தற்போதைய செய்திகள்

தினமணி செய்தி எதிரொலி: ராமநாதபுரம் சிறுமிக்குக் குவியும் உதவிகள்!

14th May 2020 05:41 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடும்பத்தை உதறிவிட்டுத் தந்தை போய்விட, ஊதியத்தைக் கரோனா பறித்துக்கொள்ள புற்றுநோயாளியான தாயைக் காக்கப் பசியுடன் போராடிக் கொண்டிருக்கும் சிறுமிக்கு தினமணி இணையதளம் - தினமணி செய்தியின் பலனாக ஏராளமானோர் உதவிக் கொண்டிருக்கின்றனர்.

ராமநாதபுரம் நகர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி முத்துவேலாயி. இவர்களுக்கு ஷர்மிளா (17) என்ற மகளும், அபி என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு மகனையும் அழைத்துக்கொண்டு பிரிந்துபோய்விட்டார்.

ADVERTISEMENT

மகள் ஷர்மிளாவுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் முத்துவேலாயி, கூலி வேலை செய்து மகளுடன் அன்றாட பசியை ஆற்றி வந்தார். இந்த நிலையில் முத்துவேலாயிக்கு வாய்ப் புற்றுநோய் வந்ததால் வேலைக்குச் செல்லமுடியவில்லை.

தாயையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள, பிளஸ் 2 முடித்த ஷர்மிளா, பிளாஸ்டிக் பொருள்கள் விற்கும் கடைக்கு, மாதம் ரூ. 4 ஆயிரம் ஊதியத்தில் வேலைக்குச் சென்றார்.

இந்த ஊதியத்தில்  வீட்டு வாடகை, அரசின் குடும்ப அட்டைக்கான அரிசி, தாய்க்கு மருந்து, மாத்திரை என வாங்கிச் சமாளித்துக் கொண்டிருந்த நிலையில், கரோனா ஊரடங்கால் எல்லாமும் போய்விட்டது.

கடந்த இரு மாதங்களாக வேலையின்றி ஷர்மிளா தவிக்க, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையும் தாய்க்கு சிகிச்சை அளிப்பதைக் கைவிட,  தாயை வீட்டுக்கு அழைத்து வந்து, வயிற்றுக்குப் போராடிக்கொண்டே தாயின் நோய் தீர்க்க மருத்துவ உதவி கேட்டு மாவட்ட நிர்வாகத்தின் படியேறிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயக்க நிலையில் அமர்ந்திருந்த ஷர்மிளாவின் நிலை பற்றிய செய்தி, தினமணி இணைய தளத்திலும் (செவ்வாய்க்கிழமை) தினமணியிலும் வெளியானது.

இந்தச் செய்தியைப் பார்த்ததும் ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலர் செந்தில், நேரடியாகச் சென்று சிறுமிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, பருப்பு என உணவுப் பொருள்களையும் வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்பினரும், வெளியூர்களில் இருந்தும் சிறுமி ஷர்மிளாவைத் தொடர்புகொண்டு அவருக்கு பண உதவிகளை அளித்தும், உணவுப் பொருள்கள் வழங்கியும் உதவிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சிறுமிக்கு நிதியளித்து, உணவுப் பொருள்களையும் வழங்கினார். மேலும், சிறுமியின் தாய்க்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை அளிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சார்பில் சிறுமி வீட்டுக்கு வந்து உணவுப் பொருள்களை வழங்கியதுடன், அவருடைய தாயை மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க உதவியுள்ளனர்.

தற்போது சிறுமியின் தாய் முத்துவேலாயி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி சிறுமி ஷர்மிளா கூறுகையில், தினமணி செய்தியின் பலனாக  எனக்கு ஆந்திரம் உள்பட வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் உதவியுள்ளனர். காலத்தால் செய்த இந்த உதவியை வாழ்நாளில் மறக்க மாட்டேன். உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தொடர்ந்து வேலை செய்து எனது தாயைக் காக்கவே விரும்புகிறேன் என்றார். ராமநாதபுரத்தில் புற்றுநோய் பாதித்த தாயுடனும், கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையால் வேலை இழந்தும் போராடிய சிறுமி ஷர்மிளாவுக்கு தினமணி செய்தி எதிரொலியாக ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக உள்ளிட்ட ஏராளமானோர் உதவிவருகின்றனர்.

Tags : cancer mother
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT