தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு டூ ஒடிசா: சாலைவழி நடந்துசென்ற தொழிலாளி பலி

19th May 2020 11:38 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: தமிழகத்திலிருந்து ஒடிசாவிலுள்ள சொந்த ஊருக்கு சாலை வழியே நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி, கும்மிடிப்பூண்டி அருகே உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டம் லச்சிபேடா அருகே பூபன்பலி பகுதியை சேர்ந்தவர் சாந்திரஞ்சன் பிஸ்வாஸ் மகன் ராம் பிஸ்வாஸ் (44).

தமிழகத்தில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பொது முடக்க ஊரடங்கின் காரணமாக இவர் வேலை செய்த தொழிற்சாலை பூட்டப்பட்டதால் சென்னையைக் கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திரத்தைக் கடந்து ஒடிசாவிற்கு செல்ல இவர் திட்டமிட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து சில நாள்கள் நடந்து கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையை அடைந்த நிலையில் கவரப்பேட்டை பஜாரில் ஒரு கடை வாசலில் திங்களன்று இரவு இவர் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இவர் இறந்தநிலையில் கிடப்பதைக் கண்ட தூய்மை பணியாளர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜி. நமச்சிவாயத்திற்கு தகவல் தந்தனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் கவரப்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தொடர்ந்து  ராம் பிஸ்வாஸின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காகக் காவல்துறையினர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

இறந்த ராம் பிஸ்வாஸ் சளித் தொல்லையால் அவதிப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அவர் பல நாள்கள் நடந்து வந்த களைப்பு மற்றும் மூச்சு திணறலால் இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி தடத்தில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், கூட்டம்கூட்டமாக, குடும்பம் குடும்பமாக நடந்தும், சைக்கிளிலும் சென்றுகொண்டிருக்கும் சூழலில் வடமாநில தொழிலாளி ஒருவர் இறந்த இச்சம்பவம் கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT