுப்புணியின் குண விஷேசத்தைப் பற்றி சற்று அலசித்தான் ஆக வேண்டும். காமு அழுத்தம் என்றால்... சுப்புணி மகா அழுத்தம். சுப்புணி... அபயத்தின் மரணத்தின் பின் காமுவை மணக்கிறான் இல்லையா? அதனால் அவனுக்கு 2 மனைவிகள் மட்டுமே என்று யாரும் நினைத்து விடத் தேவையில்லை. அபயத்துக்கும், காமுவுக்கும் நடுவில் மீனவப் பெண் மீனாம்பாவுடனான உறவை அவன் எப்படியும் வகைப்படுத்தவில்லை என்பதால் அவளை சுப்புணியின் மனைவி இல்லை என்று கருதி விட முடியாது. ஏனெனில், சாட்சியாக அவர்களிருவருக்கும் ஒரு பிள்ளையும் இருக்கிறான். மேலும் மீனாம்பாள் காரணமாகத்தான் சுப்புணிக்கும், நமச்சிவாயத்துக்கும் கிராமத்தில் பகையே மூள்கிறது.

நமச்சிவாயத்துடன் தகராறு முற்றுவதற்கு முன்பான காலகட்டம் சுப்புணியின் வாழ்வில் சொர்க்கம். அவன், தனது வில்வண்டி பூட்டி புது மனைவியை அழைத்துக்கொண்டு செளரி ராஜப் பெருமாள் திருவிழா காணச் செல்கிறான், தன் அக்கா குடித்தனம் செய்யும் நாகபட்டிணம் செல்கிறான். அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறான். தங்களது குடும்பத்தின் புரவலர்களாக இருக்கும் பட்டணத்துக் காமாட்சியம்மாள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். முடிந்தவரையில் அவளுக்கொரு அருமையான கணவனாகவே நடந்து கொள்கிறான். எல்லாம் பெயருக்கு மாமனைத் திருமணம் செய்து கொண்டு பட்டணத்துப் பக்கம் கரையொதுங்கிய மீனாம்பா சுப்புணியின் ஊருக்குத் திரும்பி வரும் வரையில் தான்.

ஆரம்பத்தில் சுப்புணிக்கு, மீனாம்பாளுடனான உறவை நமச்சிவாயம் கிண்டல் செய்ய அதன் காரணமாகவே சண்டைகளும், சச்சரவுகளும் துவங்குகின்றன. நடுவில் இரு தரப்புக்கும் இடையிலான நிலத்தகராறும், பண்ணையாட்களுக்கிடையான தகராறும் சேர்ந்து கொள்ள அந்த சச்சரவு வளர்ந்து, வளர்ந்து பின்னொரு நாளில் கிராமத்துத் திருவிழாவில் பெரிய பிரச்னையாக வெடிக்கிறது. யாருக்கு முதல் மரியாதை என்பதில் நமச்சிவாயம் தரப்புக்கும், சுப்புணி தரப்புக்கும் பிரச்னை வெடிக்க நாளை என்னவாகப் போகிறதோ? என்று திகிலில் கிராமத்தில் பொழுது விடிய கூடவே காமுவின் வாழ்வில் அவளது இல்லறத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் விதத்தில் பிரளயமும் வெடிக்கிறது. காமுவுக்கும், சுப்புணிக்குமாக சந்தானம் பிறந்து நடைபயின்று கொண்டிருக்கும் பருவம் அது. மகனுக்கு சோறூட்டித் தூங்கச் செய்த காமுவுக்கு, கணவனிடத்தில் பகிர ஒரு சேதி இருந்தது. தலைச்சுற்றலுடன், வாந்தியுமாக பாடாய்ப் பட்டுக் கொண்டிருந்தவள் தான் மீண்டும் கருவுற்றதை கணவனிடம் பகிர நேரம் பார்த்து காத்திருந்தாள். ஆனால், மனைவி கருவுற்றதை அறியாமலே பொழுது விடிகையில் தலைமறைவாகிறான் சுப்புணி. இது பேரிடி என்றால் அடுத்தொரு பேரதிர்ச்சியாக ஊர் எல்லையில் கோரக் கொலையுண்டு கிடக்கிறான் வம்பிழுத்த நமச்சிவாயம்.

தலை வேறு... முண்டம் வேறாக துண்டான சடலம் பிரிட்டிஷ் எல்லைக்கும், டச்சுக்காரர்களது எல்லைக்கும் நடுவில் அந்தப் பக்கம் தலை, இந்தப் பக்கம் முண்டமென விழுந்து கிடக்கிறது. இவ்விடத்தில் கொலை கொடூரமானது தான் என்றாலும் அதை நிகழ்த்த கொலைகாரன் தேர்ந்தெடுத்த இடம் மிகச்சிறந்த நகைமுரண். அதனால் சடலத்தை அப்புறப்படுத்தவே சட்டச்சிக்கல் வந்து விடுகிறது. பிறகு எப்படியோ ஒருவழியாக வழக்கு விசாரணை துவங்குகிறது. சுப்புணி தலைமறைவானதால் அவன் தான் நமச்சிவாயத்தை கொன்றிருப்பானோ என்று ஒரு பக்கம் விசாரணையை முடுக்கி விடுகிறார் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி. மற்றொரு பக்கம் சுப்புணியை இந்த வழக்கிலிருந்து எப்படியாவது மீட்டு அவனுக்கும் கொலைக்கும் சம்மந்தமே இல்லை என நிரூபிக்கத் துடிக்கிறார்கள். சுப்புணியின் ஆதரவாளர்களான மாணிக்கம் பிள்ளையும், பஞ்சாங்கக்கார ஐயரும். 

இதற்கு நடுவில் சுப்புணி இல்லாமல் வாழவும், குடும்பத்தை சமாளிக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறாள் காமு. சுப்புணி இல்லாத காமுவின் வாழ்வில் இடைப்படும் ஒவ்வொரு நாளுமே அவளுக்கு ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தருகிறது. சுப்புணிக்கு, நமச்சிவாயம் கொலையில் சம்மந்தமிருப்பதை ஆதாரத்துடன் ஊர்ஜிதப்படுத்த வேண்டிய கடமை காவல் அதிகாரிக்கு இருப்பதால், அவர் ஊரார் யாரும் சுப்புணி குடும்பத்துடன் அன்னந்தண்ணி புழங்கக் கூடாது என ஆணையிடுகிறார். மீறினால் தண்டிக்கப்படும் பயம் இருந்ததால் ஊரில் பெரும்பாலானோர் காமுவுடன் பேசவும் பயந்தனர். அச்சூழ்நிலையில் காமுவுக்கு ஆறுதலாக இருந்தவர்கள் ஒரு சிலரே! அவர்களில் மாணிக்கம் பிள்ளை காமுவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து ஆரம்பம் முதல் இறுதி வரை உதவக்கூடியவராக் இருந்தார். பஞ்சாங்கக்கார ஐயரும் அவரது மனைவியும் கூட காமுவுக்கு அவர்களால் ஆன ஆறுதலைத் தர எப்போதும் தயாராக இருந்தார்கள். இவர்களைத் தவிர அய்யாக்கண்ணு குடும்பத்தின் சேவையைப் பற்றிப் பேச நாளெல்லாம் போதாது. அந்தக் குடும்பம் சுப்புணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வருக் வரையிலும் கூட காமுவுடன் தான் ஒத்தாசையாக இருந்தது. தகப்பன் வீட்டார் இருந்தும் கூட, திருமணமான பெண் புக்ககத்தை விட்டு வாழாவெட்டியாக பிறந்தகம் செல்வது தனக்கு மட்டுமல்ல தன் பெற்றோருக்கும் இழுக்கு எனக் கருதிய காமு, கணவன் இல்லாத வீட்டில் தானே அனைத்துமாக இருந்து அவனது சொத்துக்களைப் பரிபாலனம் செய்யத் தைரியம் பெற்றது மேற்கண்ட உபகாரிகளின் பலத்தில் தான்.

சுப்புணி ஊரை விட்டுச் சென்றதும் சென்றான்... ஊர் கணக்குப் பிள்ளைக்கு துளிர் விட்டுப் போச்சு கணக்காக அதுவரையிலும் ஓரளவுக்கு அடக்கி வாசித்துக் கொண்டிருந்த கணக்குப் பிள்ளை, தனது அதிகாரத்தின் பலத்தில் ஊர் பெண்டுகளை எல்லாம் ஆளத் துடிக்கிறான். அதிலும் கணவன் துணையற்று தனித்திருக்கும் பெண்கள் என்றால் அவனுக்கு அத்தனையும் தனதுரிமை என்ற எகத்தாளம். அப்படி எண்ணிக்கொண்டு தான் அவன் ஊருக்குப் புதிதாக குடித்தனம் வரும் மளிகைப்பொருள் வியாபாரி சாத்தூரானின் மனைவி சீத்தம்மாவில் தொடங்கி காமுவின் பக்கத்து வீட்டுக்காரி அம்மாக்கண்ணு வரை சரஸமாடத் தொடங்குகிறான். எங்கே சுப்புணி ஊருக்குத் திரும்பி வந்தால் தனது அதிகாரத்துக்கு பங்கம் வருமோ என்று பயந்த கணக்குப் பிள்ளை சுப்புணி திரும்பி வந்து விடக்கூடாது என்று எதிர்பார்க்கும் கூட்டத்தில் ஒருவனாகிப் போகிறான். நாவலைப்பொறுத்தவரை வில்லனென்றால் அது நமச்சிவாயமும், இந்தக் கணக்குப் பிள்ளையும் தான். 

இதன் நடுவே சுப்புணியின் அக்கா லட்சுமியிடம் வளர்ந்து வரும் அவனது மூத்த மகன் வேலு, அத்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியேறுமாறு ஒரு சம்பவம் நேர்ந்து விடுகிறது. காரணம் காமுவின் ஸ்னேகிதி அம்புஜம். கணவனை இழந்த அம்புஜத்துக்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என தன் அண்ணியிடம் கோரி ஒரு கிளப்புக் கடை வைத்துப் பிழைக்க சகாயம் செய்கிறாள் காமு. அம்புஜத்தின் கடை அதன் சுவைக்காக பிரபலமாகி அவளது வாழ்க்கைப் பாட்டிற்கு உதவுகிறது. வேலு அம்புஜத்தின் கடைக்குச் சென்று அவ்வப்போது ஏதாவது சாப்பிடுவதுண்டு. அத்தையிடம் கோபித்துக் கொண்டு அப்படி ஒரு நாள் அம்புஜத்தின் கடைக்குச் சென்று காத்திருந்தவனை... அவள் குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறானோ என்று அவனைத் தேடிக் கொண்டு அவ்விடம் வந்த அத்தை லட்சுமியே சந்தேகப்பட்டு விட அன்று ஊரை விட்டு ஓடியவன் தான் வேலு பிறகு எவர் தயவிலோ கப்பலேறி ரங்கூனுக்குப் போகிறவன் அங்கே போர் முற்றிய நிலையில் அகதியாக கால்நடையாகவே இந்தியாவுக்கு தப்பி வர வேண்டியவனாகி விடுகிறான்.

நாவலை விமர்சனம் செய்கிறேன் என்று மொத்தக் கதையையும் சொல்லத் தொடங்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.

நிற்க.

நல்ல நிலம் நாவலை நான் இருமுறை முழுதாக வாசித்திருக்கிறேன். முதலில் வாசித்தது என் கல்லூரி நாட்களில். அப்போது அம்மாவின் பள்ளி நூலகத்தில் இருந்து புத்தம் புது காப்பியாக ‘நல்ல நிலம்’ வாசிக்கக் கிடைத்தது. அப்போதும் சரி, தினமணியில் பணிக்கு வந்த பின் சில மாதங்களுக்கு முன்பு விமர்சனம் எழுதுவதற்காகவென்றே வாசிக்க கிடைத்த இரண்டாம் வாய்ப்பிலும் சரி புத்தம் புது காப்பியாகவே ‘நல்ல நிலம்’ என்னை வந்தடைந்தது. இரண்டு முறையிலுமே இந்த நாவலை என்னால் 3 நாட்களுக்குள் வாசித்து முடிக்க முடிந்ததின் காரணம் பிரதான அதன் எளிய சரளமான நடை மட்டுமல்ல. கதை மாந்தர்களின் குணாதிசயங்களுடன் எளிதில் பொருந்திப் போக முடிந்த உளவியல் காரணங்களாலும் தான்.

காமுவைப் போன்ற தன்னியல்பான தைரியம் கொண்ட பெண்களை தெற்கத்தி சம்சாரி வீடுகளிலும் அனேகமாகக் காண முடியும். அந்தப் பெண்கள் மிகுந்த வைராக்யம் கொண்டவர்கள். கணவனே தங்களை புறக்கணிக்க நேர்ந்தாலும் அல்லது கைவிட நேர்ந்தாலும் அதை கடப்பாறையை விழுங்கினாற்போல் ஜீரணித்துக் கொண்டு அடுத்தென்ன? என்று உழைக்கத் துணிந்து விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு இழப்பைக் காட்டிலும் நிதர்சனத்தின் மீதான பொறுப்புணர்வுகள் அதிகம். குடும்ப அமைப்பைப் பொறுத்த வரை எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு அத்தனை நிறை, குறைகளையும் தன் தலை மீது தாங்கிக் கொள்ள சித்தமாகவே இன்றைக்கும் அந்தப் பெண்கள் இருக்கிறார்கள் எனில் அதன் அசைக்க முடியா ஆதாரங்களாக நின்றவர்கள் காமு போன்ற மூத்த தலைமுறை பெண்களே!

சுப்புணி இல்லாவிட்டால் என்ன? அவனது சொத்துக்கள் இருக்கின்றன. அவனளித்த குழந்தைச் செல்வங்கள் உண்டு. ஒத்தாசைக்கு பெற்ற தாய், தகப்பனைப் போன்ற மாணிக்கம் பிள்ளை குடும்பம் உண்டு. இவர்களின் தயவில் நான் வாழ்ந்து காட்டுகிறேன் என்று அந்தப் பெண்மணி வாழ்ந்து காட்டுகிறாள். உண்மையில் நாவலில் நாயகன் என்று சுப்புணியைச் சொல்லத் தேவையே இல்லை. அந்தக்கால ஜெமினி கணேஷன் கதையாக அவன் ஏதோ நாவலில் சூழ்நிலைப் பிராணியாக வந்து போகிறான். ஆனால் நாயகி என காமுவைத் தாராளமாக பாராட்டலாம். நாவலில் பல இடங்களில் காமுவைக் கொண்டாடத் தோன்றுகிறது. அவளெடுக்கும் முடிவுகள் அனைத்துமே மிகச்சரியானதாகவும், அனுசரணையானதாகவுமே இருக்கின்றன. 

ஆனால், ஊரை விட்டு ஓடிய சுப்புணி தென்னாப்பிரிக்கா சென்று அங்கே வைரச் சுரங்கங்களில் தொழிலாளியாகவும், கடத்தல் காரனாகவும் படாதபாடு பட்டு, குண்டடி பட்டு நினைவிழந்து கிடைக்கையில் கூட அவனுக்கு ஒரு பெண் துணை தேவையாயிருக்கிறது. அப்படித்தான் அவன் வாழ்வில் நான்காவதாக ஒரு பெண் நுழைகிறாள். அவளைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற நிலையில்... அங்கே அவர்களையும் அம்போவென விட்டு விட்டு இந்தியா திரும்புகிறான். 

15 முழு ஆண்டுகள். சுப்புணி விட்டுப் போன ஊர் அப்படியேவா இருக்கும்?!

இல்லை ஊரும் இல்லை. ஊர் மனிதர்களும் இல்லை. 

சுப்புணி விட்டுச் சென்ற சொத்துக்களும் கூட இன்று அவனுடையதாக இல்லை. 

மொத்தத்தையும் துறந்து டவுனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுப்புணி வசிக்கத் தொடங்க தென்னாப்பிரிக்காவில் இருந்து மனைவி இறந்த செய்தியோடு அவனது குழந்தைகள் இருவரும் இந்தியா வந்து சேருகிறார்கள். ஆக, சுப்புணி அப்போதும், இப்போதும் பொறுப்பில் இருந்து கழன்று கொள்ள நினைக்கக் கூடிய ஆத்மா அல்ல என்றாலும் அவனது விதி அவனை எப்போதுமே, தன்னை நம்பியவர்களைக் கைவிட்டு விடும் இக்கட்டிலேயே நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது. 

நாவலில் சுப்புணி, தான் இல்லாத போது தனக்குப் பிறந்த குழந்தை ‘பாப்பாவை’ முதல் முறை சந்திக்கும் இடமும்,  மீனாம்பாளின் மகனான அந்த நாடகக் காரனை சந்திக்கும் இடமும் மிகவும் ரசமானவை. வாழ்க்கை மனிதர்களை வைத்து இப்படித்தான் சதிராடுகிறது. இந்த சதிராட்டத்தில் உறவுகள் எங்கெங்கே சிதறுகின்றன? மீண்டும் எப்படி ஒன்று சேருகின்றன? பிரிகின்றன? கிளர்கின்றன? மனஸ்தாபம் கொள்கின்றன என்பதில் இருக்கிறது ஆட்டத்தின் சுவாரஸ்யம். அப்படியான சுவாரஸ்யங்கள் ‘நல்ல நிலத்தில்’ நிறைய உண்டு.

சொல்ல மறந்து விட்டேன்... நாவலின் இடைச்செருகலாக மாணிக்கப் பிள்ளை, கோகிலத்தம்மாள் உறவு, மேரி, பட்டாளத்துக்காரர் கதை, நமச்சிவாயம், சீத்தம்மாளுக்கிடையிலான உறவு பேதங்கள் எல்லாம் தன்னியல்பாக விவரிக்கப்பட்டிருக்கும் விதம் அசாதாரணமானது.

கடைசியில் 15 ஆண்டுகளின் பின்னும் கூட  சுப்புணி நாடு  திரும்புகிறானே தவிர அவனால் தான் விட்டுச் சென்ற வீட்டுக்கு மட்டும் திரும்பவே முடியவில்லை.

ஏனெனில் அவன் கை விட்டுச் சென்றது வீட்டை அல்ல, மனைவியின் நம்பிக்கை எனும் கோட்டையை.

நமச்சியவாயம் கொலை வழக்கில் சுப்புணி நிரபராதி. அதனால் அவனுக்கு தண்டனை இல்லை. வழக்கு காலாவதியாகி விடுகிறது. ஆனால், மனைவியின் நம்பிக்கையை சிதைத்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகி அவளை என்றென்றைக்குமாக நெருங்க முடியாதவனாகி விட்டான்.

ஆம், நல்ல நிலம் நாவலைப் பொறுத்தவரை காமுவே எல்லாம். அவளே குடும்பத்தை நடத்துகிறாள், அவளே பிள்ளைகளை வளர்க்கிறாள், அவளே விவசாயத்தையும் நடத்துகிறாள், தன்னை நம்பியவர்களுக்குப் படியுமளக்கிறாள். தீய எண்ணம் கொண்டவர்களை சாடித் துரத்துகிறாள். தன்னைப் போலவே இன்னலுற்ற ஆத்மாக்களுடன் இணைந்து கொஞ்சம் கண்ணீரும் சிந்துகிறாள். ஆறுதல் கூறித் தேற்றுகிறாள், முடிவில் பிள்ளைகளுக்குத் திருமணமும் செய்து வைக்கிறாள். இதில் சுப்புணிக்கு எந்த வேலையும் இல்லை. அவன் இருந்த போது எப்படியோ, ஆனால், ஒருமுறை கை விட்டுச் சென்று மீளும் போது அவனுக்கான முக்கியத்துவம் குடும்பத்தில் குறைந்து விடுகிறது. குடும்பத்தைப் பொறுத்தவரை காமுவே ஆட்சி செய்கிறாள். ஆயினும் அவள் தன் வாழ்க்கையை இந்த சமூகம் கட்டமைத்த  ‘பெண்மை’ யின் இலக்கணத்துக்கு குந்தகம் விளையாத வண்ணம் ஆற்றலுடன் நடத்திச் செல்கிறாள். அங்கு தான் வாசகர்களின் மனதில் வேரூன்றி  நிற்கிறாள்.

நல்ல நிலம் நாவலைப் பற்றி இப்படி சொல்லி கொண்டே செல்ல விஷயங்கள் நிறைய உண்டு. ஆனால், வாசிக்கும் ஒவ்வொரு முறையுமே அது வெவ்வேறு விதமான புரிதலையும், அனுபவங்களையும் தருவதாகவே இருக்கிறது.

கூடுதலாக நாவல் முழுதுமே கால ஓட்டத்துடன் நழுவிச் செல்வதாக இருப்பதால் அன்று நடந்த உப்புச் சத்யாக்கிரகத்தைப் பற்றிய செய்திகள் அதில் உண்டு. காமுவின் தம்பி முத்துசாமி உப்புச் சத்யாகிரஹியாக முயன்று கை உடைந்தவனாக ஒரு இடத்தில் தஞ்சமடைகிறான். அங்கே அவனுக்கு உதவியாக இருந்த கைப்பெண்ணுக்கும், அவனுக்குமிடையே முகிழ்க்கும் ஆத்மார்த்தமான சினேகம் தொடரப் படாமல் அறுந்தது எதனால் என்று புரியவில்லை. ஒருவேளை விதவா விவாஹம் அப்போது கீழத்தஞ்சையில் வழக்கத்தில் இல்லையோ? மீண்டு வரும் முத்துசாமி பாட்டியின் ஆசைக்காக காமுவின் மகள் பாப்பாவை மணக்கிறான்.

நாவலில் காமுவின் தோழியாக வரும் அம்புஜத்தின் கணவனும், முத்துச்சாமியும் காங்கிரஸ் அபிமானிகளாகவும் காந்திஜி மீது பற்று கொண்டவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். அதன் காரணமாக தங்களது சொந்த வாழ்வைச் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொள்ளும் யத்தனமே இருவரிடத்திலும் மிகுந்திருப்பதை நாவலில் காணமுடியும்.

மீனாம்பாளின் மகன் ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நாடகக் காரனாகிறான். யார் கண்டது? இந்த நாவல் உண்மைக் கதை எனில் அந்தப் பையன் பின்னாட்களில் திரைத்துறையில் ஒரு லெஜண்ட் ஆக இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அப்படித்தான் இருக்கிறது அவனது பாத்திரச் சித்தரிப்பு.

செளரி ராஜப் பெருமாள், மீனவராஜன் மகளை மணந்ததால் மீனவக் குடியில் ஓரிரவு தங்கும் சம்பிரதாயம் குறித்து இந்த நாவல் மூலமாகத் தெரிந்து கொண்டது சுவையாக இருந்தது.

அதுமட்டுமல்ல, மீனாம்பாளின் கோலா மீன் வறுவல்.
காமு ஆக்கும் பதனீர் சோறு...
லட்சுமி வைக்கும் மீன் குழம்பு, கடைக்குச் சென்று பார்சலில் வாங்கி வரும் கிளப்புக் கடை காப்பி.
அம்புஜம் கிளப்புக் கடையில் வாழைச் சருகில் கட்டித் தரும் மசால் வடை...
அவசரத்துக்கு காமு அரைத்துக் கொள்ளும் காரசாரமான பாசிபயறு துவையல்.
குழந்தை வேலுவின் பவுண்டெய்ன் பேனா மோகம்.
மாமன் காத்தமுத்துவுக்கு தான் பெறாத பிள்ளை வேலுவின் மீதான பாசம்.
கிராமத்து காமன் பண்டிகை, விதைப்புச் சடங்கு... என்று எல்லாமுமே நல்ல நிலத்தில் சுவாரஸ்யம் கூட்டும் அனுபவங்களே!

வேலு ரங்கூனில் இருந்து அகதியாக மீண்டு வருகையில் சந்திக்கும் அனுபவங்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையினரில் வாசிப்பு ஆர்வமுள்ள அத்தனை பேரும் வாசித்து உணர வேண்டிய அற்புதமான விவரணைகள்.  பர்மியக் காடுகளில் இருக்கும் அகதிகள் முகாமில் பாதுகாப்பின்மையால் கரடியால் தூக்கிச் செல்லப்பட்ட பெண்... மீட்கப் பட்ட பின்பும் வாழ விரும்பாமல் மலையுச்சியில் இருந்து விழுந்து இறப்பது கொடுமை. இவையெல்லாம் மிக நுண்மையான தகவல்கள். அந்த வகையில் இந்நாவல், கதை நிகழ்ந்தை காலகட்டத்தை மிகத்துல்லியமாக வாசகர்களுக்குக் கடத்தத் தவறாத நாவல்களில் ஒன்று எனலாம். ஒருவகையில் நாடிழந்து துரத்தப்பட்டவர்களின் அனுபவங்கள் அனைத்துமே ‘மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குதல்’  எனும் ஒற்றைப் புள்ளியில் ஒன்று சேர்வதாக அமைகின்றன. அது ஈழ அகதியாக இருந்தால் என்ன? ரங்கூன் அகதியாக இருந்தால் என்ன? இல்லை இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக் காலத்து அகதிகளாகவே இருந்தாலும் தான் என்ன? அவர்கள் இழந்தவற்றின் மீதான் வலியை அவர்களால் பின்னெப்போதும் கடக்க முடிந்ததே இல்லை.

நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் ஓவியர் கோபுலுவின் கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தக்க ஓவியங்கள். கோபுலுவின் கைவண்ணத்தில் பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை நாவலின் பெண் கதாபாத்திரங்களின் பேரழகு.

மீண்டும் காமுவுக்கு வரலாம்.  ‘நல்ல நிலம்’ வாழ்வின் சகலவிதமான அனுபவங்களையும் தாங்கி நிற்கும் வெகு சுவாரஸ்யமானதொரு நாவல். ஜெயமோகன் முதல் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் மற்றும் வாசகர்களில் பலராலும் கூட நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்றாகப் பலமுறை பரிந்துரைக்கப் பட்ட நாவலும் கூட.

ஆர்வமிருப்பவர்கள் வாங்கி வாசித்து விட்டு உங்களது வாசிப்பு அனுபவத்தை தினமணி இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். 

நாவல்: நல்ல நிலம்
ஆசிரியர்: பாவை சந்திரன்
வெளியீடு: கண்மணி கிரியேஷன்ஸ்
பக்கம்: 838
விலை: ரூ 600

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com