தற்போதைய செய்திகள்

தவறுதலாக கைதிகள் விடுவிப்பு: ஜயங்கொண்டம் கண்காணிப்பாளர் பணியிடைநீக்கம்

13th Jun 2021 05:47 PM

ADVERTISEMENT

 

திருச்சி: அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் கிளைச்சிறையில் ஜாமீன் இல்லாமல் இரண்டு கைதிகள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை காவல்துறையினர் கைது செய்து கிளைச்சிறையில் அடைத்தனர். இவர்களில் 22 பேருக்கு அரியலூர் நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கைதிகளை ஜாமீனில் வெளியே விடுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகத்தினர் செய்தனர்.

அப்போது ஆங்கிலம் புரிதல் இல்லாத காரணத்தினால், கீழப்பழுவூர் அருகே உள்ள மலத்தாங்குளத்தை சேர்ந்த வேளாங்கண்ணி ராபர்ட் (36), பாலகுமார் (22) ஆகியோரை தவிர்த்து என்பதை தவறாக புரிந்து கொண்டு, அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து மொத்தம் 24 பேரை காவல்துறையினர் ஜாமீனில் விடுவித்தனர். 

ADVERTISEMENT

பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரிகள் சரிபார்த்த போது கூடுதலாக இரண்டு பேரை தவறுதலாக விடுவித்தது தெரியவந்தது. சாராய வழக்கில் கைதான அவர்கள் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அவர்களை தவறுதலாக ஜாமீனில் அனுப்பப்பட்ட விவகாரம் சிறைத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்விவகாரம் குறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சதீஸ், ஜயங்கொண்டம் கிளைச்சிறை கண்காணிப்பாளர் நடராஜனிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நடராஜன் அளித்த பதிலில் திருப்தி ஏற்படாததால், அவரை பணியிடை நீக்கம் செய்து சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : ஜயங்கொண்டம் கிளைச்சிறை பணியிடை நீக்கம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT