தற்போதைய செய்திகள்

தானே, கஜா புயல்களின் படிப்பினைப்படி நிவர் புயலை எதிர்கொள்வோம்: புதுவை முதல்வர்

25th Nov 2020 12:28 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: தானே, கஜா புயல்களின் படிப்பினையின்படி நிவர் புயலை எதிர்கொள்வோம் என்று புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளத்தில் புதன்கிழமை ஆய்வுமேற்கொண்ட முதல்வர் நாராயணசாமி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் புதுச்சேரியை நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அது கரையை கடக்கும்போது 120 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT

ஏற்கெனவே புதுச்சேரியில் தானே புயலும்,  காரைக்காலில் கஜா புயலும் 100 முதல் 120 கி.மீ. வேகத்துக்கு வீசியபோது அதை எதிர்கொண்ட அனுபவம் புதுச்சேரி அரசுக்கு உள்ளது. அதை எதிர்கொண்ட படிப்பினையின் அடிப்படையில் நிவர் புயலையும் எதிர்கொள்வோம்.

புதுச்சேரி,  காரைக்கால் பிராந்தியங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.  நிவர் புயலையொட்டி தாழ்வான பகுதியில் வசித்த மக்களை சமுதாய நலக்கூடங்கள்,  பள்ளிகள், திருமண மண்டபங்கள் என 90 இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கும்,  முகக்கவசங்கள் வழங்குவதற்கும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர்கள் மூலம் வாகனங்களில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது, 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்படுகிறது.  காற்று அடிக்கும் போது விளம்பர பதாகைகள் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனை அகற்ற அறிவுறுத்தியுள்ளோம். மின்சாரம் தடைப்பட்டால் அடுத்த 12 மணி நேரத்துக்குள் மீண்டும் மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி பிராந்திய மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பிவிட்டனர். அவர்களது படகுகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. காரைக்காலில் 95 சதவீதம் மீனவர்கள் கரைக்கு திரும்பிவிட்டனர். மீதியுள்ள 5 சதவீதம் பேரும் கரை திரும்பி வருகின்றனர்.

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, அமைச்சர் ஷாஜகான் காலாப்பட்டு, லாசுப்பேட்டை,  தட்டாஞ்சாவடி,  கதிர்காமம் ஆகிய தொகுதிகளிலும், அமைச்சர் நமச்சிவாயம் வில்லியனூர், திருபுவனை,  மங்கலம், மண்ணாடிப்பட்டு,  ஊசுடு ஆகிய தொகுதிகளிலும்,  அமைச்சர் கந்தசாமி மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம்,  பாகூர்,  உப்பளம் ஆகிய தொகுதிகளிலும், வெ.வைத்திலிங்கம் எம்.பி. ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காமராஜர் நகர்,  நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளிலும், முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம் உள்பட புதுச்சேரி முழுவதும் நானும் ஆய்வு செய்து வருகிறோம்.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதியிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு செய்து வருகிறார். மக்களுக்கு எந்த உதவி என்றாலும் உடனே செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல், அதிகாரிகளும் களப்பணியில் இருப்பார்கள். நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன.

புயல் கரையை கடந்து செல்லும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்துள்ளோம்.  ஏற்கெனவே மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டை புதுச்சேரிக்கு இதுவரை தரவில்லை.  

நிவர் புயல் தொடர்பாக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியபோது புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கியுளேன்.  புதுசேரிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளார் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT