தற்போதைய செய்திகள்

பள்ளிகள் திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

29th Jul 2021 11:24 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: தமிழக முதல்வர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூர் பகுதியில் உள்ள செங்கழுநீர் ஏரியில் தூர் வாரும் பணியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பள்ளிகளில் 9 - 12 ஆம் வகுப்புகள் திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டது. கரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. கரோனா தடுப்பூசி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தாலும், அது எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை.

ADVERTISEMENT

கள்ளப்பெரம்பூர் ஏரிக்கரையில் மரக்கன்று நடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் போது எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு பள்ளி திறப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. தமிழக முதல்வர் எப்படி சொல்கிறாரோ அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப்பணியிடங்கள் உள்ள விவரம் தெரியவரும். அதனை அடிப்படையாகக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளைப்போல அரசுப் பள்ளிகளையும் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT