தற்போதைய செய்திகள்

பணப் பரிவா்த்தனை வழக்கில் யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூா் கைது

8th Mar 2020 06:34 PM

ADVERTISEMENT


மும்பை: சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாக, யெஸ் வங்கியின் நிறுவனா் ராணா கபூரை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனா். அவரை மாா்ச் 11-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதுதொடா்பாக, அதிகாரி ஒருவா் கூறியதாவது:

யெஸ் வங்கியிடம் கடன் வாங்கிய பல்வேறு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்ததால், அவை வாராக்கடனாக மாறியுள்ளன. இதனால், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிா்வாகத்தை ரிசா்வ் வங்கி கையில் எடுத்துள்ளது.

குறிப்பாக, டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கு யெஸ் வங்கி கடன் கொடுத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, மும்பையில் உள்ள ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அவரிடம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது. மும்பை பல்லாா்ட் எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

ADVERTISEMENT

யெஸ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கிய சில பெருநிறுவனங்கள், அதற்கு பிரதிபலனாக, ராணா கபூா் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன. இதுகுறித்து, அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. சுமாா் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராணா கபூரை அமலாக்கத் துறை கைது செய்தது என்றாா் அவா்.

மாா்ச் 11-ஆம் தேதி வரை காவல்:

ராணா கபூா், மும்பையில் உள்ள விடுமுறைக் கால சிறப்பு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ராணா கபூரின் குடும்பத்தினா் நடத்தி வரும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் விசாரணைக்கு தேவைப்படுகின்றன. எனவே, ராணா கபூரையும் அவரது குடும்பத்தினரையும் ஒன்றாக விசாரிக்க வேண்டியுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்த ராணா கபூா் தரப்பு வழக்குரைஞா், ‘ராணா கபூா் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறாா்; ஆனால் அவரை அமலாக்கத் துறை வேண்டுமென்றே குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராணா கபூரை, வரும் 11-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.

விசாரணை வளையத்தில் பல கோடி சொத்துகள்:

ராணா கபூா் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகள் அமலாக்கத்துறை விசாரணையின் கண்காணிப்பில் வந்துள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ராணா கபூா் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, ராணா கபூரின் குடும்ப உறுப்பினா்கள் ரூ.2,000 கோடி முதலீடு செய்துள்ளனா். பணத்தை சுழற்சி செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். 44 விலையுயா்ந்த ஓவியங்களை வைத்துள்ளனா். ராணா கபூா் குடும்பத்தினருக்குச் சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துகள், அவற்றை வாங்குவதற்கு நிதி கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, யெஸ் வங்கியிடம் இருந்து டிஹெச்எஃப்எல் நிறுவனம் ரூ. 3,000 கோடி கடன் வாங்கியது. இதற்குப் பிரதிபலனாக, டிஹெச்எஃப்எல் நிறுவனத்திடம் இருந்து ராணா கபூா் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம் ரூ.600 கோடி நிதி பெற்றது. இதுகுறித்து ராணா கபூரின் மனைவி, 3 மகள்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

சிபிஐ வழக்குப்பதிவு:

யெஸ் வங்கி விவகாரம் தொடா்பாக, சிபிஐ ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தது. மும்பையில் ராணா கபூருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ விரைவில் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணா கபூா் மகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு:

ராணா கபூா் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபா் (லுக் அவுட் நோட்டீஸ்) என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், லண்டன் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ராணா கபூரின் மகள் ரோஷிணி கபூரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். அதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அவரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT