லைஃப்ஸ்டைல்

டிராஃபிக் அதிகமா இருக்குற ஏரியால வசிக்கிறீங்களா? பக்கவாதம் வர வாய்ப்பிருக்கு.. கவனமா இருங்க..

1st Nov 2019 12:10 PM | Muthumari

ADVERTISEMENT

 

நாளுக்கு நாள் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுசூழலும் அதிகம் மாசுபடுகிறது. முக்கியமாக பெருநகரங்களில் பெரும்பாலாக அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. 

2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவலின்படி, உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் பட்டியலில் முதல் இடத்தை மும்பை நகரம் பிடித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் முறையே கொலம்பியோ மற்றும் பெரு நாட்டின் தலைநகரங்கள் இருக்க, நான்காம் இடத்தை இந்தியாவின் தலைநகரான டெல்லி பிடித்துள்ளது. 

அதேபோன்று, நம் நாட்டைப் பொறுத்தவரை மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில்  போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் அதிக வாகனங்களின் பயன்பாட்டினால் அந்நகரம் மிகவும் மோசமான சுற்றுசூழல் மாசுபாட்டை எதிர்கொண்டு வருகிறது அனைவருக்கும் தெரிந்ததே. 

ADVERTISEMENT

அதேபோன்று வேலை நிமித்தமாக மக்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். பின்னர் வசதி கருதி அவர்கள் அங்கேயே நிரந்தரமாக குடிபெயர்கின்றனர். இதனால் இந்நகரங்களில் மக்கள் தொகை அதிகம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியாக இருக்க, தலைநகர் சென்னையில் மக்கள் தொகை 70 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 10% க்கும் அதிகமாகும்.

சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் ஒரு பரபரப்பான சூழ்நிலையிலே காணப்படுகின்றனர். மேலும், அனைத்து வசதிகளையும் கருத்தில் கொண்டு புறநகர் பகுதிகளில் அல்லாமல், நகரின் உட்பகுதியிலே பெரும்பாலோனோர் குடிபுகுகின்றனர்.

பெரும்பாலாக அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே நீண்ட நெடும் சாலைகள் இருக்கும். அவ்வாறு டிராஃபிக் அதிகம் இருக்கும் சாலைக்கு அருகே வசிப்பவர்களுக்கு பக்கவாதம் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். சுற்றுச்சூழல் சுகாதார அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களில் இருந்து கார்பன் வெளியேற்றம் (CO2 emission) அதிகம் இருக்கும். இது பக்கவாதத்தை ஏற்படுத்துவதற்கான முக்கியக்  காரணியாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோமில் உள்ள சுற்றுசூழல் அமைப்பு மற்றும் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட், கோதன்பர்க் பல்கலைக்கழகம், உமியா பல்கலைக்கழகம், ஸ்வீடன் வானிலை மற்றும் நீர்நிலை நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஸ்வீடனில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்கள். இப்பகுதியில் உள்ள மக்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இப்பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய, ஆரோக்கியமான நபர்கள் 1,15,000 பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் இவர்களில் 3,100 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள போக்குவரத்து நெரிசல் அளவு, கார்பன் வெளியேற்ற அளவு உள்ளிவையும் கண்காணிக்கப்பட்டதில் போக்குவரத்து நெரிசல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 

போக்குவரத்து வெளியேற்றத்திலிருந்து 0.3 மைக்ரோகிராம்/கனமீட்டர் அளவுக்கு கார்பன் வெளியேற்றம் இருந்தால், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

சாலைகளில் வாகனங்களில் அதிகரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும்; வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த மாற்று எரிபொருளை உபயோகிக்க வேண்டும்; போக்குவரத்து விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுகின்றனர். 

பெருநகரங்களில் இதே நிலை நீடித்தால் நமது அடுத்தத் தலைமுறையினர் எம்மாதிரியான ஒரு சுற்றுச்சூழலில் வாழ்வார்கள் என்பதை நாமும் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT