தற்போதைய செய்திகள்

பானிபூரி, பஞ்சுமிட்டாய், பாதாம் கீர்...   கரோனாவால் காணாமல்போன வட மாநிலத்தவர் குரல்கள்!

14th Jun 2020 12:34 PM | எம். மாரியப்பன்

ADVERTISEMENT


நாமக்கல்: தமிழக வீதிகளில் ஒலித்துவந்த பானிபூரி, பஞ்சுமிட்டாய், பாதாம் கீர்... என்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குரல்கள் யாவும் கரோனாவால் காணாமல்போய்விட்டன.

சொந்த மாநிலத்தில் பிழைப்புக்கு வழியில்லாததால், தெரிந்த கைத் தொழிலை செய்து வாழ்க்கையை நடத்தலாம் என்ற எண்ணத்தில் மனைவி, குழந்தைகளுடன் புலம்பெயர்ந்துவரும் வட மாநிலத் தொழிலாளர்கள்தான் ஏராளம்.

நகரத்தை விட்டு வெளியே சென்றால் வறண்ட காடாகவும் பாலைவனம் போன்றும் காட்சியளிக்கும் பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வறுமையை விரட்டவும், வருவாயை பெருக்கவும் நம்பிக்கையுடன் புறப்பட்டது தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களை நோக்கிதான்.

ஆடையகம், கட்டுமானப் பணி, தொழிற்சாலைகள், கால்நடைப் பண்ணைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்ற வட மாநிலத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கென முகவர்கள் இருந்தாலும், அவர்கள் இங்கு வந்த பின் தனது தந்தை, சகோதரன், நண்பன், உறவினர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் நாடி வந்த பிற மாநில இளைஞர்கள் பலர் உண்டு. அன்றாடம் உழைத்து ஊதியம் பெறுபவர்கள் சிலர் என்றால், தனக்குத் தெரிந்த கைத் தொழிலைச் செய்து தினசரி வருவாய் ஈட்டுவோர் எண்ணிக்கை ஏராளம்.

அந்த வகையில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் அவர்கள் குரல்கேட்காமல் இருந்ததில்லை. பானிபூரி, பாதாம்கீர்,பஞ்சு மிட்டாய், சமோசா விற்பனை நகரப் பகுதிகளில் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளிலும் களை கட்டியது. அந்த வட மாநிலத்தவர்களின் குரல்கள் தற்போது எங்கும் கேட்கவில்லை. கோயில் திருவிழாக்கள் என்றால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் வட மாநிலத்தவர் கடைகளேஅதிகம் நிறைந்திருக்கும். தள்ளுவண்டியை நாள் வாடகைக்குப் பெற்று அதற்கு கொடுத்ததுபோக, ரூ.100, 200–ஐ கொண்டு குறுகிய இடத்தில் தங்கியிருந்து நிம்மதியுடன் வாழ்க்கையை நகர்த்தினர்.

சீனாவில் தோன்றிய கரோனா நோய்த் தொற்று எங்கெங்கோ சுற்றி, இந்தியாவுக்கும் வர நாடு முழுவதும் பொதுமுடக்கம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டதால் பிழைப்புக்கும், உணவுக்கும் வழியின்றிதவித்த அவர்கள் சொந்த ஊர் திரும்பிவிடலாம் என்ற முடிவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிய தொடங்கினர்.

மத்திய, மாநில அரசுகளின் உதவியால், நெல்லை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். என்னதான் பிறந்து, வளர்ந்திருந்தாலும் உழைப்புக்குரிய ஊதியத்தையும், வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தையும் வாரிக்கொடுத்த தமிழகத்தை விட்டுசெல்லும்போது கலங்காத வட மாநிலத்தவர்கள் இல்லை. கரோனா காலம் மறையும்; மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் தெரிந்தது.

இருந்தபோதும் தெருக்களிலும், சாலைகளிலும் உணவுப் பண்டங்களை விற்ற அவர்களின் குரல்கள் மீண்டும் கேட்காதா என்றபடி வீட்டின் வாசலிலும், பால்கனியிலும், மாடியிலும் இருந்து எட்டி எட்டிப் பார்க்கும் ஆவல் குழந்தைகளிடத்தில் மட்டுமல்ல பெரியவர்களிடத்திலும் இருக்கிறது.

Tags : Pani Puri பானிபூரி பஞ்சுமிட்டாய் namakkal வட மாநிலங்கள் northern states panchumitai பாதாம் கீர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT