தற்போதைய செய்திகள்

ஆனந்தூரில் சாலையோரம் கிடக்கும் கல்வெட்டுகள், சிற்பங்கள்

25th Nov 2020 11:19 AM

ADVERTISEMENT

 

திருவாடானை:  ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள ஆனந்தூரில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவிலில் இருந்த பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்கள் மற்றும் சிற்பங்கள் சாலையோரம் சிதறிக் கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்தூரிலுள்ள சிவன் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்பில் இருந்துள்ளது. சிங்கம்புணரியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ஆசிரியர் இக்கோவில் மகாமண்டபத்தில் இருந்த இரு கல்வெட்டுகளை பதிவு செய்திருக்கிறார். இதில் ஒன்று கி.பி.1321 ஆம் ஆண்டைச் சேர்ந்த பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு. இதில் ஆவிப் பெரியான், ஆலிம்மன் சின்னர் ஆகிய இருவரை இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய விற்றுள்ளதாக தகவல் உள்ளது. மற்றொரு கல்வெட்டில் கி.பி.1521-இல் அளகாபுரியான செழிய நாராயணபுரத்தைச் சேர்ந்த ஏகப்பெருமாள் என்ற வியாபாரி இக்கோவிலில் அழகிய பிள்ளையாரை பிரதிஷ்டை செய்த விவரம் உள்ளது.

கல்வெட்டுகள் இருந்த சேதமடைந்த பழமையான மகாமண்டபத்தை முழுவதும் அகற்றிவிட்டு புதியதாகக் கட்டி வருகிறார்கள். அகற்றப்பட்ட மகாமண்டபத்தில் இருந்த கற்கள், தூண்கள் மற்றும் சிற்பங்கள் கோவிலின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சாலைகளின் ஓரத்தில் சிதறிக் கிடக்கின்றன. இதில் கல்வெட்டுகள் இருந்த கற்களும் உள்ளன.

ADVERTISEMENT

ஆனந்தூரில் சாலை ஓரம் கிடந்த கல்வெட்டைப் படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, 

2018-இல் சாலையோரம் கிடந்த கல்வெட்டுகளை படியெடுத்துப் படித்தபோது அது மகாமண்டபத்தில் இருந்த பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு என்பது தெரிந்தது. அவை தற்போது அங்கு இல்லை. அதே பகுதியில் ஒரு சிலை மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருந்தது. அதை சுத்தம் செய்து பார்த்ததில் அது முருகன் சிலை எனத் தெரிந்தது. 

இதில், முருகன் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் காணப்படுகிறார். அவரின் பின்னுள்ள இரண்டு கைகளில் சக்தி ஆயுதமும், இருதலைச் சூலமும் உள்ளன. முன்புற இரு கைகளில் அபய, வரத கரங்களுடன், மார்பில் சன்னவீரம் அணிந்து காட்சியளிக்கிறார். வெளியில் கிடந்ததால் அவரது முகம், கைகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியின்போது இவை சேதம் அடைந்து மண்ணில் புதைந்து இருக்கலாம். சுண்ணாம்பு, செங்கல், கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மன்னர் காலத்துக் கோவில்கள் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றவை. இக்காலத்தில் சிமெண்டால் கட்டப்படும் கட்டடங்கள் நூறு ஆண்டுகள் கூட நிலைத்திருப்பதில்லை. எனவே அரசு நிதி உதவி வழங்கி தொல்லியல் துறை மூலம் இக்கோவிலை அதன் பழமை மாறாமல் ஏற்கனவே உள்ள கற்களைக் கொண்டே புதுப்பித்துப் பாதுகாக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT