தற்போதைய செய்திகள்

கூட்டுறவுத்துறை முறைகேடுகள்: விசாரணைக்கு பின் நடவடிக்கை - அமைச்சர் இ.பெரியசாமி 

11th Jun 2021 02:29 PM

ADVERTISEMENT


கூட்டுறவுத்துறை முறைகேடுகள் குறித்த புகார்கள் மீதான விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார். 

தமிழக கூட்டுறவுத் துறை கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் 4451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதில் 30 சதவீதம் பேருக்கு கடன் வழங்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த 10 ஆண்டுகளாக பின்பற்றப்படவில்லை. 

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் கூட்டுறவுத் துறை தொடர்பாக மூன்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கூட்டங்களின் போது கூட்டுறவுத்துறையில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கடன் வழங்கிய எதிலும் அதனை திருப்பி செலுத்தியதாக வரவு வைக்கப்பட்டதிலும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த  வங்கிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் ஒரு இணைய வழியில் இணைக்கப்படவில்லை. கணினி மையத்திற்கும், இணையவழியில் இணைக்கப்பட்டிருக்கும் (ஆன்லைன்) வேறுபாடு தெரியாமல்  செல்லூர் ராஜு கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 

ADVERTISEMENT

மொத்தமுள்ள 4451 கூட்டுறவு வங்கிகளில் பெரும்பாலான வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கியிடமிருந்து நிதியுதவி பெற்று செயல்பட்டு வருகின்றன. அதேபோல 36 கூட்டுறவு பண்டக சாலைகளில் 24 பண்டக சாலைகள் ரூ. 400 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. 

கடந்த ஆட்சியின் போது தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை பயனாளர்கள் குறித்த பட்டியல் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. பணமில்லாத வங்கியிலிருந்து விவசாயிகளுக்கு எப்படி கடன் வழங்கியிருக்க முடியும். விவசாயிகள் பெயர்களை பயன்படுத்தி முறைகேடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதுகுறித்து ஆய்வு செய்யவும், தொடர்புடையவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகள் ஒளியில் இணைக்கப்பட்டு கோர் பேங்கிங் நடைமுறை அமல்படுத்தப்படும்.

கடந்த முறை கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். நகை கடன் தள்ளுபடி பெற்றுள்ள பயனாளிகளின் பட்டியல் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் சுவரில் வெளிப்படையாக ஒட்டப்படும். 

கூட்டுறவுத் துறை அமைச்சராக நான் விருப்பமின்றி பணியாற்றுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. அனைத்து துறைகளிலும் கூட்டுறவுத்துறை முன்மாதிரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.

Tags : Co-operative scandals Minister I Periyasamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT