தற்போதைய செய்திகள்

பெட்ரோல், சமையல் எரிவாயு உருளை உயர்வைக் கண்டித்து மஜக ஆர்ப்பாட்டம்

11th Jul 2021 04:14 PM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து, மனித நேய ஜனநாயகக் கட்சி சார்பில், லெட்சுமாங்குடி பாலத்தருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் பி.எம்.ஏ.சீனி ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் நத்தர்கனி, மாவட்டப் பொருளாளர் எம்.ஷேக் அப்துல்லா, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் குத்புதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் முகம்மது ஆசிக் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு உருளைக்கும், இரு சக்கர வாகனத்திற்கும் மாலையணிவித்து சாலையில் வைத்திருந்தனர். தொடர்ந்து, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் பேசியது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை கழுத்தில் கை வைத்து நெறிப்பது போல பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ளனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மளிகைப் பொருள்கள், காய்கறி, கட்டுமானப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்துமே விலை அதிகரித்துள்ளதால் ஏழை,எளிய மக்களும், கூலித் தொழில் செய்யக் கூடியவர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவருமே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உடனே தலையிட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையைக் குறைக்க வேண்டும் என்றார். 

ஆர்ப்பாட்டத்தில், ஷேக் சிராஜ்தீன், அத்திக்கடை சலீம், பொதக்குடி ஜலாலுதீன், முனவர்தீன் உள்ளிட்ட பலர், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT