தற்போதைய செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு

25th Nov 2020 01:38 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: நிவர் புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளது என்றார் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் புயல் முன்னேற்பாடு பணிகளை புதன்கிழமை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

நிவர் புயல் புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தஞ்சாவூர் அருகே களஞ்சேரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என். சுப்பையன். உடன் மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ்.

புயல் எந்தப் பகுதியில் இருந்து கரையைக் கடக்கும் என்ற சூழ்நிலை இருந்தாலும் கூட, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை காலை முதல் லேசான மழை இருந்து வருகிறது. இந்த மழை போக, போக அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, மக்கள் அதிகமான மழை வரும் வரை காத்திருக்காமல், அருகிலுள்ள நிவாரண மையங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மக்கள், மீனவர்கள் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. 

மழை மிக அதிகமாக இருக்கும்போது, அப்பகுதியில் மின் தடை ஏற்படலாம். இது, பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் நிறுத்தி வைக்கப்படும். சூழல் சரியானவுடன் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும். எனவே, மின்சாரம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார் சுப்பையன்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

Tags : Cyclone Nivar
ADVERTISEMENT
ADVERTISEMENT