தற்போதைய செய்திகள்

புதுதில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு

17th Jun 2020 06:17 PM

ADVERTISEMENT

 

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கப் பொதுக் குழுவில் இன்று (புதன்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில், சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சங்க மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் எம்.சி. பழனிவேல், மாநில துணைத் தலைவர்கள் ஜே.பி. கிருஷ்ணன், கிட்டப்பா ரெட்டி, முருகேசன், மாநிலப் பொருளாளர் கார்த்திகேயன், மாநிலச் செயலர்கள் ஜாகிர்உசேன், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பி. அய்யாக்கண்ணு கூறியது:

ADVERTISEMENT

வாரானாசியில் ஆயிரம் விவசாயிகளை தேர்தலில் பங்கேற்கச் செய்வது என்ற போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் அமித்ஷா, விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும், விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் கடன் வழங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப செலுத்தும் வசதியும் வழங்கப்படும் என்றார். ஆனால், நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, மீண்டும் இதே கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் பயனில்லை. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு புதுதில்லி சென்று மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் அமித்ஷா இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு தனிநபர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். மரபணறு மாற்ற விதைகளை தடை செய்ய வேண்டும். வங்கி கடன் தள்ளுபடியை மத்திய, மாநில அரசுகள் விரைந்து அறிவிக்க வேண்டும். பயிர்க் கடன்களுக்கான ஜப்தி, ஏல நடவடிக்கைகளை கைவிட வேண்டும். 60 வயது பூர்த்தியான விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு, புயல் நிவாரணத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிலுவையை வழங்க வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. நெல்லுக்கு கிலோ ரூ.37.76 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்ல பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவையை சர்க்கரை ஆலைகள் விரைந்து வழங்க வேண்டும். பாசனத்துக்கான ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்து, புதிய பம்ப் செட்டுகள் அமைத்து தர வேண்டும். விவசாய மின் இணைப்புகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT