தற்போதைய செய்திகள்

சட்டம்ஒழுங்கு சீர்குலைய ஆளுநர் கிரண் பேடி துணைபோகிறார்: புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

27th Jun 2020 04:01 PM

ADVERTISEMENT

புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி துணை போகிறார் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: புதுவையில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து கடலோர கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000 மீனவர்கள் கடலில் 500 படகுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு மூல காரணமே ஆளுநர் கிரண் பேடி தான்.

புதுவையை பொருத்தவரை ஆண்டுதோறும் அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடை கால நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கூட 61 நாள்களுக்கு மீன் பிடி தடைகால நிதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கி வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்க கோப்பு தயாரித்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினோம்.

கரோனா காலத்தில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு, மீனவ ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு நிவாரண நிதி வழங்கக்கூடாது என்ற நோக்கி ஓய்வூதியம் பெறுவோர்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். அரசின் செயல்பாடுகளில் தலையிட அதிகாரம் இல்லை என ஆளுநர் கிரண் பேடிக்கு பல முறை கடிதம் அனுப்பிவிட்டேன். 

ADVERTISEMENT

செனனை உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, அரசின் செயல்பாடுகளில் நேரடியாக தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, முதல்வரும், அமைச்சர்களும் தான் நிர்வாகத்தை நடத்தி உத்தரவுகளை போட வேண்டும், அதற்கு கட்டுப்பட்டு தலைமைச் செயலரும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என அந்த கடிதங்களில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

 மேலும், அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். முக்கியமான கோப்புகளில் அரசுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் அதை குடியரசுத் தலைவரின் கருத்தை கேட்க அனுப்பலாமே தவிர கேள்வி மேல் கேள்வி கேட்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவு போடவும் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

இருப்பினும் நீதிமன்றத் தீர்ப்பை மீறி ஆளுநர் செயல்படுவதால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநருக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீதான தனிப்பட்ட முன்விரோதம், புதுவை அரசு மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து ஆளுநர் செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதுபோல புதுவையில் சட்டம்ஒழுங்கு சீர்குலைய ஆளுநரே காரணமாக இருக்கிறார். மீனவர்கள் நடத்திய போராட்டமே அதற்கு சான்று. புதுவை மக்களுக்கு விரோதமாகவும், மக்களை வஞ்சிக்கும் வகையிலும் ஆளுநர் கிரண் பேடி செயல்படுவதை ஏற்க இயலாது என்றார் முதல்வர் நாராயணசாமி.

Tags : Puducherry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT