தற்போதைய செய்திகள்

கம்பம் கிளை நூலகத்திற்கு தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது

25th Nov 2020 03:38 PM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் கிளை நூலகத்திற்கு தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் சார்பில் நூலக வளர்ச்சியை மேம்படுத்தி வரும் சிறந்த வாசகர் வட்டத்திற்கு ஆண்டு தோறும் "நூலக ஆர்வலர் விருது" தமிழக அரசு வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன்படி, இந்தாண்டு தேனி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் கம்பம் கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் நடைபெறும் விழாவில், இவ்விருதை கம்பம் கிளை நூலக வாசகர் வட்டக்குழு சார்பில் வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் சோ.பாரதன் பெற்றுக்கொள்கிறார்.

வாசகர் வட்டக் குழுவின் சீரிய முயற்சியால் நூலடுக்குகள், நாற்காலிகள், தண்ணீர் சுத்திகரிப்பான் கருவி, புரவலர்கள் சேர்க்கை மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவற்றை நன்கொடையாக  நூலகத்திற்கு வாசகர் வட்டம் சார்பில் பெற்று தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் நூல்கள் கண்காட்சி, வெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், மாணவர் அரங்கம், கவியரங்கம், இலக்கிய விழா நிகழ்வுகள், போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதம் தோறும் நூலக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியதன் மூலம் வாசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இச் சேவைகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக நூலகர் மொ.மணிமுருகன் கூறினார்.

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையினர், தேனி மாவட்டத் தமிழியக்கம், தியாகி சோமநாதன் அறக்கட்டளை , நேதாஜி அறக்கட்டளை, நூலக வாசகர்கள், புரவலர்கள், நூலகப்பணியாளர்கள், வாசகர் வட்ட குழுவினர், கம்பம் ஊதிய மைய நூலக நூலகர்கள் கம்பம் நூலகத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT