தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

14th May 2021 10:16 AM

ADVERTISEMENT


தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அதன்பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் கண்காணிப்புக் குழுவினா் 2 முறை ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.

இதையடுத்து, ஆலையின் ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவில் ஏற்கெனவே பணியிலிருந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலையில் புதன்கிழமை இரவில் ஆக்சிஜன் உற்பத்தி முழுமையாக தொடங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், ஆய்வுக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அது 98 சதவீதம் சுத்தமானதாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வியாழக்கிழமை காலை லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பயன்பாட்டுக்காக ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் நேற்று அனுப்பி வைத்தது. தொடா்ந்து, உற்பத்தி அளவை அதிகரிக்க உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் வியாழக்கிழமை இரவு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை குளிர்விக்கையில் பழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உற்பத்தி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு பழுதை சரிசெய்யும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதற்காக பொறியாளர்கள் நேற்றிரவு முதலே தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆக்சிஜன் உற்பத்தி அலகில் பிராண வாயுவை  குளிர்விக்க பயன்படும் கொள்கலனில் ஏற்பட்ட முக்கிய பழுது காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்ததன் விளைவாக தற்பொழுது இந்த பிரச்னை  ஏற்பட்டு இருக்கலாம் என ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி பணியில் ஆய்வக வல்லுநர்கள், வேதியல் வல்லுனர்கள், பொறியாளர்கள் மின் சீரமைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் என  250 பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். 

தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளாக ஆலை செயல்படாததால் சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்தனர். 

ஆக்சிஜன் உற்பத்தி அலகில் உள்ள பெரும்பாலான எந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதனால் குளிர்விக்கும் அலகை திறந்து பார்த்தால் தான் உண்மையான பழுது என்ன என்பது தெரியவரும் என தகவல்கள் கூறுகின்றன. 

மேலும் பழுதான பகுதி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருளாக இருந்தால் அதை சரி செய்வதற்கு குறைந்தது மூன்று நாள்களாவது ஆகலாம் என கூறப்படுகிறது.

கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சுமார் 5 டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் தேவையை உள்ள இடங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கிய நிலையில் அதற்கு மறுநாளே உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags : Sterlite oxygen production
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT