தற்போதைய செய்திகள்

காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுப்பதற்கு தடை:  வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்

8th Aug 2021 09:25 AM

ADVERTISEMENT

 

திருச்சி: ஆடி அமாவாசை என்பதால், திருச்சி, ஸ்ரீரங்கம், காவிரிக்கரையில் அமைந்துள்ளது அம்மா மண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வெறிச்சோடியது.

திருச்சி, ஸ்ரீரங்கம், காவிரிக்கரையில் அமைந்துள்ளது அம்மா மண்டபம். இங்கு, பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு நாள்தோறும்  தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இருப்பினும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது அதிகரித்து காணப்படும். இதையொட்டி  காலை முதல் பிற்பகல் வரை ஆயிரக்கணக்கானோர், இங்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பர்.

ADVERTISEMENT

மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் கோயில்

ஆடி அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அதிகம் பேர் வருவர். எனவே,  கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சி, ஸ்ரீரங்கம், காவிரிக்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கும், திதி கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் காவிரிக்கரை

காவிரிக்கரை அம்மா மண்டபத்துக்கு திதி கொடுக்க பொதுமக்கள் யாரும் வரக் கூடாது என மாவட்ட நிர்வாகம், காவல் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பிலும்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வருவோரை காவல்துறையினர் தடுத்து, திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால், திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபம் ஞாயிற்றுகக்கிழமை காலை முதலே வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும், அரங்கநாதர் கோயிலும் அடைக்கப்பட்டுள்ளது.  

இதேபோல் திருச்சி மாநகர், புறநகர் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை உள்ளதால் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT