தற்போதைய செய்திகள்

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா?

30th Jun 2023 03:29 PM

ADVERTISEMENT

 

மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா். இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே இந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் இதுவரை சுமாா் 120 போ் பலியாகினா். 3,000-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனர். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரா்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. 

ADVERTISEMENT

பழங்குடியினருக்கு ஆதரவாக அந்தச் சமூகம் சாா்ந்த தீவிரவாதிகள், மைதேயி சமூக கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.

இந்த நிலையில் இதில் மத்திய அரசு தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல வாரங்களாக கோரியது. மேலும் பிரதமர் இதில் இதுவரை தலையிடாதது குறித்து கண்டனமும் தெரிவித்தது. 

ஜூன் மாதம், மணிப்பூரைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர், என். பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.

இதையடுத்து மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்துக்கு 4 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் சென்று வந்தார்.

இதனிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

மணிப்பூரில் புதிய வன்முறை
இந்த நிலையில் மணிப்பூரில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும், கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மணிப்பூரில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்களை அடுத்து மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை இன்று மாலை 4 மணியளவில் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, மணிப்பூர் முதல்வரின் செயலகம் மற்றும் ராஜ் பவனுக்கு வெளியே  கூடிய பெண்கள், பிரேன் சிங்கை ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். 

மே 3 ஆம் தேதி மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' நடத்தப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT