திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளுக்கு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 73.56 சதவீதம் (17,20,279 பேர்) வாக்குப்பதிவானது. இந்த வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் மூடி, முத்திரையிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
9 தொகுதிகளிலும் மொத்தம் 5,688 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தொகுதி வாரியாக பிரித்து அதற்கான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளுக்கு காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதிகளுக்கு சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர், திருவரங்கம், மணப்பாறை தொகுதிகளுக்கு பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
துறையூர், முசிறி தொகுதிகளுக்கு துறையூர் இமயம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 4 இடங்களிலும் அந்தந்த் தொகுதி இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகளில் இருந்த முத்திரையிடப்பட்ட சீல்களை பிரித்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெறுகின்றன.
ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதற்காகவும், தலா 4 மேஜைகள் அஞ்சல் வாக்கு எண்ணிக்கைக்காகவும் மற்றும் தலா ஒரு மேஜை வீதம் இராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கான மின்னணு முறையிலான அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காகவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட வாக்கு எண்ணும் பணிகளுக்காக வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் 3562 பேரும், வேட்பாளர்கள், முகவர்கள் என 2352 பேரும் பங்கேற்றுள்ளனர்.
தபால் வாக்குகளைத் தொடர்ந்து காலை 08.30 மணிக்கு மின்னணு முறையிலான அஞ்சல் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வேட்பாளர்கள் வாரியாக மின்னணு தகவல் பலகையில் அறிவிக்கப்படும்.
இறுதியாக மின்னணு வாக்குகள் மற்றும் அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கையை தொகுத்து சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிகை பார்வையாளர் அனுமதி பெற்று அவரது முன்னிலையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வெற்றி பெற்ற வேட்பாளர் குறித்த விபரம் அனைத்து வேட்பாளர்கள் முன்பாக அறிவிக்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் கோவிட்-19 தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைவரும் கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
மையத்துக்குள்ளும், வெளியேயும் கரோனா கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
மணப்பாறைக்கு 30 சுற்று, ஸ்ரீரங்கம் 32 சுற்று, திருச்சி மேற்கு 28 சுற்று, திருச்சி கிழக்கு 27 சுற்று, திருவெறும்பூர் 30 சுற்று, லால்குடி 22 சுற்று, மண்ணச்சநல்லூர் 25 சுற்று, முசிறி 24 சுற்று, துறையூர் 23 சுற்று என்ற அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படுகிறது. குறைந்த சுற்று கொண்ட லால்குடி தொகுதி தேர்தல் முடிவுகள் முதலில் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 3,292 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மொத்தம் 241 சுற்றுகளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.