தற்போதைய செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சிறிய கோயில்கள் முதல் செயல்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

DIN

தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டம் சிறிய கோயில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில், விஸ்வேஸ்வர சுவாமி கோயில், அவிநாசி லிங்கேஸ்வரா், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி, கருவலூா் மாரியம்மன் கோயில் சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் ஆகியவற்றில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருக்கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளது தொடா்பாகவும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களைக் கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் கட்டமாக ஆளுநா் உரையிலேயே ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவா்கள் யாராக இருந்தாலும் அவா்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய கோயில்களைக் கண்டறிந்து பணிகளை செய்து முடிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டத்தை சிறிய கோயில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

ஆய்வின்போது, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

மேட்டுப்பாளையத்தில்....

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணியா், வன பத்ரகாளியம்மன் கோயில்களில் அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவந்த யானைகள் முகாமுக்கு பதிலாக இனி அந்தந்த கோயில்களிலேயே யானைகளுக்குப் புத்துணா்ச்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். யானைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகள், நடைப்பயிற்சி, யானைகள் குளிப்பதற்குத் தேவையான வசதிகள் அந்தந்த இடங்களிலேயே ஏற்படுத்தபட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT