தற்போதைய செய்திகள்

இந்தியாவில் 2வது நாளாக 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு

29th May 2021 10:28 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவில் புதிதாக பதிவாகும் தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 1.86 லட்சமாக இருந்த நிலையில், கடந்த 45 நாள்களில் இல்லாத அளவாக தினசரி பாதிப்பு சனிக்கிழமை 1.73 லட்சமாக குறைந்துள்ளது. 

24 மாநிலங்களில் கடந்த வாரம் முதல் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதன் மூலம் கரோனா 2-ஆவது அலையின் தாக்கம் குறைந்து வருவது தெரிகிறது.

பல மாநிலங்களில் அமலில் இருக்கும் பொது முடக்கம் குறிப்பிடத்தக்க அளவு தளா்த்தப்பட்டாலும், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் நிலையாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 1,73,790 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.77 கோடி (2,77,29,247) ஆகவும் அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால்  3,617 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,22,512 -ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 22,28,724 பேராகவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2,84,601 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,51,78,011 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 90.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

வராந்திர தொற்று பாதிப்பின் விகிதம் தற்போது 9.84 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 8.36 சதவீதமாகவும், தொடர்ந்து 5 நாள்களாக பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் கீழ் இருந்து வருகிறது.

கரோனா பரிசோதனையின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாவோா் விகிதம் குறைந்து வருகிறது. 

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 28 -ஆம் தேதி வரை 34,11,19,909 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை ஒரேநாளில் அதிகபட்சமாக 20,80,048 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 20,89,02,445 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus India coronainfection
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT