உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை வெடித்த விபத்துக்குள்ளான பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சமோலி மாவட்ட இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தேடும் பணி இன்று (பிப்.11) 5-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 35 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், நதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங்களில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.