தற்போதைய செய்திகள்

கரோனாவுக்குப் பிந்தைய உலகிற்கு காந்தியத் தீர்வு

10th May 2020 10:00 AM | டாக்டர் வெ. ஜீவானந்தம்

ADVERTISEMENT

 

சாரம் :

கரோனா தொற்று உலகினைப் புரட்டிப் போட்டுள்ளது. பழைய கரோனாவுக்கு முந்தைய சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள் எல்லாமும் பொய்யாகியுள்ளன.

வலிமை, வல்லரசு, நல்லரசு, ஆயுதம், பொருளாதாரம், வளர்ச்சி, முன்னேற்றம், நகரமயம், தன்னிறைவு கிராமம், வாழ்வுமுறை மாற்றம், மருத்துவம், உணவு, உலகமயம், மக்களுக்கான அரசு, அரசியல் என அனைத்தையும் புதிய வெளிச்சத்தில் காணச் செய்துள்ளது கரோனா.

ADVERTISEMENT

கரோனாவுக்குப் பிந்தைய புதிய உலகை வடிவமைப்பதில் ஒட்டுமொத்த உலகிற்கே காந்தியம்தான் மிகப் பெரும் பங்களிக்க முடியும்.

கரோனா வைரஸ் தொற்று எனும் மருத்துவப் பேரழிவு

2019 டிசம்பர் 8 அன்று கரோனா எனும் வைரஸ் தாக்குதல் சீனாவின் வூஹான் மாநிலத்தில் உண்டாகியுள்ளது என்ற செய்தி வெளியானது. ஆனால், 21-ம் தேதி வரை அதை மற்றுமொரு வைரஸ் தாக்குதல் என்று சீன அரசு அலட்சியப்படுத்தியது தவறு என்பது நோயின் உலகளாவிய பரவல் மூலம் பேராபத்து என்பது உணரப்பட்டது. 2020 ஜனவரி 18-ல் உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்தது. 30-1-2020-ல் இந்தியாவில் கேரளத்தில் முதல் பாதிப்பு அறியப்பட்டது.

வைரஸ் தாக்குதல் எனும் எச்சரிக்கையை இயற்கை தொடர்ந்து டெங்கு, ஃப்ளூ, எச்என்1, சிக்குன்குனியா எனப் பல எச்சரிக்கைகளைத் தந்தபோதும், நாம் அவற்றை அலட்சியம் செய்து நமது பேராசைப் பயணத்தைத் தொடர்ந்தோம். புலி வருது, புலி வருது என்று விளையாடியவன் கதையானது நமது கதை. முந்தைய வைரஸ்கள் எல்லாம்  வளர்ச்சியடையாத பின்தங்கிய, ஏழை நாடுகளின் ஏழை மக்களைத் தாக்கின. அவற்றை எனக்கில்லை என்று வளர்ச்சி பெற்ற அறிவியல் வல்லரசுகள் அலட்சியமாகக் கடந்து சென்றன, அவற்றையும் காசக்கிக் கொண்டன.

வூஹானில் துவங்கிய கரோனா புதிய சீன வல்லரசை அதிர்ச்சியுறச் செய்தது. பின் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் என்று உலக வல்லரசுகளைக் குறி வைத்துப் பரவியபோது அனைவரும் பேரதிர்வை உணர்ந்தனர். கடைசியில் உலகின் முதன்மை வல்லரசான அமெரிக்கா தாக்குதலுக்குள்ளானதற்குப்  பின்னர் உலகம் நிலைகுலையத் துவங்கியது. அலட்சியப்படுத்திய ட்ரம்பின் ஆணவ மனநிலையால் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் முன் மண்டியிட நேர்ந்தது.

கிறிஸ்துவுக்கு முன், பின் எனப் பிரிக்கப்பட்ட காலம், இனி கரோனாவுக்கு முன், பின் எனப்  பிரித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. முன்பிருந்த சமூக அளவுகோல்கள், மதிப்பீடுகள், வாழ்வுமுறை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டது கரோனா. இனி பழைய நம்பிக்கைகள், வாழ்வு முறை எதுவும் பயன்படாது என்றானது. கரோனாவுக்குப் பின் உலகின் புதிய வாழ்வுமுறைக்கான துருவ நட்சத்திரமான நாம் புறக்கணித்த காந்திய வாழ்வு முறையே வழிகாட்டுவதாகியுள்ளது.

கரோனாவுக்குப் பிந்தைய மாற்றங்கள்

ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, உடல் பாதுகாப்புக் கவசம், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் எனத் தீண்டாமை இப்போது உலகப் பொது நீதியாகியுள்ளது. தீண்டாதே என்று தடுத்தவனைத் தீண்டாதே என்று விலக்கிவைத்துள்ளது. ஒவ்வொரு அண்டை வீடும் தீண்டாததாக விலக்கப்படுகிறது.

தூங்காத நகரங்கள், பகலிலும் தூங்கிக் கிடக்கின்றன. பட்டணம்தான்  போகாலாமடி என்று நகர்மயம் தேடி ஓடியவர்கள் சீச்சி புளிக்கிறது எனக்  கிராமம் நோக்கி நடந்தே திரும்புகின்றனர். மக்களுக்கு வாழ்வளிக்கும் என்று நம்பிச் சென்ற நகரங்கள் அவர்களை அகதிகளாக்கி விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றன.

எல்லா நோய்க்கும் எம்மிடம் மருந்துண்டு எனப் பணத்தைக் கறந்த நட்சத்திர மருத்துவமனைகள், தங்களிடம் மருந்தில்லை என்று விரட்டிப் பதுங்கு குழியில் மறைகின்றன. ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களுமே மூலைக் கல்லாக மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பச்சை அட்டைக் கனவுடன் பறந்துசென்றவர்கள், அநாதைகளாகச் சாகப் போகிறோமே என்ற பயத்தில் நடைப்பிணமாக உலவுகின்றனர். மைதாஸ் கதை நிஜமாகிறது. உலகமய பலூன் உடைந்து வூஹான் சிறகடிப்பில் வாஷிங்டன் அதிர்கிறது. ஆயுதமே பலம் என அணுகுண்டுகளை அடுக்கியவர்கள்,  கியூபாவிடமும் வியத்நாமிடமும் இந்தியாவிடமும் குளோரோகுயினுக்காக் கையேந்தி நிற்கிறார்கள். பர்கரும், கேஎப்சியும் மெக்டொனால்டும், கசந்து போய் இடலியும், கஞ்சியும் போதுமென அடங்குகிறது இளைய தலைமுறை.

நாற்கரச் சாலைகளில் மாடுகள் ஓய்வெடுக்கின்றன. ரிசார்ட்டுகளில் யானைகளும் காட்டெருமைகளும், சிறுத்தைகளும் குடிபுகுகின்றன. காருக்கும் பெட்ரோலுக்கும் செலவில்லை. காற்றில் கரிச்சுமை குறைந்து இமயமலைகூட எளிதில் தெரிகிறது. ஆறுகள் பளிங்காக ஓடுகின்றன. பறவைக் குஞ்சுகளின் முனகல்கூடத் தெளிவாகக் கேட்கிறது. கிரேட்டா கோபம் தணிந்து புன்னகைக்கிறாள்.

வெல்ல முடியாத வல்லரசுகள் மண்டியிட்டு யாசிக்கின்றன. ஆயுதக் குவியல்கள் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் முன் பயனற்ற சுமையாகி விட்டன. ஒழிப்பேன் என்ற வல்லரசுகளுக்கு நல்லரசுகள் மருந்தும் உணவும் தந்து ஆறுதல் கூறுகின்றன. தம்மில் பெரியாரை வியத்தலுமிலமே, நம்மில் சிறியரை இகழ்தல் அதனினும் இலமே என்ற தமிழறம் புத்துயிர் பெற்றுச் சிரிக்கிறது. மனிதாபிமானம் எங்கும் துளிர்க்கிறது.

கோவில்களும் தேவாலயங்களும் மசூதிகளும் பூட்டப்பட்டு நாதன் உள் எனும் தத்துவம் மெய்யாகிறது. சரீர சுகமளித்த கார்ப்பரேட் சுவாமிஜிகள், ஜீவ சமாதியடைந்து விட்டிருக்க வேண்டும்.

சினிமா இன்றி, மால்களின்றி, சீரியலின்றி, டேட்டிங் இன்றியும் வாழ முடியுமென்பது புரிகிறது. வாழ்க்கை முறை மாற்றம்தான் உலகம் இனியும் வாழ்வதற்கான ஒரே வழி என்பது புரிகிறது. காந்தியின் தற்சார்பு, எளிமைப் பொருளாதார வாழ்வுதான் இனி மானுடத்தை வாழ்விக்கும் என்பதை விருப்பமின்றியும் உண்மையென உணர்கிறோம்.

காந்தியம் மாற்று தர முடியுமா?

சோசலிச முகாமின் தலைமையாக இருந்த சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் எதிர் எதிர் முகாம்கள் கொண்ட இரட்டை தத்துவ முகாம்களின் காலம் முடிந்துபோனது. முதலாளித்துவ முகாம் எதிர்ப்பேதுமற்ற  ஒருமுக உலகமாகிப் போனது. சோவியத் யூனியனின் சரிவுடன் உலகின் பிற சோசலிச நாடுகளும் காணாமல் போயின. சோவியத் தலைமையிலான மார்க்சியப் பரிசோதனை தோல்வி கண்டது.

சோவியத் வீழ்ச்சியுடன் உலகின் சோசலிசக் கனவு நிர்மூலமானது. உலகமயம் எனும் ஆயுதத்துடன் உலகின் முழுமையையும் பேராசை ஏகாதிபத்தியத்தின் காலடியில் கொண்டு வந்தது. உலக நாடுகளுக்கு உலகமயத்தை ஏற்பது தவிர வேறு வழியேதுமின்றிப் போனது. சீனாவில் போட்டி போட்டுக்கொண்டு உலக வணிக அமைப்புகள்  நுழைந்தன. இந்தியாவில் மன்மோகன் சிங் அரசு மேற்கொண்ட அதே முயற்சி, ஜனநாயகத்தின் பெயரால் இடதுசாரிகளால் தோற்கடிக்கப்பட்டது. முதலாளித்துவ அறிவியல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்ட சீனா, 1990 முதல் பாய்ச்சல் தொழில்நுட்பப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்று அமெரிக்கச் சந்தையைத் தன்வசமாக்கும் முதன்மைப்  பொருளாதார வல்லரசானது. அதன் வல்லரசுப் பேராசை தன்னை முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை வெல்லும் முதலாளித்துவ சோசலிச ஏகாதிபத்தியமாக்கிக் கொள்ளும் பேராசையாக வடிவெடுத்தது.

இந்தப் பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் கரோனா எனும் விபத்து நேர்ந்துள்ளது. அது சீனா தனது மேலாதிக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக உருவாக்கிய நுண்ணுயிரிப் போர் (BIOLOGICAL WAR - பயலாஜிகல் வார்]  எனும் கருத்து உள்ளது. கரோனா இயற்கையின் விபத்தில் உண்டானதா அல்லது உண்டாக்கப்பட்டதா என்ற கேள்வி விடை காண முடியாத புதிராகவே தொடரும்.

ஆனால், கரோனாவின் மருத்துவப் பேரழிவுகள் காலப் போக்கில் மருத்துவக் குறுக்கீடுகளால் பலவீனமடைந்து போகலாம். வெற்றி காணவும்படலாம்.  ஆனால் கரோனா உண்டாக்கும் பொருளாதார மனித ஆற்றல் பாதிப்புகள் சீனாவுள்பட உலக நாடுகள் முழுவதையும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு ஆட்டிப் படைக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை நிலை.

அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் தமது பேராசைமிக்க வணிக ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள முயலுமா அல்லது இயற்கை தந்த பாடத்தை ஏற்றுத் தன்னை மாற்றிக் கொள்ள முயலுமா?

புத்தனின் வழிவந்த இந்தியா இவை இரண்டுக்குமிடையிலான நடுநிலைப் பாதையை உலகுக்குத் தருமா? நேரு உருவாக்கிய ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை இணைத்த அணி சாரா நாடுகளின் கூட்டமைப்பை மீட்டுருவாக்கி இந்திய அரசு முன் கை எடுக்குமா?

இவற்றுக்கான நம்பிக்கை தரும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.

இயற்கைநேய வாழ்வு – இயற்கை விவசாயம்

இயற்கை மனிதனின் தேவைக்கான அனைத்தையும் தரும். ஆனால் எந்த ஒரு மனிதனின் பேராசையையும் ஈடு செய்ய அதனிடம் எதுவுமில்லை – என்பதை உணரத் துவங்கியுள்ளோம்.

சோவியத் வீழ்ந்து முப்பதாண்டுகளில் டிராக்டரின்றி, டீசலின்றி,  ரசாயனங்களின்றி, மாடுகளின், குதிரைகளின் சாணம், குப்பைகளைக் கொண்டு வாழ முடியும் என்று குட்டி நாடு கியூபா சொன்னதைக் கேட்க மறுத்தோம்.

விமானமின்றி, ரயிலின்றி, டாலரின்றி, மெக்டோனால்டின்றி, பர்கரின்றி வாழ முடியும் என்பதையும் கரோனா உணர்த்தியுள்ளது.

கரிக்காற்றுச் சுமை குறைந்து காற்று உயிர் பெற்றுள்ளது. நோய் குறைந்துள்ளது. மருந்தின்றியும் மருத்துவரின்றியும் வாழ முடிகிறது. டீசலும், டிராக்டரும் ரசாயனங்களும் மண்ணைத் துளையிட்டு காற்றைக் கரியாக்கும் விஷத்தால் இயங்குவன. அவையின்றி விளைவிக்கக் கூடிய வாய்ப்புள்ள வீட்டுக் காய்கறித் தோட்டம் பணத்தை மிச்சம் செய்து தரும். பணம் மிச்சத்துடன் ஆரோக்கிய உணவு,  சிக்கன வாழ்வு, உழைப்பின் மகிமை, உறவின் தேவை உணர்த்தும் புதிய இயற்கை வாழ்வு துவக்குவோம்.

போரற்ற சமத்துவ, சமாதான உலகுக்கான காந்திய வழிகாட்டல்

உலகமய பொருளாதாரத்திற்கு மாற்றான உள்ளூர்மய பொருளாதாரமே இன்றைய தேவை. 

உலகப் பொருளாதாரம், மூலப் பொருள் மிகை உற்பத்தி, உலகச்சந்தை, இயற்கை வளச் சுரண்டல், மாசுபடல் சார்ந்ததாகவே இருக்க முடியும் என்பதை இதுவரையான உலகமய வளர்ச்சிப் போக்கு காட்டியுள்ளது. இதன் விளைவாகவே பூமி சூடாதல், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், கரோனா போன்ற புதிய புதிய பேரழிவுகள் தொடர்கின்றன. ஏதேனும் ஒருநிலையில், பணம் வெறும் காகிதம், பொன் மற்றுமோர் உலோகமே என்பதை கரோனா உணர்த்தியுள்ளது.

உலகமய பொருளாதாரத்திற்கு மாற்றாக உள்ளூர்மயம், தன்னிறைவு கிராமப் பொருளாதாரத்தை காந்தியும் குமரப்பாவும் முன்வைத்தனர். விரைவான பெருவளர்ச்சி, இயந்திரமயம், இயற்கையைக் கண்மூடித்தனமான சுரண்டலுக்குள்ளாக்கி ஈடு செய்ய முடியாத, மீட்க முடியாத வளம் அழிக்கும் வளர்ச்சியையும் கிராமங்களை அழித்துப் புலம் பெயரச் செய்து நகர்மயமாக்கலை வளர்த்தோம்.  நகரங்கள் புலம் பெயர்ந்த உழைக்கும் மக்களை ஆரோக்கியமற்ற வாழ்வுச் சூழலில் குடிசைப் பகுதிகளில் அரைப்பட்டினியில் வாடச் செய்து விரட்டின.

கரோனாவிற்குப் பின் நகரங்கள் தமக்கு வாழ்வளிக்காது என்பதை உணர்ந்த பட்டினிப் பட்டாளம் மீண்டும் கிராமங்களை நோக்கி நெடும்பயணத்தை மேற்கொண்டது. இனி இவர்கள் நகரங்களை நம்பிச்செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதைப் பட்டினிப் பட்டாளங்களும் நேரடியாக உணர்ந்துள்ளன.

கிராமங்களை இனித் தொழில்நுட்ப அறிவு பெற்ற, அந்தத் தொழிலாளர்களைக் கொண்டு நவீன வாழ்வுக்கான சிறு இயந்திர உற்பத்தி மூலமாக நகரங்களின் பெருந்தொழில்களின் தேவைக்கான மூலப்பொருள்களைத் தயார் செய்யும் நவீன கைவினை மையங்களாக்க வேண்டும், விவசாயிகளுக்கு நிலம் உடைமையாகும் வண்ணம் உண்மையான நிலப்பகிர்வு நடைபெற வேண்டும். நகரங்களுக்கு உணவிட்டு, வாழ்விக்கும் அட்சய பாத்திரங்களாகக் கிராமங்கள் மாற்றப்பட வேண்டும். ஆரோக்கியமான சூழல் கொண்ட வாழ்விடம், அடிப்படை வாழ்வுத் தேவைகளைத் தரும் மகிழ்ச்சிமிக்க தன்னிறைவு கிராமம், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புறாவாகச் சிறகடிக்கச் செய்ய வேண்டும். இந்தியா அதன் வளமான கிராமங்களில் வாழ்கிறது என்ற காந்தி மகானின் தன்னிறைவு கிராமச் சுயராஜ்யத்தை உருவாக்க வேண்டும்.

ராணுவம், ஆயுதம், போர் மறுக்கும் சமூக ராணுவம்

இது ஒன்றும் நடக்க முடியாத ராமராஜ்யக் கனவல்ல. ஸ்காண்டிநேவிய நாடுகள் ராணுவமற்ற நாடுகளாக மகிழ்ச்சிக் குறியீட்டின் உச்சியில் வாழ்வதை நாமும் செயலாக்க முடியும். பகை மூட்டி விடும் ஏகாதிபத்தியக் குள்ள நரிகள் நம்மைப் பகையாக்கி ரத்தம் குடித்துக் கொழுத்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொண்டால் நாமும் மகிழ்ச்சி குறியீட்டு ஏணியில் விரைவாக ஏறிவிட முடியும்.

காந்தி விரும்பிய வழியில் ராணுவச் செலவைப் பாதியாகக் குறைப்பது, ஆயுதக் குவிப்பைத் தவிர்ப்பது, ராணுவத்தை சமூக நாட்டு முன்னேற்ற ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவது. அதற்கு உள்நாட்டிலும் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் பகைக்கும் போருக்கும் பதிலாக நட்பு, நம்பிக்கை, பகிர்வு, வணிக உறவுகளை வளர்க்க முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆயுத வணிகர்களின் ஊழல் ஆசை வளர்ப்புக்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பலியாகிவிடக் கூடாது.

கிராமத் தேவைக்கான கல்வி

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே விடுதலை இந்தியாவுக்கான கல்வி பற்றிச் சிந்தித்து "நயி தாலிம்” எனும் புதுமைக் கல்வியை நாடு முழுவதும் உருவாக்கினார் காந்தி. ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இயங்கி வந்த பள்ளிகள் மூலம் சாதாரணக் குழந்தை தனது தேவை,  குடும்பத்தின் தேவை, கிராமத்தின் தேவைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு தற்சார்புடன் கூடிய தொழிற்கல்வியை அதன் ஒரு பகுதியாகக் கற்பித்தார். ஆனால் விடுதலைக்குப் பின் அவை படிப்படியாக மரணத்தைத் தழுவி மறைந்துபோயின.

நகரம் சார்ந்த டாக்டர், பொறியாளர், வெளிநாடு பறப்போருக்கான ஆங்கிலவழிக் கல்வி மோகம் வளர்க்கப்பட்டது. இந்த மோகக் கல்வியால் பயன் பெறுவோர் வெறும் 5 விழுக்காடே. மீதமுள்ள 95 விழுக்காட்டினர் தோல்வியாலும் விரக்தியாலும் தடம் மாறிப் போகின்றனர்.

உடல், அறிவு, உழைப்பை நம்பி வாழ்வின் தேவைகளை ஈடு செய்யும் தொழிற்கல்வியின் மூலம் பெரும்பான்மை கிராம இளைஞர்கள் கிராமங்களில் தமது தொழில்களை நவீனப்படுத்திக் கொண்டு கிராமம் தன்னிறைவு பெறவும் நகரப் பெருந்தொழில்களுக்கான உதிரிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோராக மாற முடியும்,

அரசின் கைகளிலேயே உயர் கல்வி உள்ளதால் கிராமப்புறங்களில் சேவை செய்ய முன்வரும்  மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியை இலவசமாகத் தந்துவிட முடியும். எனவே, காந்தியின் நயிதாலிம் கல்வியை 21-ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப வடிவமைத்துத் துவக்குவதை அரசு தன் கடமையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.

உணவு, மருந்து, மருத்துவம்

ஸ்டீராய்ட் கோழியும், இறைச்சியும், குப்பை உணவும் எத்தகைய கேடு என்பது புரிகிறது. காய், கனி உணவு எத்தனை மலிவானது ஆரோக்கியமானது என்பதை அறிவோம்.

உலகையே அச்சுறுத்தும் கரோனாவைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தில்லை என்கிறது வலிமைமிக்க அலோபதி மருத்துவம். காந்தி சொன்ன சமூகத்தூய்மை, நீயும் ஒரு துப்புரவுத் தொழிலாளியாகு என்ற கட்டளை, நடைப்பயிற்சி, விரதம், மெளனம், உழைப்பு, மதுவிலக்கல், புகை மறுத்தல், நீர் மருத்துவம், மண் குளியல், உணவே மருந்து என... அவர் காட்டிய அனைத்தும் பயனுள்ளவை என்பதை ஊரடங்கு காலம் உணர்த்தியுள்ளது. பின்னும் காந்தியின் வீட்டு மருத்துவத்தைத் தொடர்வோம்.

காந்தி நவீன மருத்துவத்தின் எதிரியல்ல. அதன் வணிகத் தன்மையையே எதிர்த்தவர். அலோபதி மருத்துவர்களின் ஆலோசனைகளை மதித்தவர், குடல்வால், மூலம் போன்றவற்றிற்கு அறுவைச் சிகிச்சையையும் செய்து கொண்டவர். எனவே, பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி, மருத்துவம் என்பது எந்த முறை என்பதல்ல எந்தளவிற்கு மனிதாபிமானம் கொண்டது என்பதைக் கொண்டு மக்களை மதிக்கும் ஒருங்கிணைந்த மருத்துவம், வாழ்வு முறை மாற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கரோனா உணர்த்தியுள்ளது. இந்த உணர்வைத் தொடர்வதும் அவற்றை மேம்படுத்துவதும் இனி நமது கடமையாகட்டும்.

காந்தியை மதவாதக் குண்டுகளால் கொல்லலாம். ஆனால் காந்தியம் செத்தும் உயிர்த்தெழும் சீதக்காதியாய் மனிதகுலம் வாழ்விக்க வந்த தத்துவம் என்பதை கரோனா உணர்த்தியுள்ளது.

போர், ஆயுதம், ராணுவம், நிலைத்த பொருளாதாரம், நிறைவான மனம், உணவு, மருந்து, மருத்துவம், விவசாயம், இயற்கை, அகத்தூய்மை, புறத்தூய்மை, அனைத்திற்கும் வழிகாட்டியாக காந்தி இன்றும் வாழ்கிறார், வழிகாட்டுகிறார். கரோனா உலகைப் புரட்டிப் போட்டுள்ளது. நாம் இதுவரை நம்பிய அனைத்தையும் சத்தியசோதனைக்கு உள்படுத்து எனக் கட்டளையிடுகிறார் மகாத்மா.

கரோனாவுக்குப் பின் புதியதோர் உலகம் செய்வோம். நாம் இழப்பதற்கு ஏதுமில்லை. கேடுகளும் அழிவுகளும் தரும் கேடுகெட்ட வாழ்வு முறைகளைத் தவிர. அடைவதற்கோ ஓர் பொன்னுலகம் உள்ளது. மகாத்மா காட்டிய வழியில்,  காட்டும் திசையில் புதிய பயணம் துவக்குவோம்.

[கட்டுரையாளர் - தலைவர்,

தமிழக பசுமை இயக்கம்]

ADVERTISEMENT
ADVERTISEMENT