தற்போதைய செய்திகள்

மானாமதுரை வைகை ஆற்றுக்குள் கூடுதல் பாலம் அமைக்க மண் பரிசோதனை

24th Jun 2021 09:04 AM

ADVERTISEMENT


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றுக்குள் கூடுதலாக தரைப்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மானாமதுரையில் குண்டுராயர் தெரு-அண்ணாசிலை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 

மானாமதுரை கன்னார்தெரு மற்றும் இதனைச் சுற்றியுள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் கன்னார்தெருவைக் கடந்து அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் நீண்ட தூரம் சென்று அண்ணா சிலை மேம்பாலத்தை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் மானாமதுரை கன்னார்தெரு-பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வைகை ஆற்றுக்குள் கூடுதலாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆட்சியாளர்களால் இக்கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 2019 -ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மானாமதுரைக்கு பிரசாரத்திற்கு வந்த அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானாமதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை ஆற்றுக்குள் தரைப்பாலம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நெட்டூர் நாகராஜன் வெற்றி பெற்றார்.

 அதன்பின் இவர் சட்டப்பேரவையிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும்  மானாமதுரை வைகை ஆற்றில் தரைப்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

 அதைத்தொடர்ந்து மானாமதுரையில் வைகை ஆற்றுக்குள் கூடுதலாக தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.  அரசின் இந்த அறிவிப்புக்கு மானாமதுரை பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

 அதைத்தொடர்ந்து தரைப்பாலம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பாலம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நிறுத்தப்பட்டது.

 அதன்பின் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட நாகராஜன் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும்   வைகை ஆற்றுக்குள் தரைப்பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என பிரசாரம்  செய்தார்.

ஆனால் மானாமதுரை தொகுதியில் அதிமுக தோல்வியைத் தழுவியது. இதற்கிடையில் தற்போது மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தரைப்பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

 இதற்காக மானாமதுரை காவல் நிலையத்திலிருந்து கிருஷ்ணராஜபுரம் வரை வைகை ஆற்றுக்குள் பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் போர்வெல் இயந்திரங்களைக் கொண்டு மண் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்காக நான்கு இடங்களில் 30 மீட்டர் ஆழம் வரை குழிகள் தோண்டி மண் பரிசோதனை நடந்து வருகிறது. குழிகள் தோண்டும் பணியை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. நான்காவது குழி தோண்டும் பணியும் நிறைவடைந்து மண் பரிசோதனை ஆய்வுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Soil test Manamadurai Vaigai river
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT