தற்போதைய செய்திகள்

'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை'

10th May 2020 06:00 AM | தஞ்சை வெ.கோபாலன்

ADVERTISEMENT

 

“அன்னையர் தினம்”, இது ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் சிறப்பு என்ன? அன்னைக்கு ஏன் இந்த அளவு முக்கியத்துவம், இந்த வினாவுக்கு விடை தெரிய வேண்டாமா?

அன்னையரின் பெருமையை கவி கா.மு. ஷெரிப் ஒரு திரைப்படப் பாடலில் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு கூர்வது நன்றாக இருக்கும். அவர் பாடல்:

“அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள்

ADVERTISEMENT

அடிதொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை.

துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை

சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்.

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தால்

வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழச் செய்தாள்”

இது திரைப்படப் பாடல் என்றாலும் கவிஞர் மிக அழகாக அன்னையரின் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார்.

நம் பண்டைய தமிழிலக்கியங்கள் எல்லாம் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றும், தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்றும் சொல்லிக் கொடுத்திருப்பதை நாம் அறிவோம். சைவக் குரவர்களில் மாணிக்க வாசகர் “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்றும், “தாயில் சிறந்த தயாவான தத்துவனே” என்றும் பாடியிருப்பதை நாம் அறிவோம்.

ஒவ்வோராண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடங்கி வைத்தவர் அன்னா ஜார்விஸ் என்பவர். அன்னையர்களுக்காகப் பெரும் பாடுபட்ட இவர் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நாளை அவரவர் தங்கள் தாயை நினைத்து, அவர்தம் தியாகத்தையும் தங்களுக்காக அந்தத் தாய் செய்த பணிகளையும் கெளரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட வேண்டுமென்று விரும்பியதை அடுத்து “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.

1914 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் விடுத்த அறிவிப்பின்படி ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நம்மைப் பொருத்தவரையில் அன்னையரின் கருணையால் பெருமை பெற்ற பல மகான்களின் வரலாறுகள் உண்டு. அவர்களில் ஒருவர் ஆதிசங்கரர். இவர் இப்போது கேரளத்தில் இருக்கும் காலடி எனும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். இவருடைய பாரம்பரியம், பரம்பரை பரம்பரையாக நாட்டின் எல்லா திசைகளிலும் மடங்களை உருவாக்கிப் பணிபுரிந்து வருகிறார்கள். ஆதி சங்கரர் உருவாக்கிய மடங்கள் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவர் சிவானந்த லகரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி, ஆத்ம போதம், கனகதாரா தோத்திரம், சுப்ரமணிய புஜங்கம் போன்ற பல பக்திப் பனுவல்களை இயற்றிப் புகழ் பெற்ற ஞானி.

ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் இளமையிலேயே பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். குருகுல வாசம் செய்து எல்லா சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். ஒவ்வொரு நாளும் அவர் பிக்ஷை பெற்று வந்து குருவிற்கும் அன்னமளித்துத் தானும் உண்டு வாழ்ந்தார். ஒரு நாள் ஏழை அந்தணர் ஒருவர் இல்லத்து வாயிலில் நின்றுகொண்டு “பவதி பிக்ஷாம் தேகி” என்று குரல் கொடுத்தார். அந்த வீட்டு அம்மையார் இவருக்குக் கொடுக்க எதுவும் இல்லையே என்று வருந்தி, ஏதேனும் பொருள் கிடைக்காதா என்று தன் குடிசையெங்கும் தேடி அலைந்தார். அப்போது உலர்ந்துபோன நெல்லிக்கனியொன்று அவர் இல்லத்தில் இருந்தது. அதைக் கொண்டு போய் சங்கரருக்கு பிக்ஷையாக வழங்கினார். அந்தக் கனியைப் பெற்றுக் கொண்ட சங்கரருக்கு அந்த அன்னையின்பால் இரக்கம் உண்டானது. அவர் வறுமையின் பிடியில் சிக்குண்டு வருந்துவது புரிந்தது. தான் வறுமையில் வாடினாலும் பிறர்க்குக் கொடுக்கும் மனம் கொண்டவராதலினால் இவரிடம் செல்வம் இருந்தால் ஊருக்கு நன்மை என்று கருதி, லட்சுமி தேவியை மனதில் கொணர்ந்து “கனகதாரா ஸ்தோத்திரம்” பாடத் தொடங்கினார். அவர் பாடிக் கொண்டிருக்கும்போதே அந்த அம்மையாரின் குடிசையில் கனகம் என்கிற தங்கம் மழையாகப் பொழிந்தது. கனக தாரை, தங்க மழை பொழிந்த அந்த அதிசயத்தை ஆதி சங்கரர் அந்த அன்னையின்பால் கொண்ட பக்தியால் நிகழ்த்திக் காட்டினார்.

சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள், நீராடுவதறாக தினமும் அவர் இல்லத்திற்கு வெகு தொலைவிலுள்ள பூர்ணா நதிக்குச் சென்று வருவார்.  அவர் துன்பத்தைப் போக்க சங்கரர் அம்பிகையைத் துதித்துப் பாட, அந்த நதி தன் பாதையை மாற்றிக் கொண்டு ஆர்யாம்பாள் இல்லத்தையொட்டி ஓட ஆரம்பித்தது.

சங்கரருக்குச் சிறு வயதுமுதல் துறவறம் பூண ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவர் அன்னை ஆர்யாம்பாள் தன் மகன் துறவு பூணுவதை விரும்பவில்லை, மறுத்து வந்தார். ஒரு நாள் ஆர்யாம்பாள் மகன் சங்கரருடன் பூர்ணா நதியில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முதலை சங்கரருடைய காலைப் பற்றிக் கொண்டது. ஆர்யாம்பாள் இந்தக் காட்சியைக் கண்டு அலறித் துடித்தாள். இறைவனிடம் தன் மகனைக் காப்பாற்ற வேண்டி கதறினாள். அப்போது சங்கரர் தன் அன்னையிடம் சொன்னார், இந்த முதலை நான் உங்கள் மகன் என்பதால் பிடித்துக் கொண்டிருக்கிறது, நான் துறவறம் பூண்டுவிட்டால் நம் அன்னை, பிள்ளை உறவு இல்லாமல் போய்விடும், ஆகையால் தாங்கள் நான் துறவு பூணுவதற்கு சம்மதம் கொடுத்தால், முதலை என் காலை விட்டுவிடும் என்றார். வேறு வழியின்றி அன்னை ஆர்யாம்பாள் தன் செல்வ மகன் சங்கரர் சந்நியாசம் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தார். முதலையும் சங்கரரின் காலை விட்டுவிட்டது.

துறவறம் பூண்ட சங்கரர் தன் தாயை வணங்கிவிட்டு, இல்லத்துக்குத் திரும்பாமல் தாயை உறவினர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு தேசாந்தரம் செல்லப் புறப்பட்டார். அப்போது வருந்திக் கலங்கி நின்ற தாயிடம் விடைபெற்றுச் செல்ல நின்றபோது, அன்னை சொன்னாள், “குமாரா, இப்போது நீ தேசாந்தரம் சென்றாலும், என்னுடைய இறுதிக் காலத்தில் நீயே வந்து எனக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். சங்கரர் அன்னையின் ஆணையை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

காலடியிலிருந்து புறப்பட்ட சங்கரர் பல தலங்களையும் சுற்றிப் பார்த்து தரிசனம் செய்து கொண்டு நர்மதை நதிக்கரைக்குச் சென்றார். அங்கு ஓர் குகையில் கோவிந்தபாதர் எனும் ஞானி தவமிருந்தார். அவரிடம் ஆசி பெற்று சங்கரர் காசி நகருக்குச் சென்று கங்கா நதிக்கரையில் தங்கினார். அங்கு அவரிடம் வேத, உபநிடதங்களைக் கற்க பல சீடர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் இவருடைய முதல் சீடராகக் கருதக் கூடியவர் பத்மபாதர் என்பவர். சங்கரர் இப்படி நாடு முழுவதும் சஞ்சாரம் செய்து பற்பல தலங்களையும், பற்பல மகான்களையும் சந்தித்துக் கொண்டு துங்கபத்திரை நதிக்கரையில் ஓர் இடத்தின் புனிதம் அறிந்து அங்கு சிருங்கேரி மடத்தை உருவாக்கி, தங்கியிருக்கும் போது அவருக்குத் தன் தாயின் நினைவு வந்தது.

மோனத்தில் இருந்த சங்கரருக்குத் தன் தாயின் உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்தார். உடனே சீடர்களிடம் விடைபெற்றுக் கொண்டு காலடிக்குச் சென்று தாயைக் கண்டு வணங்கினார். அங்கு மகனைக் கண்ட மனத் திருப்தியோடு அந்த அம்மையாரின் ஆவி பிரிந்தது. அங்கு தாய்க்குச் செய்ய வேண்டிய அனைத்துச் சடங்குகளையும் சங்கரர் செய்துவிட்டுப் புறப்பட்டார். துறவிகளுக்கு தாங்கள் துறவு பூண்ட பிறகு பிறப்பினால் உண்டான உறவுகள் அற்றுப் போகும். என்றாலும் தாயின் வேண்டுகோள், சங்கரருக்குத்  தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அன்னையின் பெருமையை உலகுக்கு அளித்தவர்களில் ஆதிசங்கரரும் ஒருவர்.

புராண காலத்திலும், வரலாற்றின் முந்தைய காலங்களிலும் தாய் பிள்ளை பாசம் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருப்பதை எல்லாம் நாம் அறிவோம். நம் காலத்தில் அப்படிப்பட்ட பாசப் பிணைப்புகளைச் சந்தித்திருக்கிறோமா என்கிற சந்தேகம் வரலாம். இத்தகைய தாய்ப்பாசம் புராணகாலம் மட்டுமல்ல, நம் காலத்திலும் உண்டு, அதற்கான பல நிகழ்ச்சிகளையும் சுட்டிக் காட்ட முடியும்.

தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் நடந்த போதும் சரி, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை ஆளும்போதும் சரி தன்னுடைய தனித்துவமான குணங்களை வெளிக்கொணர்ந்தவர் காமராஜர்.

இவருடைய நடவடிக்கைகளில் இருந்து இவர் தன் குடும்பத்தினர் மீது எத்துணை பற்றும் பாசமும் வைத்திருந்தார் என்பதை அறிந்துகொள்ளும் படியாக இருந்ததில்லை. பலாப்பழம் போல் மேலே முள்ளும், முரட்டுத் தனமும் இருந்தாலும், உள்ளே இனிப்புச் சுளை இருப்பது போல அந்த பற்றுகளைத் துறந்த துறவி போன்ற அரசியல்வாதியாக விளங்கியவர் காமராஜ். இவர் இளம் வயதினை தேச விடுதலைப் போராட்டத்தில் கழித்துவிட்டதால் ஒரு தவ வாழ்க்கையையே மேற்கொண்டார். திருமணம் செய்துகொள்ள வேண்டிய வயதில் இவர் போர்க்களத்தில் தேச விடுதலைக்குக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். திருமணம் இல்லாமல் இவர் பிரம்மச்சாரியாகவே வயது முதிர்ந்து அரசியலில் தலைமை வகித்து வந்தார். இத்தனை பணிகளுக்கிடையிலும் இவருடைய தாய் தனிமையில் இவருடைய சொந்த ஊரில் வாழ்ந்து வந்தார். தனயன் அரசாங்கத்தில் பெரிய பதவிகளை வகித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக எந்த சலுகைகளையும் அவர் எதிர்பார்க்கவும் இல்லை, அப்படி சிலர் இவரிடம் உள்ள மரியாதையினால் செய்ய விரும்பிய உதவிகளையும் இவர் மகன் ஏற்றுக் கொள்ளவில்லை. துறவு என்பது தோற்றத்தில் மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் உள்ளத்தால் கொள்வது துறவு என்பதை உலகுக்கு உணர்த்தியவர் காமராஜர்.

இவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சமயம். விருதுநகரில் வசித்து வந்த தன் தாய் சிவகாமி அம்மையாருக்காக ஒவ்வொரு மாதமும் இவர் நூற்றி இருபது ரூபாய் தன் ஊதியத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரை மரியாதைக்காக வந்து பார்ப்போர் பட்டியல் அதிகம். அவர்களையெல்லாம் மரியாதை செய்ய ஏதேனும் குளிர் பானங்களை வாங்கிக் கொடுக்கவே அந்தப் பணம் செலவாகிவிடும். அதனால் தனயன் அனுப்பும் பணம் ரூ. 120 போதவில்லை. அதை ரூ. 150ஆக அனுப்பினால் நல்லது என்று மகனுக்குத் தகவல் அனுப்புகிறார் அன்னை சிவகாமி.

தாயைப் பார்க்க வருபவர்கள் வந்துவிட்டுப் போகட்டுமே, அப்படி வருபவர்களுக்கெல்லாம் பானங்கள் கொடுத்து உபசரிப்பதற்கு என்ன அவசியம். தேவையில்லை என்று தாய்க்கு தான் அனுப்பும் ரூ. 120-ஐ அதிகப்படுத்திக் கொடுக்க மறுத்தவர் காமராஜர். தான் வகித்த பதவிக்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த போதிலும், இவர் விருதுநகருக்குச் செல்லும் போதெல்லாம் தன் தாயிடம் கேட்கும் முதல் கேள்வி “நல்லாயிருக்கிறாயா?” என்பதுதான். இப்படிப்பட்ட உறவுகளை, பாசப் பிணைப்புகளைத் தன் நாடி நரம்புகளில் எல்லாம் கொண்ட நாடு நம் பாரத நாடு.

ஆதி சங்கரர் போல துறவியானாலும் தாயிடம் கொண்ட பக்தி, அரசியலில் நாட்டை ஆள்பவராக இருந்தபோதிலும் தாயை மறக்காமல் இருந்த காமராஜ் போன்ற தாய் மகன் உறவினைப் போற்றும் நாள், இந்த “அன்னையர் தினம்”. கண்களுக்குத் தெரியாத இந்தப் பாசம் தான் நம்மை இன்னமும் ஓர் உன்னத நிலைமையில் வைத்திருக்கிறது.

[கட்டுரையாளர் - இயக்குநர்,

பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.]

Tags : mothers day
ADVERTISEMENT
ADVERTISEMENT