தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பாஜகவினர்!

20th Jun 2021 07:11 PM

ADVERTISEMENT


புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தை சூறையாடியதாக அவரது  ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக- என்ஆர்காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

முதல்வராக ரங்கசாமியும், பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ செல்வமும் பதவியேற்றனர். தேர்தல் முடிந்து 50 நாள்களை கடந்தும் இதுவரை  அமைச்சரவை பொறுப்பு ஏற்கவில்லை. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இனைந்த ஜான்குமார், காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நெல்லிதோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இவரது மகன் ரிச்சர்ட் வெற்றி பெற்றார். 

ADVERTISEMENT

இதனிடையே அமைச்சரவையில் பாஜகவுக்கு பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒருவருக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முற்றுகையிட்டு ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது பதாகையை வைத்து கோஷங்கள் எழுப்பியவர்கள், திடீரென அலுவலக முன்பு இருந்த ஷட்டரை உடைத்து பாஜக தலைமை அலுவலக பேனரை கிழித்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும் அவர்களை சமாதானப்படுத்தி இது குறித்து மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனிடையே கரோனா தொற்று சூழலில், தடையை மீறி கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது உள்பட 3 பிரிவுகளில்  பாஜக எம்எல்ஏ ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை. இதற்காக பாஜகவில் இருந்து விலகமாட்டேன். அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என்று தில்லியில் உள்ள எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ ஜான்குமார் ஆதரவாளர்களின் பாஜக அலுவலக முற்றுகை குறித்து பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் அமைச்சராக விரும்புவார்கள். ஆனால், யார் அமைச்சர் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்று கூறினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT