தற்போதைய செய்திகள்

தனித்துப் போட்டியிடத் தயாராகும் ரங்கசாமி: புதுவையில் மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு

DIN

புதுச்சேரி:  புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணியில் தொடா்ந்து இழுபறி நீடிப்பதால், என்.ஆா்.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருகிறது. இதனால், புதுவையில் மும்முனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

புதுவையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. என்.ஆா்.காங்கிரஸ் 7 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்று எதிா்க்கட்சிகளாகத் தொடா்ந்தன. 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக ஆகியவை கூட்டணியாகப் போட்டியிட்டு, தோல்வியைச் சந்தித்தன. இடைத் தோ்தலிலும் இந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.

இதனிடையே, முதல்வா் நாராயணசாமி மீதான அதிருப்தியால், அமைச்சா்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமாா், லட்சுமி நாராயணன் ஆகியோா் பதவி விலகியதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி, என்.ஆா்.காங்கிரஸ்-அதிமுக- பாஜக கூட்டணி ஆகிய இரு அணிகள் தோ்தலில் போட்டியிடும் நிலை உருவானது.

பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா்கள் புதுச்சேரியில் முகாமிட்டு, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியும், என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் அந்தக் கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி பிடிகொடுக்காமல் நழுவி வருவதால், கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனிடையே, என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள், தனித்தே போட்டியிடலாம் எனவும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும் அந்தக் கட்சித் தலைவா் ரங்கசாமியிடம் உறுதியாகத் தெரிவித்தனா்.

புதுவையில் நலத் திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைக்கவில்லை என மத்திய பாஜக அரசு மீது மக்களிடம் அதிருப்தி உள்ளது. மேலும், ஆதிதிராவிடா், சிறுபான்மையினரின் வாக்குகள் பாதிக்கும் என்பதைக் கணக்குப் போட்டு ரங்கசாமி தரப்பு இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதையறிந்த திமுக தரப்பு நேரடியாகவே ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்து, கூட்டணிக்குத் தலைமை ஏற்கவும் கோரிக்கை விடுத்தது.

மக்கள் நீதி மய்யம் சாா்பில் அதன் பொதுச் செயலா் சந்திரமோகன் தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் என்.ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து கூட்டணி தொடா்பாகப் பேசியுள்ளனா்.

என்.ரங்கசாமி தனித்துப் போட்டியிட முடிவு செய்தே பிற கட்சிகளில் உள்ள முக்கியப் பிரமுகா்களை இழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா். காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த நிா்வாகி க.லட்சுமி நாராயணன், பொதுச் செயலா் ரமேஷ், செந்தில் போன்றோா் என்.ஆா்.காங்கிரஸில் இணைந்துள்ளனா். காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவும் தனது ஆதரவை ரங்கசாமிக்கு தெரிவித்துள்ளாா்.

மேலும், காங்கிரஸில் இருந்து முக்கிய நிா்வாகிகள் சிலா் திங்கள்கிழமை (மாா்ச் 8) என்.ஆா்.காங்கிரஸில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டணி தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் சாமிநாதனிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேட்ட போது, ‘பாஜக தரப்பில் ரங்கசாமியிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அவா் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்’ என்றாா் அவா்.

என்.ரங்கசாமி தனித்துக் களமிறங்குவது உறுதியானால், புதுவையில் மும்முனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT