தற்போதைய செய்திகள்

நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.72 அதிகரிப்பு: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

10th Jun 2021 02:46 PM

ADVERTISEMENT

 

செய்யாறு: மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.72 உயர்த்தியதால் செய்யாறு பகுதியில் விவசாயிகள் இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியினை வியாழக்கிழமை வெளிப்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் தவசி கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி அரசு கொள்முதல் நிலையம் அருகே விவசாய சங்க பிரதிநிதி வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தற்போது சொர்ணவாரி பட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்து நெல் உற்பத்தியிலும் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று உள்ளது. மேலும் இப்பட்டத்தில் டெல்டா சாகுபடி பகுதிகள் தான் முதலிடம் வரும். இந்த முறை திருவண்ணாமலை மாவட்டம் வந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. 
 
தற்போது, மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.72  உயர்த்தியுள்ளது. அதன்படி, ஆதார விலை ரூ.1868-இல் இருந்து 1940 -ஆக உயர்ந்து மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.70 உடன் குவிண்டால் ரூ.2010-க்கு அரசு நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும். நடப்பு நவரை பருவத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மூலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதேபோன்று வருகிற சொர்ணவாரி குறுவை பட்டத்திலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் இனிப்பு வழங்கி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கற்பூரம் ஏற்றி எலுமிச்சம் பழத்தால் திருஷ்டிக் கழித்து மகிழ்ந்தனர். 

நிகழ்ச்சியில் புதுப்பாக்கம் எஸ்.முனிரத்தினம், மோட்டூர் சி.ஆர்.மண்ணு, புரிசை.வாசுதேவன், அகத்தேரிப்பட்டு டி.கிருஷ்ணன், மருதாடு எம்.மணி, அனக்காவூர் பெருமாள், கீழ்மட்டை தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT