ஈரோடு: நாளை நடைபெறும் விவசாயிகள் கருப்பு போராட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று ஆதரவு அளிப்பார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா நோய் தொற்றினால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அவசர சட்டங்களை பிறப்பித்து நடைமுறைப்படுத்த துடிக்கும் மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கின்ற சூழ்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறோம் என்று சொல்லி விட்டு விவசாயிகளின் நாடித்துடிப்பான இலவச மின்சாரத்தை நிறுத்த நினைப்பது ஏற்புடையதல்ல. சிறு, குறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடும் நிலையில் இலவச மின்சாரத்தையும் நிறுத்துவது தவறு.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்பதை பெயரளவுக்கு கூறினால் மட்டும் போதாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்கு கொரோனா காலத்தில் மத்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?. கரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகி கொண்டிருக்கும்.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அவசர சட்டங்களுக்கு கவனம் செலுத்துவதை விடுத்து முதலில் மக்களின் உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவினால் தமிழக அரசு விசைத்தறிக்கும், கைத்தறிக்கும் கொடுக்கும் இலவச மின்சாரமும் ரத்தாகும். சிறு விசைத்தறியாளர்கள் அரசாங்கம் கொடுக்கும் இலவச மின்சாரம் மற்றும் சலுகை மின்சாரம் மூலமாக தான் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டி கொண்டிருக்கிறார்கள். இது நீக்கப்பட்டால் விவசாயிகளை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக விசைத்தறியாளர்கள் இருப்பார்கள்.
கைத்தறி இன்றைக்கு உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கான காரணம் இலவச மின்சாரம் தான். இலவச மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நாளை (திங்கட்கிழமை) அறிவித்திருக்கின்ற கருப்புக்கொடி போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமல்லாமல் கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களும் பங்கேற்க வேண்டும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் நலனை காக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.