திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள மையத்தில் அதிகாலையே முகவர்கள் வாக்கெண்ணும் அலுவலர்கள் வரத் தொடங்கினர்.
அனைவரிடமும் கரோனா பரிசோதனை சான்று மற்றும் அடையாள அட்டை உள்ளதா என்பதை சரிபார்த்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு உடலின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. 98.6 அளவுக்குமேல் வெப்பம் பதிவாகி இருந்தால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மையத்துக்குள் வரும் அனைவருக்கும் முக கவசம், முகத்தை முழுவதும் மூடுவதற்கான பிளாஸ்டிக் கவசம் வழங்கப்பட்டது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் முழு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது. 7.30 மணிக்குள்ளாக அனைவரையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதித்து வாக்கு எண்ணிக்கைக்கு தயார் செய்யப்பட்டது.