இந்திய பண்பாட்டு மரபை கட்டுடைத்த யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல் விமர்சனம்!

இந்த நாவல் கன்னட இலக்கியப் பரப்பில் பெருத்த அதிர்வலைகளை எழுப்பியது. மத்வ பிராமணர்களின் மத நம்பிக்கைகளைக் குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு மனம் போன போக்கில் எழுதப்பட்ட நாவல் எனக் கூறி  நாவலுக்கு தடையும்
இந்திய பண்பாட்டு மரபை கட்டுடைத்த யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல் விமர்சனம்!

யு.ஆர் அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவல் அது வெளிவந்த காலகட்டத்தில் மிகப்பெரும் சமூக கொந்தளிப்புக்கு உள்ளானது. கதை வெகு சிம்பிளானது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும், பின்னுமாக நாட்டில் எங்கும் நடக்காத கதை இல்லை. ஆனால் அந்த நாவல் அந்தக் காலகட்டத்தில் கன்னட மத்வ பிராமணர்களிடையே மிகப்பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டது. இத்தனைக்கும் கதை என்ன என்று கேட்டீர்களானால்?

துர்வாசபுரம் என்றொரு கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மத்வ பிராமணர்கள். அவர்களுக்கு ஜாதி ரீதியாக கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. அந்தக் கட்டுப்பாடுகளை அவரவர், அவரவருக்கு உகந்த வழிகளில் பின்பற்றிக் கொண்டு தாங்கள் கட்டுசெட்டாக சம்பிரதாயங்களும், மடியும் கெடாமல் வாழ்வதாக நம்புகிறார்கள். இவர்களுக்கு ஒரு தலைவர் உண்டு. அவர் பிராணேஸ்சாச்சாரியார். அவர் சிறு வயதிலேயே காசிக்குச் சென்று வேதம் பயின்று பல்வேறு சபைகளில் பிராமண ஆச்சார்யார்கள் பலர் முன்னிலையில் தனது ஞானத்தை நிரூபித்து துர்வாசபுரம் மீண்டவர். அப்பழுக்கற்ற அந்த ஆத்மாவின் ஒரே லட்சியம், கடவுள் கிருபையையே வாழும் முறைமையாகக் கொண்டு முக்தி அடையவேண்டும் என்பது மாத்திரமே. இதற்காகத்தான் அவர் தெரிந்தே நோய்மை மிகுந்த, இல்லற சுகமளிக்க இயலாத பெண்ணொருத்தியை வேண்டி விரும்பி திருமணமும் செய்து கொள்கிறார். திருமணம் செய்த கையோடு அவளுக்கு வேண்டிய சிசுருஷகளை எல்லாம் கூட தெய்வகாரியம் போல கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருக்கிறார். அதனால் மோட்சம் கிட்டும் என்பது அவரது நம்பிக்கை. இதனால் எல்லாம் கூட அந்த ஊர் பிராமணர்களிடையே அவர் மீதான நம்பிக்கையும், மதிப்பும் பன்மடங்காகக் கூடி நிற்கிறது.

துர்வாசபுரத்தில் ஒரு புறத்தில் சாத்வீக குணத்துடன் இப்படி ஒரு கர்ம ஞானி வாழ்ந்து கொண்டிருக்க, அந்தப்புறத்திலோ நாராயணப்பா என்றொரு ஏகாந்தியும் வாழ்கிறார். இந்த நாராயணப்பாவும் அதே மத்வ பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவரே. ஆயினும், பிராணேஸ்சாச்சாரியரைப் போன்ற மத நம்பிக்கைகளோ, கர்மா குறித்த அச்சமோ, தனது சமூகம் பின்பற்றும் மடி ஆசாரம் குறித்த பயமோ இவரிடத்தில் இல்லை. மாறாக பூலோக சுகங்கள் அத்தனையையும் அனுபவிக்கத் துடிக்கும் வேகம் மட்டுமே மிகுந்த ரஜோ குண ஆக்ரமிப்பில் சிக்கிய ஏகாந்தியாக இவர் வாழ்கிறார். இவருக்கு கம்பெனி கொடுக்க சந்திரி என்றொரு தேவதாசிப் பெண் வேறு வீட்டோடு இருந்து அவரது வாழ்க்கையை உல்லாசமாக்கிக் கொண்டிருக்கிறாள்.

ஊர் சும்மா இருக்குமா? நாராயணப்பாவைத் தூற்றுகிறது. அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்ய காரணம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாத, தனது இன்ப வாழ்க்கை மட்டுமே லட்சியமாகக் கொண்ட நாராயணப்பா அதற்கான வாய்ப்பையும் தானே உருவாக்கித் தருகிறார். ஒருமுறை கோயில் குளத்தில் இருந்து இறைவனுக்கு அர்ப்பணித்திருந்த பரிசுத்தமான மீனைப் பிடித்து அவரும், அவரது நண்பர்களும் சமைத்துச் சாப்பிட்டு விட. குரங்கு ஆப்பில் வந்து உட்கார்ந்த கதையாக நாராயணப்பா துர்வாசபுரம் பிராமணர்களின் வாய்க்கு வாய் அவலாகிப் போகிறார். மொத்த பிராமணர்களும் பிராணேஸ்சாச்சாரியார் தலைமையில் ஒன்று கூடி அவரது ஆணைக்கிணங்க நாராயணப்பாவை ஊரை விட்டும், ஜாதியை விட்டும் விலக்கி வைக்கத் தீர்மானிக்கிறார்கள். நாராயணப்பா விஷயத்தில் அவர் ஜாதிக் கட்டுமானங்களுக்க் இணங்காத போது கூட அவரை மன்னிக்கத் தயாராக இருந்த பிராணேஸ்சாச்சாரியாரின் மனம் இம்முறை அவரை மன்னிக்கத் தயாராக இல்லை.

ஊரை விட்டு பிரஷ்டம் செய்யப்பட்ட பின்னும் கூட நாராயணப்பாவின் ஏகாந்த வாழ்வில் பெரிதாக எந்த மாற்றங்களும் வந்து விடவில்லை. அவர், அவரிஷ்டத்துக்கு வாழ்ந்து தீர்க்கிறார். மது, மாது, மாமிஷம் மூன்றுமின்றி நாராயணப்பா இல்லை எனும் நிலை. பரம்பரை பணக்காரரான நாராயணப்பாவுக்கு மனைவியோ, வாரிசுகளோ இல்லை. அவரைப் பற்றி கவலைப்பட அன்றைய தேதியில் அவருடன் ஒட்டிக்கொண்டிருந்த தாசி சந்திரி மட்டுமே இருந்தாள். இந்நிலையில் ஒருமுறை சிமோஹாவுக்கு சென்று திரும்பிய நாராயணப்பாவுக்கு கடும் காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது. ஊரை விட்டு ஒதுக்கப்பட்டதால் அத்யாவசியமான எந்த வசதிகளும் கிட்டாமல் சீக்கிரமே நாராயணப்பா விஷஜூரம் முற்றி இறந்து விடுகிறார். இப்போது சந்திரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் தேவதாசி என்றாலும் கூட, இத்தனை நாள் தன்னுடன் வாழ்ந்த அந்த மனிதரின் உடலை நாற விட்டுவிட்டு அப்படியே போட்டது போட்டபடி தன்னிஷ்டத்துக்கு ஓட அவளால் முடியவில்லை. இறந்தவரின் உடலை தகனம் செய்ய ஏதாவது ஏற்பாடாக வேண்டுமே என அவள் ஊர்த்தலைவரான பிராணேஸ்சாச்சாரியாரை நாடுகிறாள்.

அதற்குள் நாராயணப்பா இறந்த செய்தி ஊர் மக்களுக்குக் தெரிந்து விட அவர்களும் கூட சடலத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்து அறிந்து கொள்ள பிராணேஸ்சாச்சாரியாரையே நாடி வருகிறார்கள். அவர் இதற்கு வேத புத்தகங்களில் ஏதேனும் தீர்வு இருக்கிறதா? ஜாதி பிரஸ்டம் செய்யப்பட்டவர்களது ஈமச்சடங்குகளை யார் செய்வது என்பது குறித்து தான் இதுவரை கற்றறிந்த ஸ்மிருதிகளில் ஏதேனும் குறிப்புகள் உண்டா என அறிந்து கொள்ள பல்வேறு ஏடுகளைப் புரட்டிக் குப்புறக் கவிழ்த்துப் பார்க்கிறார். ம்ஹூம் எதிலும்... ஒன்றுமில்லை.  வேறு வழியின்றி, காட்டுக்குள் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயம் சென்று அங்கிருக்கும் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையில் வாலில் இருந்து நெற்றி வரை பொட்டிட்டு ஒரு விசேஷ பூஜை செய்தால் ஒருவேளை அந்த ஹனுமனே நேரில் தோன்றி தங்களுக்கு வந்திருக்கும் பிரச்னைக்கு உபாயம் சொல்வார் என நம்பி பச்சைத்தண்ணீர் பல்லில் படாமல் பிராணேஸ்சாச்சாரியார் காட்டுக்கோவிலில் பூஜையில் இறங்குகிறார். 

இந்தப்பக்கம் சந்திரி தனது பிரச்னைக்கு தீர்வு காண முடியாமலும், பசி தாங்க முடியாமலும் காட்டு வாழை மரத்தில் இருந்து பழங்களைப் பறித்து உண்டு விட்டு பிராணேஸ்சாச்சாரியாரைத் தேடி வருகிறாள். நல்ல இருட்டு... ஹனுமன் கூட தனது வேண்டுதலுக்கு இணங்கி நேரில் வந்து தரிசனம் தந்து அபயமளிக்காத நிலையில் தான் கொண்டிருந்த பக்தியின் மீதே சஞ்சலம் கொண்டு தன்னைத்தானே நிந்தித்தவராக பிராணேஸ்சாச்சாரியாரும் கால் போன போக்கில் அதே காட்டுவழியில் சந்திரிக்கு எதிரில் நடந்து வருகிறார். எதிரில் வரும் நபரின் முகம் தெரியாத அளவிற்கு அந்தகாரம் சூழ்ந்திருக்க இருவரும், ஒருவர் மீது ஒருவர் மோதி அப்படியே உருண்டு கீழே விழுகின்றனர். 

சந்திரி நல்ல வாளிப்பான பெண். அவளது அங்க அவயங்கள் ஒரு தேர்ந்த சிற்பியின் கைவண்ணத்தில் உருவான அபாரமான சிலை போன்று ஈர்க்கத் தக்க அம்சம் கொண்டவை. சந்தர்பம் அமையாத வரை சரி. ஆனால், பிராணேஸ்சாச்சாரியார் இதுவரையிலும் சந்திரியை அருவறுத்தே வாழ்ந்து வந்த காரணத்தால் அவளைப் பற்றி பெரிதாகச் சிந்தித்தது கூட இல்லை. ஆனால், மடியில் வந்து விழுந்த தேவதாசியின் மிருதுவான ஸ்பரிஷம் அவர் இதுவரையிலும் தன் வாழ்வில் அனுபவித்திராத இந்திரானுபவம். நோய்மை கொண்ட மனைவிக்கு இயற்கை உபாதை முதல் உடல் தூய்மை வரை அனைத்தும் அவரே செய்து பரிபாலினம் செய்து வந்திருந்தாலும் சந்திரி போகத்துக்காகவே லாவண்யம் மிக்கவளாக வளர்க்கப்பட்டவள் என்பதால் அவளது உடற்ஸ்பரிசத்தின் அருகாமையில் பிராணேஸ்சாச்சாரியார் தன்னை இழக்கிறார். சந்திரிக்கு, பிராணேஸ்சாச்சாரியார் பால் நிறைந்த மரியாதை இருந்ததோடு... அவர் மூலமாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் அப்போது உதயமாக இருவரும் ஒன்றாகின்றனர். கொண்ட மயக்கம் தெளிந்த பிராணேஸ்சாச்சாரியார் விழிந்தெழுகையில் அவரால் சந்திரிகையின் மேல் படிந்திருந்த தனது கரங்களை விலக்கிக் கொள்ள முடிந்ததே தவிர தான் செய்து விட்ட பிழையில் இருந்து விலக்கிக் கொள்ள முடியாதவராகிப் போகிறார்.

அப்படியே ஊர் திரும்பி தன்னை குருவாக மதிக்கும் ஊர்மக்களை எதிர்கொள்ளவும் அவரிடத்தில் திராணி இல்லை.

வீட்டில் விட்டு வந்த மனைவிக்கு என்ன ஆயிற்றோ? என்ற குற்ற உணர்வு வேறு அவரை உந்தித் தள்ளுகிறது.

நாராயணப்பாவின் சடலத்தை தகனம் செய்ய எந்த ஒரு உபாயமும் கிட்டாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

மிக, மிகக்கட்டுப்பாடான கிராமம்... அதை விட்டு பழம்பஞ்சாங்கத் தனமான மூடநம்பிக்கை மிகுந்த பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களைத் துளியும் கை விட விரும்பாத அதன் பத்தாம்பசலி மக்கள். அவர்களின் ஒரே நம்பிக்கையான பிராணேஸ்சாச்சாரியாரும் ஊரை விட்டே மறைந்த நிலையில் திக்குமுக்காடிப் போகின்றனர். இத்தனை நாட்களும் அதே கிராமத்தின் ஒருமூலையில் இருக்கும் தனது வீட்டில் பிணமாக நாறிக் கொண்டிருக்கிறது நாராயணப்பாவின் சடலம்.

இறந்தவரின் சடலம் அகற்றப்படவில்லை. மத்வ பிராமணர்களின் சட்டத்திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி ஜாதிப் பிரஸ்டம் செய்யப்பட்டவரோடு பிற பிராமணர்கள் எவ்வித உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. அது மட்டுமல்ல, மத்வ பிராமணர் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் தொட்டெடுத்து தகனம் செய்வதற்கும் கூட அவர்களது மதநம்பிக்கை முறைப்பாட்டில் இடமில்லை. எனவே ஊருக்குள் பிணத்தைப் போட்டு வைத்துக் கொண்டு செய்வதறியாது விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் துர்வாசபுர மக்கள்.

இதற்கு நடுவில் ஊருக்குள் அழையா விருந்தாளியாக  ‘பிளேக்’ வந்து அலாக்காகப் பல உயிர்களைக் கொத்துக் கொத்தாகக் கொண்டு போகிறது. பிளேக் மரணங்களை பிணம் எரிக்கப்படாததால் வந்த தெய்வ குத்த மரணங்கள் என நம்புகிறார்கள் அக்கிராம மக்கள்.

ஊரை விட்டு ஓடிய பிராணேஸ்சாச்சாரியார் பசியோடும், குற்ற உணர்வோடும் பல இடங்களுக்கு அலைக்கழிகிறார். அவரால் தனது குற்ற உணர்வோடு போராட இயலவில்லை. அந்த உணர்விலிருந்து வெளியேற நினைத்து அவர் பல முடிவுகளை எடுத்துச் செயல்படுத்திப் பார்க்கிறார். ஒன்றும் பலன் தராத நிலையில் மீண்டும் தனது ஊருக்கே திரும்பி தான் செய்த தவறை பொதுவில் ஒப்புக் கொள்வது என அவர் முடிவெடுத்த நிலையில் நாவலின் க்ளைமாக்ஸ் வந்து விடுகிறது. க்ளைமாக்ஸ் என்னவென்று நீங்கள் நாவல் வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாவல் வெளிவந்த காலகட்டம் 1970களில். அன்றைக்கிருந்த சமூக கட்டுப்பாடுகளிடையே இந்த நாவல் கன்னட இலக்கியப் பரப்பில் பெருத்த அதிர்வலைகளை எழுப்பியது. மத்வ பிராமணர்களின் மத நம்பிக்கைகளைக் குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு மனம் போன போக்கில் எழுதப்பட்ட நாவல் எனக் கூறி  நாவலுக்கு தடையும் விதித்தார்கள்.

ஆயினும் எத்தனை தடை வரினும் இன்று வரை பேசப்படத்தக்க எழுச்சி மிகுந்த விவாதங்கள் பலவற்றை எழுப்பத்தக்க வகையில் இந்நாவல் தனக்கானதொரு சமூக அங்கீகாரத்தை உள்ளபடி சம்பாதித்திருக்கிறது என்பது நிஜம்.

அளவில் சிறிதான இந்த நாவல் உள்ளடக்கியுள்ள சமூக எதிர்ப்புணர்வுகளில்;

வழி வழி வந்த சம்பிரதாய மடமைகள், சம்பிரதாயம் மற்றும் தெய்வ அனுக்கிரகத்தின் பெயர் சொல்லி மடாதிபதிகள் காலம் காலமாக நிகழ்த்தி வரும் தனியார் சொத்து அபகரிப்புகள், நோயைக் கூட தெய்வ குற்றமென்றும், இறந்து போனவனின் ஆத்மா செய்யும் பில்லி சூனியம் என்றும் கருதத் தலைப்படும் கிராம மக்களின் மூட நம்பிக்கைகள், மோட்சத்துக்காக இகபர சுகத்தை வேண்டி விரும்பித் தவிர்க்க நினைக்கும் ஒரு பரிசுத்த ஆத்மா சுகத்தின் நெருக்கத்தில் அதைத் தவிர்க்க இயலாமல் தேனில் மூழ்கிய ஈயாக அதில் சிக்கித் தத்தளிக்கும் விதியின் திருவிளையாடல் எனப் பல லேயர்கள் விரிகின்றன.

சம்ஸ்காரா குறித்து விவாதிப்பவர்கள் மேற்கண்ட அத்தனை எதிர்ப்புகள் குறித்தும் பேசித்தான் ஆக வேண்டும்.

இந்நாவல் ‘சம்ஸ்காரா’ எனும் பெயரிலேயே கிரிஷ் கர்னாட் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியிடப்பட்டது. அதில் பிராணேஸ்சாச்சாரியாராக கிரிஷ் கர்னாட்டும், நாராயணப்பாவாக மறைந்த பி/லங்கேஷும் நடித்திருப்பார்கள். சந்திரியாக சினேகலதா ரெட்டி. படமும் மிகுந்த விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டே வெளிவந்தது.

நாவல்: சம்ஸ்காரா 
ஆசிரியர்: யூ.ஆர்.அனந்தமூர்த்தி
வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
வகை: மொழிபெயர்ப்பு நாவல் (கன்னடத்தில் இருந்து தமிழுக்கு)
விலை: ரூ 160

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com