தற்போதைய செய்திகள்

கடலில் மிகமிக ஆபத்தான மீன் எது?

31st May 2020 11:22 AM | மோகன ரூபன்

ADVERTISEMENT

 

‘கடலில் மிகமிக ஆபத்தான மீன் எது? இந்தக் கேள்விக்கு பெருஞ்சுறா (White Shark - வொய்ட் ஷார்க்) எனப்படும் பெருவஞ்சுறா (பெருவன்சுறா) என்பதுதான் பதில். இதற்கு முண்டஞ்சுறா என்றொரு பெயரும் உண்டு. கொன்றுண்ணி சுறாக்களில் மிகப் பெரியதும், கடலில், இரையைக் கொல்லும் வேட்டை மீன்களில் மிகப்பெரியதும் நம்ம பெருவஞ்சுறாதான் (பெரு+வன்+சுறா).

சுறாக்களின் படிவரிசைப் பட்டியல்படி பார்த்தால் பெருஞ்சுறாவைவிட பெரியவை இரண்டே சுறாக்கள்தான். ஒன்று அம்மணி உழுவை எனப்படும் Whale Shark - வேல் ஷார்க். மற்றது மேய்ச்சல் சுறா எனப்படும் Basking Shark - பாஸ்கிங் ஷார்க். இந்த இரண்டு அண்ணன்களுமே அறவழியில் நடக்கும் அருளாளர்கள். இவர்கள் பெரும் ரத்தக்களறிகள் எதிலும் ஈடுபடமாட்டார்கள். இவர்கள், கடல்கவுர்கள், சிறுமீன்கள், கடற்பறவைகளை உண்டு வாழ்பவர்கள். இதனால், கடலில் இரையைக் கொன்றுண்ணும் சுறாக்களில் மிகப் பெரிய சுறா என்ற பட்டம் இயல்பாக பெருவஞ்சுறாவுக்கே உரியது.

பெருஞ்சுறாவின் நீளம், கிட்டத்தட்ட ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் காரின் நீளம். எடை ஏறத்தாழ 2,268 கிலோ. 16 மில்லியன் ஆண்டுகளாக பெருங்கடல்களை பெருஞ்சுறா ஆட்சி செய்கிறது. எனினும், பெருஞ்சுறாவின் வரலாறு இன்னும் மிகப் பழைமையானது என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். காரணம், 18 முதல் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருஞ்சுறாவின் தொல்எச்சங்கள் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT

பெருஞ்சுறா, 25 மில்லியன் முதல் 13 மில்லியன் காலத்துக்கு இடைப்பட்ட மயுசின் (Meocene) காலத்தின் நடுப்பகுதியில் இருந்து வாழ்ந்து வருவதாக சிலர் கருத, வேறு சிலர் ‘அட போங்கப்பா! 58 முதல் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட யோசின் (Eocene) காலத்தில் இருந்தே பெருஞ்சுறா வாழ்கிறது’ என்கிறார்கள்.

பெருஞ்சுறாவின் மேற்பகுதி பழுப்பு கலந்த கரும்பலகை நிறம். சில சுறாக்கள் ஈயச்சாம்பல் நிறம். பெருஞ்சுறாவின் வயிற்றுப்பகுதி அழுக்கு கலந்த வெள்ளை நிறமாக இருக்கும், அதனால் ஆங்கிலத்தில் இதன் அடிவயிற்று நிறத்தையே குறியீடாக வைத்து ‘வெள்ளைச் சுறா‘ என்று பெயர் வைத்துவிட்டார்கள். (இது வெள்ளைச்சுறாவுக்குத் தெரியுமா?)

டார்பிடோ (Torpedo) குண்டு போன்ற உடல்வாகும், வலிமையும், வேகமும், கடுமையும் கொண்டது பெருஞ்சுறா. இதன் முதுகுத் தூவி கடல்மட்டத்தில் ஒரு கத்தியைப் போல நீரைக் கிழித்தபடி முன்னேறி வரக்கூடியது. திறந்தவெளி பெருங்கடல் மீனான பெருஞ்சுறா, 3 ஆயிரத்து 900 அடி ஆழம் வரை சென்றுவரக் கூடியது. கடவுச்சீட்டு, விசா தொல்லைகள் எதுவுமின்றி கண்டம் விட்டு கண்டம், நாடு விட்டு நாடுகளுக்குப் பெருஞ்சுறா செல்லக்கூடியது. 12 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவு வரை மெக்சிகோவில் இருந்து ஹவாய்த் தீவுகளுக்கோ, அல்லது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கோ பயணப்படுவது பெருஞ்சுறாக்களுக்கு ஒரு பெரிய வேலையே இல்லை.

ஒரு சாவிக் கொத்தில் தொங்கும் பலவகை சாவிகளைப் போல, பல்வேறு வகையான வேட்டைத் தந்திரங்களைக் கொண்ட மீன் பெருஞ்சுறா. கடலில் இது நீந்திவரும்போது இதன் உடல் வண்ணம் அருமையான உருமறைப்பாகத் திகழும். எச்சரிக்கை எதுவும் செய்யாமல் எதிரியைத் தாக்கக் கூடிய மீன் இது.
இரை உயிர் கடல் மட்டத்தின் மேல் இருந்தால் கீழிருந்து இரையை நோக்கி மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் மேலேறி, இரையைக் கவ்வியபடியோ அல்லது இரையை மூக்கால் தட்டிவிட்டோ, கடல்மட்டத்தைவிட பத்தடி உயரத்துக்கு மேல் பெருஞ்சுறா பாயக்கூடியது. இது விமானம் ஒன்று கடலில் இருந்து வெளிக்கிளம்புவது மாதிரியான காட்சி. வண்டிச் சக்கரம்போல பெருஞ்சுறா சுழன்று விழவும் செய்யும். அப்போது குழல்விளக்கு போல கடல்நீர் தெறிப்பது கண்கொள்ளா அழகு.

இவ்வளவு பெரிய உடலுடன் பெருஞ்சுறா இறைந்து விழுவது பெரும் வியப்பு என்றால், பெருஞ்சுறாவால் பந்தாடப்பட்ட சூரை, கட்டா, பாரை போன்ற மீன்கள் 80 அடி உயரத்துக்கு மேலே ‘பறந்து’ மீண்டும் கடலில் வந்து விழுவது அதைவிட வியப்பானது. இந்தத் தாக்குதலில் சிக்கி குற்றுயிராக அல்லது செத்து மிதக்கும் மீன்களை எந்தவித பரபரப்பும் இன்றி பெருஞ்சுறா அமைதியாக நீர் மேல் வந்து உணவாக்கும்.

அரைகுறை இருள் சூழ்ந்த புலர் காலைப்பொழுதே பெருஞ்சுறாவுக்குப் பிடித்தமான வேட்டை நேரம். ஆதவன் உதிக்கும் அதிகாலையில் இரு மணி நேரங்கள் பெருஞ்சுறா வேட்டையில் ஈடுபடும்.

சூரை, திருக்கை, ஓங்கல், ஆமை போன்றவற்றுடன், இரை எதுவும் கிடைக்காவிட்டால், இறந்த திமிங்கிலங்களையும் பெருஞ்சுறா உணவாக்கிக் கொள்ளும். திமிங்கிலங்களின் எண்ணெய்க்கொழுப்பு நிறைந்த மேல் உடல் பெருஞ்சுறாவின் விருப்ப உணவு. ஆனால், உயிருள்ள திமிங்கிலங்களை இது தாக்கியதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

அதேவேளையில், தன்னினத்தைச் சேர்ந்த சுறாக்களை கொன்று தின்னும் பழக்கம் பெருஞ்சுறாவுக்கு உண்டு. ஒரே ஆண்டில் 11 டன் எடையுள்ள உணவை பெருஞ்சுறா காலிசெய்துவிடக் கூடியது. ஆனால், வயிறு நிரம்ப இரை தின்றபின் 3 மாத காலத்துக்கு உணவு எதையும் உண்ணாமல் பெருஞ்சுறாவால் தாக்குப் பிடிக்கவும் முடியும்.

பெருஞ்சுறா, மூன்றாயிரம் ரம்பப் பற்கள் கொண்ட ஆபத்தான ஒரு கடல் உயிர். பெருஞ்சுறாவின் அறிவியல் பெயரான Carcharodon Carcharias - கர்சாரோடோன் கர்சாரியஸ் என்பதுகூட ‘கூரிய, ஒழுங்கற்ற ஓரம்வெட்டும் பற்கள் கொண்ட‘ என பெருஞ்சுறாவின் பற்களைப் பற்றித்தான் ரொம்ப பெருமையாகப் பேசுகிறது.

மனிதர்களை அதிகம் தாக்கும் சுறா, பெருஞ்சுறாதான். மனிதர்கள் சுறாக்களின் இயற்கை உணவு இல்லை என்ற நிலையில், கடலில் நீந்தும் மனிதர்களை சும்மா ‘ஒரு காக்கா கடி‘ (Sample bite - சாம்பிள் பைட்) கடித்து சுவை பார்ப்பது பெருஞ்சுறாவின் பழக்கம். ஆனால் பெருஞ்சுறாவின் இந்த சிறிய ‘கடி‘ மனிதர்களுக்குப் பெருங்கடியாக மாறி ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

பெருஞ்சுறாவின் கடி எப்படி இருக்கும்? எளியமுறையில் இதை விளக்கலாம். விலங்குகளின் கடிக்கும் திறனை பிஎஸ்ஐ என்ற அளவு கொண்டு அளப்பார்கள். எடுத்துக்காட்டாக சிங்கத்தின் கடி 800 பிஎஸ்ஐ. புலியின் கடி 1000 பிஎஸ்ஐ. நீர் யானையின் கடி 1825 பிஎஸ்ஐ. ஆனால், பெருஞ்சுறாவின் கடி 4000 பிஎஸ்ஐ(!) (போதுமா?)

பெருஞ்சுறாவைப் பற்றி நிறைய நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். பெருஞ்சுறாவை கடலுயிர் காட்சியகம் எதிலும் வளர்க்க முடியாது. அப்படி வளர்க்க முயன்றால், உணவு எதையும் உண்ணாமல் அடம்பிடித்து, சுவரில் முட்டி மோதி பெருஞ்சுறா தனது உயிரை மாய்த்துக் கொள்ளும்.

சரி! இவ்வளவு பெரிய கடல் ஆளுமையான பெருஞ்சுறாவுக்கும், கடலில் எதிரிகள் உண்டா? உண்டு. அந்த எதிரிக் கூட்டம் பெருஞ்சுறாவைக் கொன்று தின்னவும் கூடியது என்றால் வியக்காமல் என்ன செய்ய முடியும்?

Tags : White Shark
ADVERTISEMENT
ADVERTISEMENT