தற்போதைய செய்திகள்

பிரிட்டனின் முதல் பெண் டாக்டர் எலிசபெத் காரெட் ஆண்டர்சன்

பேரா.சோ.மோகனா

18 & 19 நூற்றாண்டுகளில் பெண்களின் நிலை

உலகில் பெண்கள் எங்கிருந்தாலும், அவள் படிக்க, பணிபுரிய. அரசியலில் ஈடுபட என பலமுனைகளில் அவளுக்கு எதிர்ப்பு அதிகம் இருந்தது என்பதே உண்மை. அதுவும் 17,18 & 19 நூற்றாண்டுகளில் நிலைமை ரொம்பவே மோசம். அடக்குமுறையை முறியடிப்பது முதல், விதிகளை மீறுவது, உலகை மறுவடிவமைப்பது அல்லது கிளர்ச்சி செய்வது வரை, வரலாற்றில் இந்த பெண்கள் சொல்ல ஒரு கதை இருக்கிறது.  அப்படி ஒரு பாதிக்கப்பட்ட பெண்மணிதான் எலிசபெத் காரெட் ஆண்டர்சன்.

அனைத்திலும் முதன்மை பெண்மணி 

எலிசபெத் காரெட் ஆண்டர்சன் (பிறப்பு: 1836, ஜூன், 9  - இறப்பு : 1917, டிசம்பர், 17). அவர் ஓர் ஆங்கில முன்னோடி பெண் மருத்துவர். அரசியல் பிரச்சாரகர் மற்றும் பெண் உரிமைப் போராளி. பிரிட்டனில் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக தகுதி பெற்ற முதல் பெண் இவர்தான். இங்கிலாந்தில் மருத்துவ பயிற்சி செய்ய அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்மணி எலிசபெத் காரெட் ஆண்டர்சன்.

எலிசபெத் மருத்துவர், தொழில்முறை கல்வியில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும் பெண்களுக்கான  மருத்துவக் கல்வியைக் கொண்டு வருவதில்  முன்னோடியாக இருந்தார். அதற்காக அவர் பெரும் தியாகங்களைச் செய்தார். அதன் மூலம் பிரிட்டிஷ் மருத்துவத்தில் பெண்களுக்கு புதிய பாதைகளை உருவாக்கப் போராடினார்.

எலிசபெத்  பெண்கள் பணியாற்றிய முதல் மருத்துவமனையின் இணை நிறுவனராகவும், பிரிட்டிஷ் மருத்துவப் பள்ளியின் முதல் தலைமை மருத்துவராகவும், பிரிட்டனில் பள்ளி வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி மற்றும் பிரிட்டனின் முதல் பெண் மேயராகவும் பணியாற்றிய சிறப்பு பெற்றவர்.

பிறப்பு & வளர்ப்பு

எலிசபெத் லண்டனின் ஒயிட்சப்பல் மாவட்டத்தில் நியூஸ்டன் என்ற ஊரில் நியூசன் காரெட் (1812-1893) மற்றும் லூயிசா தம்பதிக்குப் பிறந்தார். அவர்களின்  பதினொரு குழந்தைகளில்,எலிசபெத் இரண்டாவது குழந்தை. அவரது தந்தை முதலில் இரும்பு தொழில் செய்தார். பின்னர் வட்டிக்குப் பணம் கொடுக்கும்  பணியில் ஈடுபட்டு வந்தார். எலிசபெத்தின் சகோதரர் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பம் எலிசபெத்தின் 3 வது வயதில் லண்டன் மாநகரிலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்ந்தது.

பின்னர் பல தொழில்கள் செய்த பின்னர் , 1850 ஆண்டுகளில் நியூசன் வளமான தொழிலதிபராக இருந்தார். மேலும்  எலிசபெத் காரெட், குழந்தைகள் விக்டோரியன் இங்கிலாந்தின் தொழில்முறை வகுப்புகளில் சாதனையாளர்களாக வளர வேண்டும் என தந்தை விரும்பினார்.  உள்ளூர் அரசியலில் ஆர்வம் காட்ட எலிசபெத் ஊக்குவிக்கப்பட்டார். 

இளமைக் கல்வி

ஆல்டர்பர்க்கில் எந்தப் பள்ளியும் இல்லை, எனவே எலிசபெத் தனது பதின்ம வயது வரை பள்ளியில் சேரவில்லை.  எலிசபெத் காரெட் தனது தாயிடமிருந்து வாசிக்க, எழுத மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். அவளுக்கு 10 வயதாக இருந்தபோது,  மிஸ் எட்ஜ்வொர்த் என்ற ஏழைப்பெண், காரெட் மற்றும் அவரது சகோதரிக்கு கல்வி சொல்லிக்கொடுக்க வேலைக்கு அமர்த்தப்பட்டார்.

அவர்களின் காலைப்பொழுது பள்ளி அறையில்  கழிந்தது. எட்ஜ்வொர்த், எலிசபெத் குடும்பத்துடன்  அவரது இல்லத்திலேயே சாப்பிட்டார். பின்னர் பெண்களுக்கு உணவு நேரங்களில் தொடர்ந்து கல்வி கற்பித்தர். 

உறைவிடப்பள்ளியில் படிப்பு  

காரெட் தனது ஆளுமையுடன்  வகுப்பறையில் ஆசிரியரை விஞ்ச முயன்றார். காரெட் 13 வயது மற்றும்  அவரது சகோதரி 15 வயதில்  அவர்கள் இருவரும் லண்டனின் பிளாக்ஹீத்தில் உள்ள பெண்களுக்கான உறைவிட  தனியார் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இந்தப்பள்ளி கவிஞர் ராபர்ட் பிரவுனிங்கின் வளர்ப்பு அத்தைகளால் நடத்தப்பட்டது.

அங்கு, ஆங்கில இலக்கியம், பிரெஞ்சு, இத்தாலியன் மற்றும் ஜெர்மன் ஆகியவை கற்பிக்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் கற்பிக்கப்படவில்லை. ஏனெனில் அப்போது பெண்கள் ஆங்கில இலக்கியம் படித்து ஆசிரியர் ஆவதுதான் உகந்தது என்று கருதப்பட்டது. எனவே அறிவியல் படிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் எலிசபெத் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் இல்லாததால் அதிருப்தி அடைந்தார்.

முறையான பள்ளிப்படிப்புக்கு வெளியே, எலிசபெத்தின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் அனைவரையும் தங்கள் லட்சியங்களைத் தொடரவும் உள்ளூர் அரசியலில் ஆர்வம் காட்டவும் ஊக்குவித்தனர்.

தீவிர வாசிப்பாளர் எலிசபெத்

பள்ளிக்காலத்தில் எலிசபெத் தீவிர வாசிப்பு பழக்கம் கொண்டவராக மாறினார். அவரது வாசித்தவைகளில் முக்கியமானவர்கள் : டென்னிசன், வேர்ட்ஸ்வொர்த், மில்டன், கோலிரிட்ஜ், ட்ரோலோப், தாக்கரே மற்றும் ஜார்ஜ் எலியட் ஆகியோர். 1850 இல் எலிசபெத் பள்ளிப்படிப்பு  முடிந்ததும் அவர் ஒரு குறுகிய சுற்றுப்பயணத்திற்கு அனுப்பப்பட்டார். 1851 ஆம் ஆண்டில் எலிசபெத்துக்கும் அவரது உடன்பிறப்புகளுக்கும் உள்ளூர் பகுதியை ஆராய்வதற்கும் பயணத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

பெண்ணியவாதி எமிலி டேவிஸ் உடன்  வாழ்நாள் நட்பு

 முறையான கல்வியை முடித்த பின்னர், எலிசபெத் அடுத்த 9 ஆண்டுகளை உள்நாட்டு கடமைகளுக்கு செலவிட்டார். அதேசமயம் தொடர்ந்து லத்தீன் மற்றும் எண்கணிதத்தைத்  தொடர்ந்து பயின்றார்.  கரிபால்டி முதல் மக்காலேயின் இங்கிலாந்து வரலாறு வரையிலான அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்களைப் பற்றி விவாதித்தார்.

1854 ஆம் ஆண்டில், அவர் 18 வயதில், காரெட் மற்றும் அவரது சகோதரி கேட்ஸ்ஹெட்டில் உள்ள தங்கள் பள்ளி நண்பர்களான ஜேன் மற்றும் அன்னே க்ரோ ஆகியோருக்கு ஒரு நீண்ட பயணத்திற்குச் சென்றனர், அங்கு கேம்பிரிட்ஜின் கிர்டன் கல்லூரியின் ஆரம்பகால பெண்ணியவாதியான எமிலி டேவிஸை சந்தித்தார். டேவிஸ் மற்றும் எலிசபெத் இருவரும் வாழ்நாள்முழுவதும்  நண்பராகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.  காரெட்டின் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளின் போது எப்போதும் நல்ல ஆலோசனைகளை வழங்க தயாராக எமிலி இருந்தார்.

டாக்டர்  எலிசபெத் பிளாக்வெல்  அறிமுகம்

காரெட் பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான சொசைட்டியில் சேர்ந்தார். இது  காரெட்டிற்கும் மருத்துவர் பிளாக்வெல்லுக்கும் இடையில் ஒரு தனிப்பட்ட சந்திப்பை  ஏற்படுத்தியது. காரெட் மருத்துவத் தொழிலில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும்,  டேவிஸ் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கான கதவுகள் திறக்கப்படவேண்டும் என்றும்,  பெண்களுக்கு அரசியலிலும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பேசினார். 

எலிசபெத் மருத்துவராகும் முயற்சி

ஆரம்பத்தில், நியூசன் தனது மகள் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கருத்தை எதிர்த்தார். ஆனால் பின்னர் அவர் மனம் மாறி, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவராகும் முயற்சியை ஆதரிப்பதற்காக நிதி ரீதியாகவும் இல்லையெனில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.  லிசபெத் ஹார்லி தெருவில் உள்ள முன்னணி மருத்துவர்களைச் சந்தித்தார். ஆனால் அது தோல்வியுற்றது. இதேபோல் பல மருத்துவப் பள்ளிகளில் படிக்க விண்ணப்பிக்கப்பட்டது. 

இவை அனைத்தும் ஒரு பெண்ணை மாணவியாக ஏற்க மறுத்துவிட்டன. எனவே அவர் முதல் ஆறு மாதங்களை மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செவிலியராகக் கழித்தார். மேலும் மருத்துவமனை  மருத்துவத்தில் ஆண் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விரிவுரைகளில் கலந்து கொண்டார்.

மருத்துவமனையின் மருத்துவப் பள்ளியில் சேருவதற்கான தனது முயற்சியில் அவர் தோல்வியுற்றார்  எலிசபெத் குறித்து ஆண் மாணவர்களிடமிருந்து வந்த புகார்களுக்குப் பிறகு, அவர் மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவற்றுக்கு மத்தியில் வேதியியல் மற்றும் மெட்டீரியா மருத்துவத்தில் கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டது. உடற்கூறியல் மற்றும் உடலியல் ஆகியவற்றில் தனது சான்றிதழை தனிப்பட்ட முறையில் பெற்றார்.

மருத்துவப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்ட எலிசபெத் ஆண்டர்சன் 1860ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் படிக்கத் தொடங்கினார்.

போராடிப்பெற்ற மருத்துவ சான்றிதழ்

மருத்துவ பதிவேட்டில்  எலிசபெத் தனது பெயரை பதிவு செய்வதற்காக  ஒரு தகுதிவாய்ந்த டிப்ளோமாவைப் பெறுவதற்குத் தீர்மானித்து, எலிசபெத், உரிமம் பெற்ற மருத்துவ சங்கத்தில் பட்டம் பெற அனுமதிக்கப்பட்டார். இது ஒரு முதுநிலை மருத்துவம் அல்லது மருத்துவ பட்டத்தை விட குறைவான மதிப்புடையது என்றாலும், அது அவளுக்கு ஒரு மருத்துதொழில் செய்ய வாய்ப்பு வழங்கியது.

1865 ஆம் ஆண்டில் மருத்துவ சங்கத்தினர் அவருக்கான  தேர்வை நடத்த மறுத்துவிட்டனர். அவரது தந்தை, நியூசன், வழக்குத் தொடுப்பதாக விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சங்கத்தினர்  தங்கள் முடிவை மாற்றியமைத்தனர். பின்னர் எலிசபெத் மருத்துவம் பயிற்சி செய்வதற்கான உரிமத்தைப் பெற்றார். மேலும் ஒரு வருடம் கழித்து அவரது பெயரை மருத்துவ பதிவேட்டில் சேர்த்தனர்.

எலிசபெத்துக்கு டிப்ளோமா வழங்கப்பட்டவுடனேயே, பெண்களை மருத்துவத்திலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் ஒரு அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற வேண்டும் என்று சொசைட்டி ஆஃப் அபோதிகெரியஸ் உடனடியாக தங்கள் சாசனத்தை திருத்தியது. எனவே  அடுத்த 12 ஆண்டுகளுக்கு வேறு எந்த பெண்ணின் பெயரும் மருத்துவ பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை.  ஆங்கில மருத்துவத்தில் டிப்ளோமா/பட்டயம்  பெற்ற முதல் பிரிட்டிஷ் பெண்மணி எலிசபெத் மட்டுமே.  இருப்பினும் பிரிட்டிஷ் மருத்துவ பதிவேட்டில் பதிவிடப்பட்ட  முதல் பெண் என்ற மரியாதை அவருக்குக் கிடைத்துள்ளது.

மருத்துவப் பயிற்சி செய்ய உரிமம், ஆனால் பணி இல்லை  

எலிசபெத் மருத்துவப் பயிற்சி செய்ய உரிமம் இருந்தும்  எலிசபெத்துக்கு எந்த மருத்துவமனையிலும் மருத்துவப் பணியைப் பெற முடியவில்லை. மறுத்தனர். பின்னர்  அவரது தந்தையின் நிதி ஆதரவுடன் லண்டனின் 20 அப்பர் பெர்க்லி தெருவில் தனது சொந்த மருத்துவ நிலையத்தைத் தொடங்கினார். அதுவே பின்னர்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயின்ட் மேரியின் மருந்தகம் என உருமாறியது.

எலிசபெத் காரெட் ஆண்டர்சன் மருத்துவமனை

1865 ஆம் ஆண்டில் சொசைட்டி ஆஃப் அப்போதெக்கரிஸால் பயிற்சி பெற உரிமம் பெற்றார். அவர் மேரிலேபோன் மருந்தகத்திற்கு பொது மருத்துவ உதவியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பெண்களுக்கான புதிய மருத்துவமனை உருவாக்க அவர் பணியாற்றினார். அவரது நினைவாக 1918ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனை எலிசபெத் காரெட் ஆண்டர்சன் மருத்துவமனை என மறுபெயரிடப்பட்டது.

பிரிட்டனில் மருத்துவ பதவி வகித்த முதல் பெண் எலிசபெத்

1870 ஆம் ஆண்டில், எலிசபெத் முதல் லண்டன் பள்ளி வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். குழந்தைகளுக்கான கிழக்கு லண்டன் மருத்துவமனையின் வருகை தரும் மருத்துவர்களில் ஒருவராகவும் எலிசபெத் நியமிக்கப்பட்டார். பிரிட்டனில் மருத்துவப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் எலிசபெத்..

பெண்களின் படிப்புக்காக, பிரிட்டனில் முதல் மருத்துவமனை உருவாக்கம்

1872 ஆம் ஆண்டில் எலிசபெத்தின் மருந்தகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புதிய மருத்துவமனை என மறுபெயரிடப்பட்டு  மகளிர் மருத்துவத்திற்காக லண்டன் முழுவதிலுமிருந்து பெண்களுக்கு சிகிச்சை அளித்தது. இது முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்டது. அங்கு எலிசபெத்தை ஒரு டாக்டராக்க தூண்டிய பெண் எலிசபெத் பிளாக்வெல் மகப்பேறு மருத்துவ பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.  இந்த மருத்துவமனை பின்னர் ராயல் ஃப்ரீ மருத்துவமனை என்று அழைக்கப்பட்டது, இப்போது லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவப் பள்ளியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் ஒரே பெண் உறுப்பினராக

எலிசபெத் 1873 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் (பிஎம்ஏ) உறுப்பினராக 19 ஆண்டுகள் இருந்தார். 1897 இல் அவர் கிழக்கு ஆங்கிலேயக் கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1908 இல் அவர் ஆல்டர்பர்க்கின் முதல் பெண் மேயரானார்.

எலிசபெத் காரெட் அரசியலிலும் பெண்கள் வாக்குரிமை இயக்கத்திலும்

சகோதரி மில்லிசென்ட் காரெட் பாசெட்டைப் போல சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், எலிசபெத் பெண்களின் வாக்குரிமை இயக்கத்தில் தீவிரமாக இருந்தார்.  மேலும் அவர் பிரிட்டிஷ் மகளிர் வாக்குரிமைக் குழுவிலும் சேர்ந்தார். 1889 ஆம் ஆண்டில் அவர் பெண்கள் வாக்குரிமைக்கான தேசிய சங்கத்தின் மத்திய குழுவில் உறுப்பினரானார். 1907 இல் அவரது கணவர் இறந்தபின் மேலும் தீவிரமாக இயங்கினார். அரசியலில் தனது ஆர்வத்தைத் தொடர்ந்து எலிசபெத் 1908 இல் ஆல்டர்பர்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 72 வயதில் அவர் போர்க்குணமிக்க மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில்  உறுப்பினரானார். 

பெருமைகள்

பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர்

1908 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் முதல் பெண் மேயரானார்.

பள்ளியின் போர்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்..

பிரிட்டனின் முதல் பெண் மாஜிஸ்ட்ரேட்

மருத்துவப்பள்ளியின் முதல் டீன்.

பெண்களுக்கு முதல் மருத்துவப்பள்ளியை உருவாக்க உதவியவர்

மரணிப்பு

ஆண்டர்சனின் உறுதிப்பாடு மற்ற பெண்களுக்கு வழி காட்டியது. 1876 ஆம் ஆண்டில் பெண்கள் மருத்துவத் தொழில்களில் நுழைய அனுமதிக்கும் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.  ஆண்டர்சன் 17 டிசம்பர் 1917 இல் இறந்தார். ஆல்டர்பர்க்உள்ள தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

(ஜூன் 9 - எலிசபெத் ஆண்டர்சன் பிறந்தநாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT