அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி ஒருவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் கமாண்டர் கடித்தது.
வெள்ளை மாளிகையில் அதிபரால் வளர்க்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயால் கடிபட்ட சீருடை அதிகாரியான அவருக்கு அங்கே மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
வளர்ப்புப் பிராணிகளுக்கு வெள்ளை மாளிகைச் சூழல் அழுத்தமானதாக இருக்கலாம், அவற்றுக்கு உதவும் முயற்சிகளில் அதிபர் குடும்பத்தினர் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்று அதிபர் மனைவியின் தகவல் தொடர்பு இயக்குநர் எலிசபெத் அலெக்சாந்தர் தெரிவித்தார்.
2022 அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை சுமார் 10 முறை ரகசிய சேவைத் துறையினரை இந்த கமாண்டர் நாய் கடித்துள்ளது அல்லது தாக்கியிருக்கிறது. ஒரு முறை நாயால் தாக்கப்பட்ட சட்ட அமல் அலுவலர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லவும் நேரிட்டது.
அதிபர் மாளிகையில் பணிபுரிவோரிடம் ஆக்ரோஷமாக இருக்கும் அதிபரின் நாய்களில், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயான இரண்டாவது கமாண்டர் ஏற்கெனவே ஒரு முறை, ஒருவரைக் கடித்திருக்கிறது. பின்னர், நண்பர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
அதிபர் மற்றும் அவர் குடும்பத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அதிபர் மாளிகை வளாகத்திலேயே தங்கி ரகசிய காவல் துறையினர் கவனித்துக் கொள்கின்றனர்.