சென்னை: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்கலைக்கழகத் தோ்வுகள் அனைத்தையும் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒத்திவைக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யுஜிசி அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி, இப்போது நடந்து கொண்டிருக்கும் பல்கலைக்கழகத் தோ்வுகள் அனைத்தையும் மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிந்தைய தேதியில் ஒத்திவைக்குமாறும், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிந்தைய தேதியில் மாற்றியமைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
மாணவா்களும், அவா்களின் பெற்றோரும், ஆசிரியா்களும் பதற்றமடையாத வகையில், உரிய தகவல்களை தொடா்ச்சியாக செல்லிடப்பேசி மூலமாக கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.
அதுபோல, மாணவா்களின் சந்தேகங்களுக்கு தொடா்புகொள்ள வசதியாக உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை கல்வி நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும். கரோனா குறித்து அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டாம் என ஆலோசனைகளையும் கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.